மாற்றமே ஒரு மாயையா?


 27/04/2022 தேதியிட்ட The New Indian Express –ன் இரண்டாம் தலையங்கம் ‘Behind Odisha’s Quack Problem’ வாசித்த போது, கிட்டத்தட்ட ஒரு மாதமாக மனதின் மூலையில் குறுகுறுத்துக் கொண்டிருந்த கேள்வி ஒன்றிற்கு விடை கிடைத்த ஏமாற்றம் ஒன்று கவிழ்ந்தது.

கேள்விக்கு, அதுவும் நீண்ட நாட்களாக விடை தேடிக்கொண்டிருக்கும் கேள்விக்கு விடை கிடைத்தால் மிஞ்சுவது எப்படி ஏமாற்றமாக இருக்கும் என்பது இந்தப் பதிவின் முடிவில் தெரியவரலாம்.

The New Indian Express –ன் தலையங்கம் பேசியது இது தான் - ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தாக்கூர்முண்டா ப்ளாக்கில் உள்ள 62-வயது பெரியவர் ஒருவர் முதுகு வலியின் சிகிச்சைக்காக ஒரு போலி மருத்துவரை அணுக, அவர் அந்தப் பெரியவருக்கு மூன்று முறை ஊசிகள் செலுத்தியுள்ளார். இதில் தலையங்கம் எழுத என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அந்தப் பெரியவருக்கு ஊசி மூலமாக (மூன்று முறையும்) செலுத்தப்பட்ட அந்த மருந்து மனிதர்களுக்கானது அல்ல; கால்நடைகளுக்கானது. இந்த விவகாரம் காவல்துறைக்குச் சென்றும், அந்தப் போலி மருத்துவர் நடவடிக்கைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இதே மருத்துவத்தை(!) வேறு ஒரு நோயாளியிடமும் கையாண்டிருக்கிறார் அந்தப் போலி மருத்துவர்.

தலையங்கத்தின் அடுத்த பத்திகள், சூனியமும் மாந்தரீகமுமே ஓங்கியிருக்கும் ஒடிஷாவின் கிராமப்புறங்களில் எவ்வாறு போலி மருத்துவமே முறைமையாகிவிட்டது என்பதையும், போலி மருத்துவத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையையும் புள்ளி விவரங்களோடு விவரிக்கின்றன.

1990-களின் தொடக்கத்தில் (1993-1995) திரு. P. சாய்நாத் அவர்கள் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகைக்காக எழுதிய செய்திக் கட்டுரைத் தொடர்களை அடிப்படையாகக் கொண்ட 'ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்' (‘Everybody Loves A Good Drought’ என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு) புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து மனதில் குறுகுறுக்க ஆரம்பித்தது கேள்வி.

P. Sainath

1996-ல் ஆங்கிலத்தில் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டப் புத்தகம் (13 விருதுகள் பெற்றது), 2021-ல் தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழாக்கத்தின் தாமதத்திற்கானக் காரணத்தை புத்தகத்தின் பதிப்புரை கூறுகிறது. ஆங்கிலத்தில் வாசித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூலை இந்த வருட புத்தகக் கண்காட்சியில் தமிழில் பார்த்தபோது யோசிக்காமல் கைகள் அதை வீடு கொண்டு சேர்த்தன. 1996-ன் செய்திக் கட்டுரைகளை 2022-ல் வாசிக்கும் போது ஏற்படும் இயல்பான சந்தேகம், கேள்வி, குறுகுறுப்பு - 'அன்றைக்கு இன்று ஏதேனும் மாறியிருக்கிறதா?'

புத்தகத்தில் ‘பாலமுவில் டாக்டர் பிசுவாசுக்கு கிடைத்த கசப்பு மருந்து …’ என்று தலைப்பிட்ட கட்டுரையின் சில பகுதிகள் இவை. கட்டுரையின் களம் - பராமணி, பாலமு, பீகார்.

“போச்ரா பகுதியில் வாழும் மக்கள் டாக்டர் பிஸ்வாஸை அடித்துச் சட்டையைக் கிழித்ததுடன், கிராமத்தை விட்டே துரத்தியடித்தனர். அதற்குக் காரணம் இருந்தது. பிஸ்வாஸ் 'டாக்டர்' என அழைப்பதற்குத் தகுதியற்ற போலியாவார். அவர் சோட்டான் பர்கய்யா என்பவருடைய கர்ப்பிணி மனைவிக்கு 3 பாட்டில்கள் சலைன் குளுக்கோஸை இறக்கியிருந்தார். பிரசவ நேரம் நெருங்கிய நிலையில், மருத்துவ கவனிப்புக்காகப் போராடிக்கொண்டிருந்த அப்பெண்மணி இதனால் இறந்து போனார். இருப்பினும், சில கிராமங்கள் தள்ளி, பிஸ்வாஸ் தன்னுடைய மருத்துவச் சேவையை இன்னும் சிரமங்கள் ஏதுமின்றித் தொடர்கிறார்.”

“லடேகர் துணைக் கோட்ட மருத்துவமனை அந்தப் பகுதியிலேயே பெரியது. 18 ஊழியர்களையும், 5 மருத்துவர்களையும், 26 படுக்கைகளையும் கொண்டது. காலியாக இருந்த படுக்கைகள் மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தன(!). நான் சென்று பார்வையிட்ட பல முறைகளில் ஒரு பெண் சுகாதாரப் பணியாளரைத் தவிர ஒரு பணியாளரையும் பார்க்கமுடியவில்லை. தலைமை மருத்துவர் விடுப்பில் இருந்தார். மற்ற அனைவரும் மருத்துவமனைக்கு அருகிலேயே, அலுவலக நேரத்தில் தங்களுடைய தனிப்பட்ட மருத்துவப் பயிற்சியைத் (private practice) தொடர்ந்துகொண்டிருந்தனர்."

"மாவட்டத்தின் ஓர் உயரதிகாரி, மாநிலம் முழுவதுமே இதுதான் பொதுவான நிலை என்பதை உறுதி செய்தார். "மருத்துவர்கள், பள்ளி ஆசிரியர்கள் - இந்த இரண்டு செல்வாக்கு பெற்ற பிரிவினரிடம் முதலமைச்சர் லாலு யாதவ் நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது", என்கிறார் அவர்."

இது புத்தகத்தின் அடுத்த கட்டுரையான 'தேடி வரும் பூசாரி'யிலிருந்து சில பகுதிகள். இதன் களம் - மல்காங்கிரி, ஒரிசா.

"கோழிகள் அறுக்கப்படுவதற்காகக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நாங்கள் காத்திருந்தோம். மருத்துவ உதவியாளர் கைகளில் அவை தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தன. அதோடு அவற்றின் இயல்புக்கேற்ப இரையைத் தேடிக் கொத்திக்கொண்டிருந்தன. தலைமுறை தலைமுறையாக இந்தப் பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி மருத்துவம் பார்த்துவரும் பூசாரிகள் அவர்களுடைய பழமையான சடங்குகளை நடத்திக்கொண்டிருந்தனர். ஆனால் அதில் ஒரு மிகப் பெரிய மாற்றம் இருந்தது. கோபர்தன் பூசாரி அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நோயாளிக்கு நவீன முறையில் மருந்து தர வாய்ப்புள்ளது. நோயைக் குறித்த அவரது புரிதலின் அடிப்படையில் குளோரோகுவின் அல்லது பிளாசி போன்றவற்றைத் தர வாய்ப்புள்ளது." 

"கோபர்தனுடைய வழிமுறைகள் பாரம்பரியமும் அலோபதி மருத்துவ முறையும் இணைந்ததாக இருந்தன. அவருடைய வேலைகள் மல்காங்கிரியின் பழமையான பழங்குடிகளை நோக்கியே இருந்தன. அவர்களுடைய பாரம்பரிய மருத்துவமுறைகளோடு, உயிர்காக்கும் நவீன மருந்துகளை இணைத்து அதில் அவர்களது நம்பிக்கையைப் பெறுவது தான் அவரது திட்டம். "பூசாரிகள் கிராமத்தின் சமய குருவாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைக்கும்", என்கிறார் அன்வேஷா என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சுரேந்திர கேமண்டு. இன்னும் நவீன மருத்துவம் பிரபலமடையாத நிலையில், மருத்துவ நம்பிக்கைகளிலும் அது சார்ந்த பழக்க வழக்கங்களிலும் பூசாரிகள் மிக அதிகமாகத் தாக்கத்தை செலுத்துகிறார்கள் என்கிறார் அவர்."

இப்போது தலையங்கம் அடுக்கும் புள்ளி விவரங்களைப் பாருங்கள்.

SBI-யின் ஆராய்ச்சியின் படி -

·         2019-ல் ஒடிஷாவில் இறந்தவர்களில் 36% பேர் முறையான பயிற்சி பெறாத சுகாதார ஊழியர்களால் சிகிச்சை பெற்றவர்கள்.

·         மாவட்ட மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மற்றும் சமுதாய மையங்களிலும் இருக்கும் மருத்துவர் பணியிடங்களில் 44% காலியாக உள்ளன.

·         Rural Health Statistics-ன் படி கிராமப்புறங்களில் மருத்துவ நிபுணர்களின் தேவை (2019-20) 1,508. ஆனால் தற்போது இருப்பதோ 313 நிபுணர்கள் (specialists) மட்டுமே.

இப்படி இருக்கும் பட்சத்தில் போலி மருத்துவர்கள் எப்படி தழைத்தோங்காமல் இருப்பார்கள் என்று கேள்வி எழுப்புகிறது தலையங்கம்.

கிடைத்த விடை வெறும் ஏமாற்றத்தை மட்டுமல்ல, வேதனையையும் சேர்த்து விட்டுச் சென்றிருக்கிறது. உலகமும், நாடும், அறிவியலும், மருத்துவமும், சிந்தனையும் எவ்வளவோ மாறியிருக்கின்றன என்பதும், தொடங்கியப் புள்ளியிலிருந்து வெகு தூரம் முன்னேறிச் சென்றிருக்கிறோம் என்பதும் வெறும் பிரமையோ என்று திகைக்க வைக்கும், நின்ற இடத்து treadmill ஓட்டமாக விரிகிறது இந்த இருபத்தி ஆறு வருட இந்தியா.

The more things change the more they stay the same
The new improved tomorrow isn’t what it used to be

எனும் Bon Jovi-ன் பாடல் வரிகளை நிரூபித்துப் போகிறது மாற்றம் எனும் மாயை.


Write a comment ...