The Red Balloon (பொதிந்திருக்கும் பவளங்கள்)


1956-ல் வெளிவந்து, Short Film Palme d’Or, Academy Award for Writing (Original Screenplay), Louis Delluc Prize for Best Film, BAFTA Special Award (Film) என்று விருதுகள் அள்ளிக் குவித்த கிட்டத்தட்ட வசனங்களே இல்லாத இந்த பிரெஞ்சு குறும்படம் ஒரு சிறுவனையும் ஒரு சிவப்பு பலூனையும் பற்றியது.

ஆறு அல்லது ஏழு வயது இருக்கும் சிறுவன் பாஸ்கல் ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும் போது தெருவிளக்கு கம்பம் ஒன்றில் சிக்கியிருக்கும் சிவப்பு பலூன் ஒன்றைப் பார்க்கிறான். கம்பத்தில் ஏறி அந்த பலூனை விடுவித்துத்  தன்னுடன் எடுத்துச் செல்கிறான். அதிலிருந்து அந்த பலூன் அவனுடன் நட்பாகி அவன் சொல்படி கேட்டு நடப்பது மட்டுமல்லாமல், அவன் போகும் இடங்களுக்கெல்லாம் அவனைப் பின்தொடர்கிறது. இதை பார்த்து பெறாமை கொள்ளும் மற்ற சிறுவர்கள் பாஸ்கலிடமிருந்து அந்த சிவப்பு பலூனைப் பறிக்கப் பார்க்கிறார்கள். இவர்களிடமிருந்து பாஸ்கல் தனது சிவப்பு பலூனைக் காப்பாற்றுகிறானா இல்லையா என்பது தான் மீதமுள்ள கதை.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பதினோரு வருடங்களில் எடுத்து வெளிவந்த 34-நிமிட குறும்படம். போரின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுந்து வரும் பாரிஸ் நகரத் தெருக்கள் நாம் தற்காலத்தில் பார்த்தறியாதவை. டிராம் வண்டி ஓடும் வீதிகளும், கழிவு (?) நீர் வழிந்தோடும் கல்பதித்த சந்துக்களும் நம் கண் முன் நிறுத்தும் பாரிஸ் தற்போதைய அதன் பளபளப்பிற்கும் பகட்டிற்கும் ரொம்பவே முந்தையது.

சிறுவனையும் சிறுவர்களையும் மையமாகக் கொண்ட குறும்படம் என்றாலும் இது குழந்தைகளுக்குரிய குறும்படமாகத் தோன்றவில்லை. பள்ளியில் பாஸ்கலை தனியறையில் சாவி கொண்டு பூட்டி வைத்துவிட்டு ஆசிரிய மேலாளர் அவர் நண்பனை சந்திக்கச் செல்லும் காட்சியைப் பார்க்கும் குழந்தைகளிடம் அதை எப்படி விளக்கவோ நியாயப்படுத்தவோ முடியும் என்று தெரியவில்லை.

குழந்தைகள் எந்த அளவு குழந்தைத்தன்மை கொண்டவர்களோ அந்த அளவு குரூரமும் நிறைந்தவர்கள் என்ற எண்ணம் தோன்றுவதை இந்தக் குறும்படத்தை இரண்டாவது முறை பார்த்து முடித்த பின்னும் தவிர்க்க முடியவில்லை. பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகத்தைப் போல் 'குழந்தைகள் இயற்கையிலேயே குரூரம் நிறைந்தவர்களா அல்லது அவர்கள் பிறந்து வளரும் சமுதாயத்தால் அது அவர்கள் மேல் படர்ந்து பரவுகிறதா?' என்ற கேள்விக்கு எந்த ஈசானப் புலவரிடம் போய் விடை வாங்கி வருவது என்று தெரியவில்லை.

ஹூம்! போகும் இடத்திலேனும் பாஸ்கல் அவன் பலூன்களுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும்!


Write a comment ...

Write a comment ...