‘மின்னல் முரளி’ - நமக்கும் ஒரு சூப்பர் ஹீரோ!


முப்பத்தியொரு வயது, இரண்டு வெற்றிப் படங்களின் இயக்குநர் என்பது கொஞ்சம் யோசிக்க வைக்கக்கூடிய தகுதியாக இருக்கலாம் மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படத்தை இயக்க. ஆனால் இந்த இரண்டுடன், Basil Joseph படித்த engineering கல்வியும், சிறிது காலம் பார்த்த Infosys வேலை அனுபவமும் கலவையாக இணைந்து ‘மின்னல் முரளி’யின் இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது என்றே நினைக்க வைக்கிறது.

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறையின் இளம் இயக்குநர், சூப்பர் ஹீரோக்களையே அறிந்திராத தன் பெற்றோரின் தலைமுறைக்கு சூப்பர் ஹீரோக்களை அறிமுகப்படுத்தும் ஆவலில், அந்தத் தலைமுறையின் வாழ்வியலுக்கும் சிந்தனைகளுக்கும் அந்நியப்பட்டுவிடாமல் ஒரு சூப்பர் ஹீரோவை உருவாக்கி அங்கீகரிக்க வைத்ததில் இவை அனைத்தும் பெரும் பங்காற்றியுள்ளன என்றேத் தோன்றுகிறது.

இது Basil Josephன் முதல் படமாக இருந்திருந்தால் கதையையும் ஸ்க்ரிப்ட்டையும் கைமீறி விடாமல் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்தக் கண்ட்ரோல் அவரிடம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே. இந்த சூப்பர் ஹீரோ படத்தை அவர் இன்னும் சில வருடங்கள் கழித்து இயக்கியிருந்தால் இப்போது இருக்கும் அந்தக் குழந்தைத்தனமானக் குதூகலம் ‘மின்னல் முரளி’யில் மிஸ்ஸாகியிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். ‘Perfect conditions for a perfect storm’ என்பது போல் ‘perfect conditions for a super hero film’ என்பதாய் அமைந்துவிட்டது இத்தனையும் சேர்ந்து.

லாக்டவுனால் திரையரங்குகளில் ‘மின்னல் முரளி’யை வெளியிட முடியாமல், சூழ்ந்திருந்த ஏகப்பட்ட அழுத்தங்களால் OTT தளமான Netflixல் வெளியிட மனம் வருந்தி எடுத்த முடிவும் கூட ‘மின்னல் முரளி’க்கு சாதகமாய் அமைந்துவிட்டது. கேரளாவின் (அல்லது இந்தியாவின்) திரையரங்குகளில் மட்டும் திரையிடப்படாமல், உலகெங்கும், திரையரங்குகளுக்குப் போக முடியாத நாடுகளிலும், இல்லங்களின் தொலைக்காட்சித் திரைகளை சென்றடைந்திருக்கிறான் நமது மலையாள சூப்பர் ஹீரோ.

மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படம் என்றபோதும், திரைப்படத்தைப் பார்த்தது தமிழில் என்பதால் இங்கே தமிழில் டப்பிங் செய்துள்ள தரத்தைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மலையாளத்திற்கும் தமிழிற்கும் உள்ள ஓசை ஒற்றுமைகள் டப்பிங்கிற்கு ஏதுவாய் இருந்தாலும், தமிழில் எழுதப்படும் வசனங்களும் வார்த்தைப் பிரயோகங்களும் பிசகாமல் இருந்தாலொழிய, கேட்கும் வார்த்தைகளுக்கும் அசைக்கும் வாய்க்கும் சம்பந்தம் இன்றிப் போய்விடும் அபத்தம் டப்பிங் திரைப்படங்களின் அபாயம். முக்கியக் கதாபாத்திரமான ஷிபுவாக மலையாளத்தில் நடித்திருப்பது தமிழ் நடிகரான குரு சோமசுந்தரம் என்பதால், தமிழில் அவரே டப்பிங் பேசியிருப்பது மட்டுமல்லாமல், மற்றக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்திருக்கும் கலைஞர்களின் தமிழும் உச்சரிப்பும் இது டப்பிங் திரைப்படம் என்பதை மறக்கச் செய்துவிடுகிறது சில நொடிகளிலேயே.

முகம் தெரிந்த பிரபல மலையாள நடிகர்களை ஷிபுவின் பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்தால் அந்தப் பாத்திரத்தின் கட்டமைப்பும் அது பார்வையாளர்களிடம் சென்றடையும் விதமும் சிதைந்துவிடக்கூடும் என்பதால் தீவிர யோசனைக்குப் பின் குரு சோமசுந்தரத்தை தேர்வு செய்ததாக Basil Joseph ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவரின் முடிவு சரியானதுதான் என்று அடிக்கோடிடும் விதமாக ஷிபுவின் பாத்திரத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் குரு சோமசுந்தரம் (அவருடைய நடிப்பைப் பார்ப்பது இதுவே முதல் முறை). ஷிபுவின் characterizationஐ மட்டுமல்லாது, மொத்த ஸ்க்ரிப்ட்டையும் உள்வாங்கி, கதையுடனும் படக்குழுவினருடனும் ஒன்றுவதற்கு ஏதுவாக அவர் மலையாளம் கற்றுக்கொண்டு, ஷிபுவிற்கு மலையாளத்தில் அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார். இந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் படத்தின் கெமிஸ்ட்ரியில் திரையில் பளிச்சிடுகிறது.

நடிப்பிற்கான கைத்தட்டல்களையும் பாராட்டுக்களையும் கவனத்தையும் ஷிபுவுக்காக குரு சோமசுந்தரம் உலகெங்கிலும் இருந்து ஈர்த்திருக்கிறார். வில்லனல்லாத வில்லனைத் திரையில் சித்தரிப்பது மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட ஒருவனுக்காக பார்வையாளர்களிடம் அனுதாபத்தை உருவாக்கும் அந்த நுட்பமானக் கலைக்கு, குரு சோமசுந்தரத்திற்கும் அவரை அப்பேற்பட்ட நடிகராக உருவாக்கிய கூத்துப் பட்டறைக்கும் நம் நன்றிகளும் பெருமைகளும் உரித்தாகட்டும். 

இப்படிப்பட்ட வில்லனை எதிர்க்கும் ஹீரோவாக, அதுவும் சூப்பர் ஹீரோவாக நிற்கும் Tovino Thomasன் நடிப்பு, ஷிபுவுடன் ஒப்பிடும்போது சற்று மட்டுப்பட்டுத் தோன்றினாலும், சற்றே உற்று நோக்கினால் புரியும் அது எப்பேர்ப்பட்ட finely balanced act என்று. கொஞ்சம் பிசகி ஒரு expression சற்று மாறினாலும் அவருடைய கதாப்பாத்திரம் காமெடியாக மாறிவிடும் அபாயத்தை உணர்ந்து, சிறு வயதில் சூப்பர் ஹீரோ ஆகவேண்டும் என்ற தனது ஆசை திரையில் நிறைவேறும் தருணத்தில் மிகையான நடிப்பை வெளிப்படுத்தாமல்,  நிரம்பவே கண்ட்ரோல்ட் ஆன performanceஐக் கொடுத்திருக்கிறார் Tovino Thomas. டப்பாக்கட்டு கட்டிய வேஷ்டியுடனும் ரப்பர் ஹவாய் செருப்புடனும் வழுக்கும் மலை மண்ணில் கால் ஊன்றி, பள்ளத்தாக்கில் விழப்போகும் பேருந்தை மின்னல் முரளியாக அவர் இழுத்துப் பிடித்து நிறுத்தும் காட்சியில், வாயில் விரல் வைத்து 'உய், உய்' என்று விசிலடிக்கத் தோன்றுகிறது (அப்படிச் விசிலடிக்கத் தெரியாததால் 'உய், உய்' என்று சப்தம் எழுப்புவதோடு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று!). உங்கள் மகளுக்கு மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவுக்கும் நீங்கள் தான் முதல் சூப்பர் ஹீரோ, Tovino Thomas. இனி வரும் திரைப்பட சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் உங்களுடன் ஒப்பிடப்படுவதைத் தவிர்க்க முடியாது என்று தான் தோன்றுகிறது. Applause and appreciation to you, Sir!

இருபத்தியெட்டு வருடங்களாகக் காத்து, எதிர்பார்த்து, ஏங்கி, தனக்குக் கிடைக்காது என்று கைவிட்ட வாழ்க்கை கைகூடிவரும் சந்தர்ப்பத்தைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு நடுத்தர வயதுடையவனுக்கும், அனாதையான தன்னைத் தூக்கி வளர்த்த ஊரையும் ஊர்மக்களையும் காப்பாற்றப் போராடும் இளைஞனுக்குமான போராட்டத்தின் பின்னணியாக படம் நெடுகிலும் ஒலிக்கும் அந்த மென்சோக இசைக்கும், குருக்கன்மூலாவின் தெருக்களிலும் வாழ்வியலிலும் வழிந்தோடும் அந்தப்  பிரத்யேக பின்னணி இசைக்கும் ஒரு சலாம்.

சூப்பர் ஹீரோ படம் என்பதால் காமிராவும் சூப்பர் ஹீரோ வேலையைச் செய்யவேண்டும் என்று பாவித்துக்கொள்ளாமல் மெல் இறகாய் குருக்கன்மூலாவையும் அதன் மக்களையும் அங்கு நடக்கும் இந்த சூப்பர் ஹீரோ போராட்டங்களையும், ஏதோ அருகிலிருந்து இவை அத்தனையையும் நாமே நேரில் பார்ப்பது போன்று, வருடலாய் படம் பிடித்துக் காட்சிப்படுத்திய காமிராவுக்கும் ஒரு சலாம்.

திரைப்படத்தின் இறுதிக் காட்சி இரண்டாம் பாகத்திற்கான அப்பட்டமான அடித்தளம் என்பதும், பேட்டி ஒன்றில் Basil Joseph, ‘இது franchiseஆக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது’, என்று கூறியதும் மட்டுமே சற்று நெருடலாகப் படுகிறது. ‘மின்னல் முரளி’யின் இரசிகர்கள் அவருடைய அடுத்த வருகையை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்னும் உற்சாகத்தில், sequels & franchiseகளிடம் இருக்கும் ஆபத்தை உணராமல் Basil Josephம் அவரது குழுவும் அடுத்த எட்டு எடுத்து வைத்து விடுவார்களோ என்ற சிறு சங்கடம் ஒன்று நெஞ்சில் நெளிகிறது. ஏனெனில் முதல் பாகங்களை விடவோ அல்லது அவற்றிற்கு இணையாகவோ வரவேற்பை பெற்ற சூப்பர் ஹீரோ இரண்டாம் பாகங்கள் ஹாலிவுட்டில் கூட அரிது.

Sequels, especially Superhero sequels, are Alice in Wonderland’s rabbit holes. உள்ளே விழுந்தால் மேல் எது, கீழ் எதுவென்றுத் தெரியாமல் புரட்டிப்போடுவது தான் அதன் specialty. இந்த முயல் வளைக்குள் வீழ்ந்தால் Marvelன் MCUவும், DC Comicsன் Supermanம் Batmanம் கூடத் தப்பமுடியாது என்பதற்கான சான்றுகள் ஹாலிவுட்டின் சரித்திரமெங்கும் சிதறிக்கிடக்கின்றன. வேண்டுகோள் இது - யோசித்துக் குதியுங்கள்! Sequelஐத் திரைப்படமாக எடுக்காமல் காமிக்ஸாகவோ அல்லது Animation Series ஆகவோ எடுத்துப் பாருங்கள். முயல் வளைக்குள் திசை காட்டும் கருவியாக இது பயன்படலாம்.

தெளிவான கதை, குழப்பமில்லாத திரைக்கதை, குருக்கன்மூலாவிற்கும் அதன் வாழ்விற்கும் அழைத்துச் செல்லும் காமிரா, சிறு பாத்திரங்களையும் நினைவில் நிற்கச் செய்யும் பாத்திரப்படைப்பு (மின்னல் அடித்த ஜெய்சனை ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் கிடத்திச் சென்று ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸ் சைரன் போல் கத்திக்கொண்டே செல்லும் ஆட்டோ டிரைவர்), உறுத்தாத மனதைத் தொடும் இசை, உலகத்தரத்தில் VFX (including பீடிக்குள்ளும் மேஜைக்கு அடியிலும் காந்தங்களை வைத்து அதிர வைத்த பீடியைப் போல், செட்டிலேயே யோசித்து செயல்படுத்தி வெற்றிகண்ட எளிய visual effects), ஓட்டைகளும் சறுக்கல்களும் இல்லாத நம்பத்தகுந்த லாஜிக், sumptuous க்ளைமாக்ஸ் என்று நிறைவான பெருமைப்படத்தக்க ஒரு திரைப்படத்தைப் பார்த்த உணர்வு வெகு நாட்களுக்குப் பின் கிடைத்தது.

எங்களுக்கும் இருக்கிறான் ஒரு சூப்பர் ஹீரோ (கேரளாவில் இருந்து இரவல் வாங்கினாலும்) என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம் இனி.

Well Done, Basil Joseph & Team, Take A Bow!


     

     

Write a comment ...