தாங்க் யூ, ஸ்வர்ணலதா!


தினமும் நான் கேட்காமலேயே வந்து விழும் கூகிள் நோட்டிபிகேஷன்களில் இன்று 'மாலையில் யாரோ' பாடலை ஒரு பெண் பாடும் You Tubeன் 'The Candlelight Studio' என்ற சானலின் காட்சி வந்து விழுந்திருந்தது. எப்போதும் இவைகளை சட்டை செய்யாமல் தள்ளி விடும் வழக்கம் இருந்தபோதிலும், அந்தப் பாடல் அதை க்ளிக்கச் செய்தது. இரவின் இருட்டில், ஒரே ஒரு மெழுவர்த்தியின் வெளிச்சத்தில் மாளவிகா சுந்தர் என்ற பெண் அந்தப் பாடலை எந்த இசையும் பின்னணியில் இல்லாமல் பாடினார். இரவின் இதங்களில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருக்கும் இடத்தை வேறு எதனாலும் நிரப்ப முடியாது என்பது சொல்லாமலேத் தெரியும் உண்மை. அதிலும் அவரின் மெலடிக்கு ஸ்வர்ணலதாவின் குரல் இழையும் வரிகள்... சொல்லவா வேண்டும்? மாளவிகாவின் குரலின் இனிமை நெஞ்சை வருடச் செய்வதாக இருந்தாலும், ஸ்வர்ணலதாவின் குரலில் கேட்ட அந்தப் பாடலை வேறு குரலில் கேட்பது ரொம்பவே நெருடத்தான் செய்தது. அத்தனை மெலடியிலும் அடிநாதமாக ஓடிடும் மென்சோகம் கொண்ட குரலில் கேட்ட ஸ்வர்ணலதாவின் பாடல்களை வேறு எந்தக் குரலாலும் ஈடு செய்யமுடியாது என்பதை மறுபடியும் நினைவூட்டிச் சென்றது மாளவிகாவின் ரெண்டிஷன்.

இளையராஜாவின் இசையில் 'மாலையில் யாரோ' பாடலும், ஏ. ஆர். ரகுமான் இசையில் 'எவனோ ஒருவன்' பாடலும் இன்று கேட்டாலும் விவரிக்க முடியாத உணர்வுகளை உள்ளுக்குள் உருட்டிச் செல்லும் ஆற்றல் படைத்தவை. எத்தனையோ இசையமைப்பாளர்களின் இசையில் அவர் பாடியிருந்தாலும், இந்த இரண்டு பாடல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை வேறு எந்தப் பாடலும், அவர் தேசிய விருது வாங்கிய 'போறாளே பொன்னுத்தாயி' பாடல் கூட, ஏற்படுத்துவதில்லை.

BBC நடத்திய இசையைப் பற்றிய உலகளாவிய வாக்கெடுப்பில் ஸ்வர்ணலதா எஸ். பி. பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடிய 'தளபதி' படத்தின் 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் டாப் பத்து பாடல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது, அவரின் குரலுக்கு உலகம் முழுதும் இருந்தும் ரசிகர்களை ஈர்க்கும் சக்திக்கு சான்று. இன்னும் சில காலம் அவர் இருந்திருக்கலாம், நம்மிடையே. அனுப்பியவனுக்கு என்ன அவசரமோ, முப்பத்தியேழு வயதிலேயே திருப்பி அழைத்துக்கொண்டான். 

இல்லாத போதும் கேட்டுத் திளைக்க உங்கள் குரலை விட்டுச் சென்றதற்கு, தாங்க் யூ, ஸ்வர்ணலதா!



Write a comment ...