பாலு மகேந்திராவின் ‘வீடு’ (‘வீடு’ series I)


"சமர்ப்பணம்
உலகெங்கிலுமுள்ள வீடற்ற மக்களுக்கு"

என்று பாலு மகேந்திரா 1988ல் 'வீடு' திரைப்படத்தை சமர்பித்ததில் இருந்து இன்று வரை எத்தனையோ மாற்றங்களை, வளர்ச்சிகளை உலகம் கண்டிருந்தாலும், 'சொந்த வீடு' என்பது இன்னும் கோடானுகோடி மக்களுக்கு எட்டாத கனவாகவே இருக்கிறது. லேட்டஸ்ட் தரவுகளின் படி தற்போதைய வீடில்லாதவர்களின் எண்ணிக்கை 150 மில்லியன் - உலகம் முழுவதும்.

சாஃப்டவேர் வேலையில் சேர்ந்த இரண்டாம் வருடம் மார்ஜின் தொகையைக் கட்டி, உட்கார்ந்த இடத்தில் வீட்டுக் கடன் வாங்கி, வாங்கும் ஐந்திலக்க/ஆறிலக்க சம்பளத்தில் EMI பிடித்தமாகிவிட (இதிலும் சங்கடங்கள் இல்லாமலில்லை, ஆனாலும் அவை சுதாவின் சங்கடங்களுக்கு சற்று சளைத்தவை தான்), 'வீடு வாங்க வேண்டும்' என்று நினைத்த இரண்டாம் மாதத்தில் சொந்த பிளாட்டில் குடியேறிவிடும் இன்றைய தலைமுறையினருக்கு, 'வீடு' திரைப்படம் புரியாத, மிகைப்படுத்தப்பட்ட melodramaவாகத் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனாலும் முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னதான மத்திய நடுத்தர வர்க்க (‘middle’ middle class) நிதர்சனம் அது தான்.

ஒரு வீட்டடி மனையின் விலை (வெறும் இடம் மட்டும்!) இரண்டரை கோடி என்று கூசாமல் நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரங்களைப் பார்க்கும் போது, 'வீடு' திரைப்படத்தின் சுதாவின் வீட்டைக் கட்டத் தேவைப்படும் ஒண்ணேகால் லட்ச ரூபாய் பட்ஜெட் ஜோக்காகக் கூடத் தெரியலாம். வீடு திரைப்படம் எடுக்கப்பட்ட 1980களின் மாத சம்பளங்கள் ஆயிரத்து ஐநூறு என்றும், வீட்டு வாடகை நூற்றி இருபத்தி ஐந்து, எண்ணூறு என்றிருந்த காலத்தில், அந்த எண்ணூறிலும் ஐம்பது ரூபாய் குறைத்துச் சொல்லப்படும் வாடகைக் கட்டுப்படியாகாமல் (தரை தளம் 2BHKவிற்கு) வீட்டை இழக்கும் கதையின் protagonistடிற்கு, ஒண்ணேகால் லட்சம் என்பது அசரவைக்கும் தொகை.

முருகேசன் தாத்தா அவர் காலத்தில் இரண்டு கிரவுண்ட் இடத்தை வளசரவாக்கத்தில் (அப்போது அது சென்னையின் அவுட்டர் பகுதி!) நூற்றி ஐம்பது ரூபாய்க்கு வாங்கிப் போட, அவருடைய பேத்தி சுதா அந்த கிரவுண்டில் ஒன்றை முப்பத்தைந்து ஆயிரத்திற்கு விற்றுவிட்டு மீதமிருக்கும் இன்னொரு இடத்தில் வீட்டைக் கட்டுகிறார். ஆபிசில் லோன், நகை அடமானம் என்று தன்னால் இயன்ற, முடிந்த வழிகளில் பணத்தைப் புரட்டுகிறார்.

பெருநகரங்களில் வான் தொடும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்கும் பில்டர்களின் வாடிக்கையாளராக அல்லாமல், சிற்றூர்களில் கையளவு இடத்தில் தனி வீடு கட்டுபவர்களுக்கு, கட்ட நினைப்பவர்களுக்கு இன்றும் சுதாவின் நிலை தொடரலாம். ஆனாலும் NRIக்களின் மூலம் அந்நியச் செலாவணியில் காசு புரளும் சிற்றூர் குடும்பங்கள் இந்த அல்லாட்டத்தை சந்திப்பதாகத் தெரியவில்லை.

வருமானங்களும், மேற்படி வரும்படிகளும் அதிகரித்துவிட்ட இந்தக் காலகட்டத்தில், விலைவாசிகளும் அதற்கேற்றாற்போல் உயர்ந்துவிட்ட போதிலும், எழுப்பப்படும் வானுயரக் கட்டடங்களும், கட்டப்படும் மனையடி வில்லாக்களும் சுதாவின் போராட்டங்களைப் புறந்தள்ளிப் போவதைப் போல் தோன்றினாலும், அந்தச் சிறிய, எளிய தேவை கூட எட்டாக் கனவாக வாழும் மக்கள் அன்று போல் இன்றும் என்றும் இருக்கத்தான் செய்கிறார்கள், செய்வார்கள்.

ஒருத்தியாய், நேர்மையாய், வரும் இன்னல்களைக் கடந்து வீட்டைக் கட்டிய சுதாவை, அவள் கட்டிய வீட்டில் அவளைக் குடியேற விடாமல், அந்த வீட்டை மெட்ரோ வாட்டர் acquire செய்வதாக பாலு மகேந்திரா காட்சிப்படுத்தியிருப்பது வலிந்துத் திணிக்கப்பட்ட pathosஆகத் தெரிகிறது, திரைப்படத்தை இப்போது பார்க்கும்போதும். சுதாவைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினர் உழைத்து சம்பாதித்து அதில் ஒரு வீடு கட்ட நினைத்தால் அது இறுதியில் கைகூடாமலேத்தான் போகும் என்றும், அத்தகைய ஆசைகள் எதுவும் இத்தகையவர்களுக்கு இருப்பது நியாயமில்லை என்றும் பாலு மகேந்திரா சொல்ல நினைத்திருந்தால், அவருடைய ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அது போன்ற அநீதி வேறெதுவும் இருக்கமுடியாது.



Write a comment ...