Happy For You, Ashleigh Barty!


மகளிர் டென்னிஸ் உலகத்தின் நம்பர் 1 வீராங்கனை Ashleigh Barty தான் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தியை நான் அறிந்தது கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தாமதமாக. டென்னிஸ் ரசிகர்கள் உலகெங்கிலும் அதற்குள் அவர்களின் அதிர்ச்சியைப் பதிவு செய்து விட்டிருந்தார்கள். அதிர்ச்சி அலை அடித்து ஓய்ந்து இப்போது அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

நான்கு வயதில் டென்னிஸ் ஆடத் தொடங்கிய Ashleigh Barty தனது பதினாறாவது வயதில் மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தனது டபுள்ஸ் பார்ட்னரான Casey Dellacqua-வுடன் இணைந்து இரண்டாம் இடம் வென்றார். 2014-ஆம் ஆண்டின் இறுதியில் டென்னிஸிலிருந்து ஒரு காலவரையற்ற இடைவெளியை எடுப்பதாக அறிவித்துவிட்டு விலகி, கிரிக்கெட்டும் கால்ஃபும் விளையாடினார். 2016-ல் மறுபடியும் டென்னிஸ் உலகில் நுழைந்த Ashleigh Barty-யின் சாதனைகள் இதுவரையில் விலாவாரியாகப் பட்டியலிடப்பட்டுவிட்டன.

இருபத்தி ஐந்து வயதில் உலகின் உச்சத்தில் இருக்கும் ஒரு வீராங்கனை, 'எனக்கு இது போதும். நான் அடைவதற்கு எனக்கு வேறு கனவுகள் இருக்கின்றன', என்று லைம்லைட்டில் இருந்து விலகி, புகழையும் அது தரும் போதையையும் ஒதுக்கிச் செல்வதென்பது மிகவும் அரிதாகவே நடப்பது. காத்திருக்கும் கோப்பைகளும் கொட்டிக்கிடக்கும் பரிசுத்தொகையும், டென்னிஸ் சரித்திரத்தில் தன் பெயர் பொறிக்கப்படும் சாத்தியங்களும் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாமல், "இதற்கு மேல் கொடுப்பதற்கு என்னிடம் உடலளவிலும் மனதளவிலும் எதுவும் இல்லை', என்று அனைத்தையும் புறந்தள்ளி எடுத்திருக்கும் இந்த முதிர்ந்த முடிவுக்கு Ashleigh Barty-க்கு தலை வணங்காமல் இருப்பது கடினம்.

ஒவ்வொரு கோப்பை வெல்லும் போதும் தன்னுடைய வெற்றி உரையில் தன்னுடைய டீமைப் பற்றி Ashleigh Barty பேசும் போது அவர் ஒருவருடைய வெற்றிக்குப் பின் அவருடைய குழுவின் உழைப்பு மட்டுமல்லாமல், அவர்களின் கனவுகளும் ஆசைகளும் அடங்கியிருக்கின்றன என்றும் தன்னுடைய கனவை அவர்களின் கனவாக்கிக்கொண்டு அதற்காக அவர்கள் தனக்களித்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பற்றி அவர் கூறும் வார்த்தைகள் உள்ளத்தில் ஊற்றெடுத்து, நன்றியில் நனைந்து, அன்பில் குழைந்து, இவற்றின் கனம் தாளாமல் அவர் நெஞ்சடைத்து வெளிவரும். உலகின் மகளிர் டென்னிஸ் சாம்பியனை மட்டுமல்ல, ஒரு grounded human being-ஐ உருவாக்கியதில், உருவாக உறுதுணையாக இருந்ததில் Ashleigh Barty-யின் குடும்பத்தின் பங்கும் அவருடைய குழுவின் பங்கும் எத்தகையது என்பதற்கு சாட்சியமாய் இருக்கிறது அவர் எடுத்திருக்கும் முடிவு.

தன்னைப் பிடிக்க வருபவரிடம் சிக்காமல் துள்ளிக் குதித்து ஓடி, கைக்கெட்டா தூரம் சென்றபின் திரும்பிப் பார்த்து அழகு காட்டும் குழந்தையைப் போல் டென்னிஸ் உலகின் physically, mentally, emotionally demanding பிடியிலிருந்து மென் கண்ணீருடனும், பெரும் புன்னகையுடனும் அவர் விடைபெற்றுச் செல்கிறார். 

It is as important to know what it is that you do not want as it is to know what it is that you do. Ashleigh Barty knows both.

Ashleigh Barty என்ற டென்னிஸ் வீராங்கனையின் சகாப்தம் தன் வாழ்வில் முடிந்துவிட்டதென்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்தது மட்டுமல்லாமல், Ashleigh Barty என்ற மனுஷியாக தனக்கு வேண்டியது என்ன என்பதையும் தெரிந்து அதை நோக்கிப் பயணப்படும் தைரியத்தையும் கொண்ட ஒருவரிடம் அவருடைய வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு வாழ்த்துக்கள் சொல்வதை விட வேறு சிறந்த வழியனுப்பல் என்ன இருக்க முடியும்?

Tennis champ Ashleigh Barty, it was a privilege watching and knowing you! Looking forward to seeing you in your next Avatar!

Good Bye & Good Luck!


Write a comment ...