எப்போதாவதேனும் இந்தப் பக்கத்தை எட்டிப் பார்த்தவர்களுக்கு நன்றியும் apologiesம். நன்றி எப்போதாவதேனும் இந்தப் பக்கத்தை எட்டிப் பார்த்ததற்கு. Apologies நீங்கள் எட்டிப் பார்க்கும் போது புதிய பதிவு ஏதும் இல்லாமலிருந்ததற்கு. இனியேனும் கொஞ்சம் consistentஆக பதிவுகள் இட முயற்சிக்கும் முடிவுடன் இந்தப் பதிவு.
2022 விகடன் தீபாவளி மலரில் வெளியான பெருமாள் முருகனின் 'பதரே... பதரே...' சிறுகதையின் சுருக்கம். வாசித்தது 2022 தீபாவளி தினங்களை ஒட்டி.
க்ளூசின் அழைப்பு காதுக்கருகே தெளிவாக கேட்டது. வழக்கமான கத்தல் அல்ல. கீச்சுக்குரலில் 'சோறு... சோறு...' என்று சொற்கள் தெளிவாக வந்தன. பூனை பேசுகிறதா? கட்டிலில் ஏறி அவனை ஒட்டி நின்றுகொண்டு பேசும் க்ளூசை விழித்துப் பார்த்தான். கண்களைத் தீர்ந்ததும் அதன் குரலில் வலு கூடிற்று. 'பசிக்குதா?' என்று கேட்டு உடலைத் தடவினான். 'ஆமா' என்ற க்ளூசு அவனை ஒட்டி படுத்தது.
அவன் வருடலில் கண் மூடிச் சுகித்திருந்த க்ளூசு சற்று நேரம் பொறுத்து அவன் முகத்தை நோக்கி அண்ணாந்து மீண்டும் கேட்டது. 'சோறு?' அப்போதுதான் சட்டென்று தோன்றியது, க்ளூசு தன் குரலில் மனித மொழியில் பேசுகிறது; அல்ல, கத்துகிறது. உறுதிப்படுத்திக்கொள்ள 'க்ளூசுக்கு என்ன வேணுமாம்?' என்றான். அது மெல்லமாய்ச் 'சோறு' என்று கத்தியது. அப்போது அதன் தலை சற்றே நிமிர்ந்து தாழ்ந்தது. அவனும் 'சோறு' என்று சொல்லிப் பார்த்தான். இரண்டும் ஒன்று போலவே ஒலித்தன.
க்ளூசை அவன் கண்டெடுத்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அந்த நாளையே அதன் பிறந்த நாளாகக் கொண்டாடியும் ஆயிற்று. வீட்டிலிருந்து சிறிது தூரம் நடந்து சென்று நிறுத்தத்தில் நின்று பேருந்தேறி அலுவலகம் செல்வான். ஐந்தாவது நிறுத்தத்தில் அலுவலகம். அதே போல் திரும்பல். அலுவலகத்திலிருந்து திரும்பி நடந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மாலை நேரத்தில் தெருமுனையில் இருந்த சாலையோரப் புதரில் பூனைக்குட்டியின் கத்தல் கேட்டது.
தயக்கத்தோடு புதருக்குள் எட்டிப் பார்த்தான். கண் விழிக்காத பூங்குட்டி இடைவிடாமல் கத்தியது. கை நீட்டித் தூக்கினான். கொடுக்குமுள் நகங்களால் பற்றிக்கொண்டு கைச்சூட்டைத் தன் தாய்மடி எனக் கருதி ஊட்டத்தொடங்கியது. வீட்டுக்கு எடுத்து வந்தான். உடல்நிலை சரியில்லாதபோது வாங்கியிருந்த ஊசியும் உறிஞ்சுகுழலும் பிரிபடாமல் இருந்தன. குழலில் பாலை உறிஞ்சித் துளித்துளியாய்ப் பூனைக்குப் புகட்டினான். சொப்புவாயில் அது பாலை சப்பிக் குடிக்கும் வேகம் கண்டு சிரித்தான்.
க்ளூசை அவன் வெளியிலேயே விடவில்லை. அவன் அலுவலகத்திற்குக் கிளம்பும் வரையில் காலைச் சுற்றிக்கொண்டிருக்கும். வழியனுப்பியதும் படுக்கைக்குப் போய்விடும். மாலையில் அவன் வந்து கதவு திறக்கும் ஒளி கேட்டதும் இறங்கிக் கத்திக்கொண்டே ஓடி வரும். எடுத்தணைத்துத் 'தனியா உட்டுட்டுப் போயிட்டனா க்ளூசு, பயந்துட்டியா?' எண்டு தினமும் கேட்பான். அவன் முகத்தோடு முகமுர்ஸி அதுவும் பதில் சொல்லும்.
அலுவலக நண்பர்களிடம் க்ளூசைப் பற்றியும் அதை வளர்ப்பது பற்றியுமே பேசினான். 'நீயும் பூனையா மாறிட்டடா' என்று நண்பர்கள் சொன்னார்கள். 'மாறிட்டா நல்லாத்தான் இருக்கும்' என்றான்.
அலுவலகத்திற்கு புதிய மேலதிகாரி வந்தார். இரண்டு வருஷங்களுக்கு முன் அரசாங்கத் தேர்வெழுதி இந்த அலுவலகத்தின் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்திருந்தான் அவன். கோப்புகளைத் தயார் செய்து அவனுக்கு மேலிருந்த மூன்று நான்கு அலுவலர்களின் பார்வைக்கு அனுப்பி அதன்பிறகு அதிகாரியிடம் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு முன்னிருந்த அதிகாரிகள் அவ்வளவு பிரச்சினையில்லை. லேசாகக் கடிப்பார்கள். ஓரிரு சுடுசொற்கள் விழும். அவை பழகிவிட்டன. புதிய அதிகாரி வேறு மாதிரி இருந்தார். எப்போதும் காரமுகம்; வெஞ்சொற்கள். முகத்தை நோக்கி எதையும் தூக்கி எறிவார். அலுவலக இருக்கை சிதை போல் ஆயிற்று.
தினமும் துயர் சுமந்து வந்து குறுக்கி முடக்கிக்கொள்ளும் அவன் போக்கைக் கண்டுதான் க்ளூசு பேசத் தொடங்கியிருக்கும் போல. சோறு கேட்டுப் பேசிய அன்றைய இரவுக்குப் பின் தினமும் பேச்சுதான். மாலையில் அவன் வீட்டுக்குள் நுழையும்போதே 'இன்னக்கி என்ன பிரச்சின?' என்று கேட்டது. 'போ, உன்கிட்ட சொல்லி என்னாவப்போவுது' என்று ஒதுக்கிச் சென்றான். க்ளூசு விடவில்லை. அவன் படுக்கையின் கால்மாட்டில் உட்கார்ந்துகொண்டு 'என்ன பிரச்சின?' என்றது. வயிற்றில் ஏறிப் படுத்துக்கொண்டு 'என்ன பிரச்சின?' என்றது. சமையலறை மேடையில் ஏறி நின்றுகொண்டு 'என்ன பிரச்சின?' என்றது. அதே கேள்வியை விடாமல் கேட்டபடியிருந்தது.
ஒரு மாலையில் தன் அழுத்தம் தாங்காமல் க்ளூசிடம் 'அந்த நாய் இருக்கறானே' என்று சொல்லத் தொடங்கினான். க்ளூஸிடம் சொல்லி முடித்ததும் மனச்சுமை இறங்கிவிட்ட மாதிரி இருந்தது. அவன் கால்களைத் தன் நகங்களால் மெல்லக் கீறியது க்ளூசு. 'உடு, அதயே நெனச்சிட்டு இருக்காத' என்று சொற்களாலும் ஆறுதல் சொல்லிற்று.
ஒரு நாள் இப்படிச் சொன்னான்.
'பிளாஸ்க்கிலிருந்து காப்பி ஊத்திக் குடுக்கச் சொன்னான் இன்னைக்கு. அது என் வேல இல்ல. உதவியாளர எங்கயோ அனுப்பிட்டான். வேணும்னே செஞ்சிருப்பான். அவனுக்கு எப்பிடி ஊத்தணும், எவ்வளவு சக்கர போடணும், சூடு, அளவு, எதுவும் எனக்குத் தெரியாது. அவனும் சொல்லல. எனக்கும் கேக்க பயம். கைவேற நடுங்குது. எப்படியோ சமாளிச்சு ஊத்திக்கிட்டு போய் வெச்சன். அவனுக்கு வெக்கறபோது சின்னத் தட்டத்த வெச்சு மூடணும் போல. அது எனக்குத் தெரீல. பதரே பதரே... மூடி வெக்கத் தெரியாது? பல்லிப் புழுக்க உழுவட்டும். அதக் குடிச்சுச் செத்துப்போகட்டும்னு செய்யறயான்னு கத்தறான்.'
'செரின்னு தட்டத்தத் தேடி எடுத்துக்கிட்டு ஓடியாறன். அதுக்குள்ளே எடுத்துக் குடிக்க ஆரம்பிச்சுட்டான். ஒருவாய் வெச்சு மாடாட்டம் உருப்புன்னு உறிஞ்சினான். ஒடனே ச்சீன்னு அப்படியே துப்புனாம் பாரு. அவன் மேஜ மேல தெறிச்சு என் மேலயும் பட்டுச்சு. நல்லவேள மூஞ்சில படல. அடே பதரே, இதென்ன காப்பியா கழிநீரான்னு கத்தறான். காப்பிய போட்டவன் கடக்காரன். வாங்கியாந்து வெச்சவன் ஒருத்தன். சும்மா ஊத்திக் குடுத்தவனப் புடிச்சிகிட்டுப் பதரே, பதரேன்னு கத்துனா, நான் என்ன செய்வன், சொல்லு நீ...'
க்ளூசுக்கு இந்தச் சம்பவம் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும் போல. அவன் மடியிலிருந்து தோள் மேலேறிக் குதித்தது. தரையில் உடலைத் தேய்த்துப் புரண்டது. ஜன்னலில் தாவியேறிக் கொசுவலையைப் பிய்த்தெறிந்தது. அதன் கும்மாளத்தைத் தாங்க முடியாமல் அறைக்குள் போய்த் தாழிட்டுக் கொண்டான். கதவைப் பிறாண்டிப் பிறாண்டித் தட்டியது க்ளூசு. 'இன்னக்கிக் கத நல்லாயிருந்தது. அதான் கொஞ்சம் குஷியாயிட்டேன். கோவிச்சுக்காத, தெற' என்று கெஞ்சியது. வெகுநேரம் கழித்தே அவன் திறந்தான். அதற்குப் பசிக்குமே, பாவம் என்று தோன்றியது. அதுவும் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் கால்களில் உரசி மன்னிக்கச் சொல்லிக் கேட்டது.
ஒவ்வொரு நாளும் அவன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு கதவருகிலேயே க்ளூசு காத்திருந்தது. வெளியில் இரும்புக் கதவை அவன் திறக்கும் சத்தம் கேட்டதும் 'வா, வா' என்று கத்தி வரவேற்றது. உடனே அவன் அன்றைய கதையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது. கதையைக் கேட்டதும் துள்ளி எழுந்து முன்னகால்களை மேலே தூக்கிக்கொண்டு பின்னங்கால்களால் நடந்து வீடு முழுவதும் வலம் வந்தது க்ளூசு. அது ஒரு நடனம் போலத் தோன்றியதால் அவன் ரசித்துப் பார்த்தான். க்ளூசின் உற்சாகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம். அதன் உடல் நீண்டு வந்தது. பின்னங்கால்களால் நிற்கும்போது அவன் இடுப்புயரத்திற்கு மேல் தெரிந்தது.
அன்றைக்கு மேலதிகாரி விடுப்பில் இருந்தார். அலுவலகமே களை கட்டியிருந்தது. ஆனால் 'களையே இல்ல' என்று பேசிக்கொண்டார்கள். எல்லோரும் சிரித்துக்கொண்டு உலவினார்கள். கூட்டமாகச் சேர்ந்து தேநீர் குடிக்கப் போனார்கள். மாலையில் அவன் திரும்பும்போது எதுவுமே நடக்காதது போலிருந்தது. இரும்புக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் க்ளூசின் பிறாண்டலும் சத்தமும் மிகுந்திருந்தன. வேகமாகத் திறந்து 'வா, வா' என்று அழைத்து அரவணைக்க முயன்றான். 'சொல்லு' என்றது க்ளூசு. 'என்ன சொல்ல? இன்னைக்கி ஒண்ணுமே இல்ல' என்றான். அவன் முகம் ஒளி விரவி மலர்ந்திருந்தது.
அவனை உற்றுப் பார்த்த க்ளூசு 'பதரே, பதரே, கத சொல்லுடா' என்று ஆவேசமாகக் கத்தியது.
தி இந்து தமிழ் திசை வெளியீடான நடிகர் சிவகுமார் எழுதிய 'சித்திரச்சோலை' என்ற அவரது ஓவிய அனுபவங்கள் பற்றிய புத்தகத்தின் 'நம்மூரு பிகாசோக்கள்' என்ற அத்தியாயத்தின் ஒரு பகுதி. வாசித்தது நான்கு நாட்களுக்கு முன்.
ஓவியர் ஆர். பி. பாஸ்கர். இவர் 1960-66 களில் ஓவியம் பயின்றவர். ராஜஸ்தான் பனஸ்தலி சென்று சுவர் ஓவியங்கள் தீட்டப் பயிற்சி எடுத்தவர். இஸ்ரேல், யுனெஸ்கோ, ஸ்காலர்ஷிப்பில் பிரிண்ட் மேக்கிங் மேற்படிப்பு, 1995-97 கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வர், 1997-2001 சென்னை ஓவியக்கல்லூரி முதல்வர், 2002-2007 டெல்லி லலிதகலா அகாடமி சேர்மன் என பல உயர் பதவிகள் வகித்தவர்.
இந்த பாஸ்கர் ஓவியத்திலேயே ஒரு வேடிக்கையான ஆள். என்னை விட ஒரு வயது சின்னவர். ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை 'வாடா, போடா'ன்னு தான் கூப்பிடுவான். அவனை ஓவிய மேதைகள் கிட்டப் போய் பாஸ்கர்ன்னா யாருக்கும் தெரியாது. பூனை பாஸ்கர்னாத்தான் தெரியும். அந்த பேரு அவனுக்கு வந்ததில்லதான் வேடிக்கையே அடங்கியிருக்கு.
பாஸ்கர் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ்ல 1969-ல இருந்து புரபஸரா வேலை பாக்கறான். 1979-ல் பத்து வருஷம் ஆகிப்போச்சு. கிளாஸ் ஸ்டூடண்ட்ஸுக்கு அந்த காலேஜுக்குள்ளேயே மரங்களை, காம்பவுண்டை சுத்தி பூனைக ஓடறதை, ஓடிவறதை, படுத்திருக்கறதை, குதிக்கறதை, தூங்கறதை, சண்டை போடறதை பார்த்து, 'இந்தப் பூனைகளை வரைஞ்சு காட்டறேன் பாருடா!'ன்னு சொல்லி வரைய ஆரம்பிச்சிருக்கான். அவரு டெமான்ஸ்ட்ரேட் பண்றப்போ பத்து பசங்க பின்னாடி இருப்பாங்க.
அந்தப் பூனை தூங்கறதை, கால்களை நக்கிட்டு இருக்கறதைன்னு ஒவ்வொரு விஷயத்தையும் பல கோணங்கள்ல - அந்தப் பூனை இயல்பா இருக்கறத பார்த்துப் பார்த்து ஸ்கெட்ச் பண்ணி - முதல்ல க்ரேயான் ஸ்கெட்ச் பண்ணி காட்டியிருக்கான். அப்புறம் அதையே ஆயில் பெய்ன்ட்டிங்கா செஞ்சு காட்டியிருக்கான்.
அதுலயே அப்புறம் சின்ன இண்டரெஸ்ட் டெவலப் ஆகி, ரோட்ல ஒரு பூனை ஓடுச்சுன்னா அதை போட்டோ எடுப்பான். ஒரு ரிக்ஸா மேல தூங்கிட்டு இருந்தா போட்டோ எடுப்பான். எங்கெல்லாம் பூனையைப் பார்க்கறானே அங்கெல்லாம் அதைப் போட்டோ எடுத்து, வித்தியாசமான கோணத்துல படம் எடுத்து, மல்லாக்கப் படுத்துருக்கறது - காலை ரெண்டையும் தூக்கிட்டு இருக்கறது, வயித்துக்குள்ள தலைய உட்டு தூங்கறது - இப்பிடி பல்வேறு கோணங்கள்ல தொடர்ந்து படம் பிடிச்சு, ஓவியங்களா தீட்டி, பிரிட்டிஷ் கவுன்சில்ல கண்காட்சி வச்சிருக்கான்.
நானும் போயிருந்தேன். அதுக்கப்புறம் பார்த்தா அவனை ஓவியர் பாஸ்கர்ன்னா யாருக்கும் தெரியலை. உலகம் பூரா பூனை பாஸ்கர்ன்னா தெரியுது. இப்ப பார்த்தா, 'உனக்கெப்பிடி 'மார்க்கண்டேயன்'னு பேர் வந்துச்சோ, அது போலவே எனக்கு பூனை பாஸ்கர்ன்னு பேர் வந்துருச்சு. இதுவரைக்கும் எத்தனை பூனை வரைஞ்சேன்னு எனக்கே தெரியாது!'ங்கறான். இவங்களையெல்லாம் நாம் ஊரு பிகாசோன்னு சொல்றதா? அதுக்கு மேல ஏதாச்சும் சொல்லலாமா?
க்ளூசை நினைவுப்படுத்தவில்லை?
Write a comment ...