ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - II


ஷெர்லக் ஹோம்ஸ் ஒரு நெடிய விசில் சத்தத்துடன் நிமிர்ந்து அமர்ந்தார். "ஓய், பீட்டர்சன்! உன் கையில் என்ன இருக்கிறதென்று தெரியுமா? பொக்கிஷமய்யா, பொக்கிஷம்!" என்றார் ஹோம்ஸ்.

"வைரமா, சார்? இல்லையென்றாலும் இது ஏதோ ஒரு விலையுயர்ந்த கல். கண்ணாடியை வெண்ணெய் போல் அறுக்கிறது", என்றார் பீட்டர்சன்.

"ஏதோ கல் இல்லை, பீட்டர்சன்! இது தான் அந்தக் கல்".

"கவுன்ட்டஸ் மோர்சர் அவர்களின் நீல மாணிக்கம்?" என்றேன் நான் அதிர்ச்சியுடன்.

"அதே தான். அதன் அளவும் வடிவமும் எனக்கு மிகவும் பரிச்சயமானது. தினமும் அதைப் பற்றிய விளம்பரங்களை தி டைம்ஸ் நாளிதழில் பார்த்துக் கொண்டிருக்கிறேனே! இதைப் போன்ற இன்னொரு கல் உலகில் இல்லை. இதன் மதிப்பு என்னவென்று யூகிக்கத்தான் முடியும். இதற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பரிசுத் தொகையான 1000 பவுண்டுகள் இதன் மதிப்பில் இருபதில் ஒரு பங்கு கூடக் கிடையாது".

"ஆயிரம் பவுண்டுகளா? அடக்கடவுளே!" என்று அதிர்ச்சி தாங்காமல் அருகில் இருந்த நாற்காலியில்  தொப்பென்று அமர்ந்து எங்கள் இருவரின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தார் பீட்டர்சன்.

"ஆயிரம் பவுண்டுகளா? அடக்கடவுளே!"

"அது பரிசுத் தொகை மட்டும் தான். ஆனால் எனக்குத் தெரிந்தவரை இந்தக் கல்லைத் திரும்பப் பெறுவதற்கு கவுன்ட்டஸ் தனது சொத்தில் பாதியைக் கூட எழுதித் தருவார்கள். இந்தக் கல்லின் மீது அவர்களுக்கு சில உணர்வுபூர்வமான அபிமானங்கள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்".

"ஹோட்டல் காஸ்மோபாலிட்டனில் இந்தக் கல் தொலைந்து போனதாக ஞாபகம்", என்றேன் நான்.

"ரொம்ப சரி. டிசம்பர் 22ஆம் தேதி, ஐந்து நாட்களுக்கு முன்னால்தான். ஜான் ஹார்னர் என்ற பிளம்பர் அதை அந்த அம்மணியின் நகைப் பெட்டியிலிருந்துத் திருடி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டான். அவனுக்கு எதிரான சாட்சியங்கள் மிகப் பலமாக இருக்கவே அந்தக் கேஸை ஏற்கனவே கோர்ட்டுக்கு மாற்றிவிட்டார்கள். இங்கே எங்கேயோ அதைப் பற்றிய செய்தி இருந்தது", என்றபடி அருகிலிருந்த செய்தித்தாள்களின் தேதியைப் பார்த்து பார்த்துப் புரட்டி, ஒரு செய்திதாளைக் கையில் எடுத்து இரண்டாக மடித்து அதிலிருந்த பத்தியை உரக்க வாசித்தார்.

"ஹோட்டல் காஸ்மோபாலிட்டன் நகைத் திருட்டு. 22ஆம் தேதி ஜான் ஹார்னர் என்பவன் கவுன்ட்டஸ் மோர்சர் அவர்களின் நகைப் பெட்டியிலிருந்து 'நீல மாணிக்கம்' எனப்படும் விலைமதிப்பில்லா கல்லைத் திருடிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறான். ஹோட்டலில் வேலை செய்யும் ஜேம்ஸ் ரைடர் என்ற உதவியாளன், ஹார்னரை கவுன்ட்டஸ்ஸின் அறைக்கு ஒரு கம்பியைப் பொருத்துவதற்காக அழைத்துச் சென்றதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். சிறிது நேரம் ஜேம்ஸ் ஹார்னருடன் அறையில் இருந்த அவன் வேறு ஒரு வேலைக்கு அழைக்கப்பட்டதால் அங்கிருந்து சென்றுவிட்டான். திரும்பி வந்து பார்த்த போது ஜேம்ஸ் ஹார்னர் அங்கு இல்லாதது மட்டுமல்லாமல், அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த நகைப் பெட்டி திறந்து காலியாக டிரஸ்ஸிங் மேஜை மீதுக் கிடந்தது. இந்த நகைப்பெட்டியில் தான் கவுன்ட்டஸ் அந்தக் கல்லையும் வைத்திருப்பது வழக்கம். ரைடர் உடனே தகவல் தெரிவிக்க, ஜேம்ஸ் ஹார்னர் அன்று மாலையே கைது செய்யப்பட்டான். ஆனால் அவனிடமோ அவனுடைய அறையிலோ அந்தக் கல் கிடைக்கவில்லை. கவுன்ட்டஸின் பணிப்பெண் காத்தரின் குஸக், ரைடர் கத்திய சத்தத்தைக் கேட்டு அறைக்குள் ஓடி வந்து பார்த்ததாகவும், அங்கே ரைடர் கூறியபடியே காட்சிகள் இருந்ததாகவும் தெரிவித்தாள். டிவிஷனைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பிராட்ஸ்ட்ரீட், ஹார்னரைத் தான் கைது செய்ததாகவும், அப்படிச் செய்யும் போது அவன் அதை எதிர்த்து மிகவும் பலமாகப் போராடினான் என்றும், தனக்கு எதுவும் தெரியாது என்றும், தான் எதையும் திருடவில்லை என்றும் ஆணித்தரமாகக் கூறினான் என்றும் சாட்சி கூறினார். ஆனால் ஏற்கனவே ஒருமுறை திருட்டுக் குற்றத்திற்காக சிறை சென்றவன் ஜேம்ஸ் ஹார்னர் என்பதால் கேஸ் நேரே கோர்ட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஜேம்ஸ் ஹார்னர் மயங்கி விழ, அவனைக் கோர்ட்டிலிருந்துத் தூக்கிச் செல்லவேண்டியதாயிற்று".

"ஹூம்! போலீஸ் கோர்ட்டின் அழகு இது தான்", என்றார் ஹோம்ஸ் செய்தித்தாளை ஓரமாக வீசியபடி. "இப்போது நாம் கண்டுபிடிக்கவேண்டியது எப்படி நகைப்பெட்டியிலிருந்துக் காணாமல் போன நீலக் கல் டோட்டன்ஹாம் கோர்ட் ரோடில் இருந்து எடுக்கப்பட்ட வாத்தின் வயிற்றில் வந்தது என்று தான். பாரும் வாட்சன், நீர் சொன்னது போல் இது ஒன்றும் நேர விரயம் அல்ல. நமது அனுமானங்கள் இப்போது முக்கியம் வாய்ந்தவை ஆகிவிட்டன. இங்கிருக்கும் நீலக் கல், வாத்தின் வயிற்றிலிருந்து வந்தது. வாத்து மிஸ்டர். ஹென்றி பேக்கரிடமிருந்து வந்தது. ஆகையால் இப்போது நாம் இந்த நைந்தத் தொப்பியின் சொந்தக்காரரான அந்தக் கனவானைத் தேடிப்பிடித்து அவருக்கு இந்த சம்பவங்களில் என்ன பங்கு என்பதைக் கண்டறியவேண்டும். அவரைக் கண்டுபிடிக்க முதலில் எளிய வழி ஒன்றைக் கையாளலாம். இன்றைய மாலை நாளிதழ்களில் ஒரு விளம்பரத்தைக் கொடுக்கிறேன். அதற்கு ஏதும் பதில் இல்லையென்றால் வேறு வழிகளை முயற்சிக்க வேண்டும்".

"என்னவென்று விளம்பரத்தில் சொல்லப்போகிறீர்கள்?"

"அந்தப் பேப்பரையும் ஒரு பென்சிலையும் எடுத்துக் கொடும், வாட்சன்.

 'கூட்ஜ் தெருவின் முனையில் கண்டெடுக்கப்பட்டவை - ஒரு வாத்து மற்றும் ஒரு கறுப்புத் தொப்பி. மிஸ்டர். ஹென்றி பேக்கர் இவைகளை 221B, பேக்கர் தெரு என்ற முகவரியில் இன்று மாலை 6.30 மணிக்கு பெற்றுக்கொள்ளலாம்'.

ம், இது சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறது".

"ஆமாம். ஆனால் இதை அந்த மனிதர் பார்ப்பாரா?"

"நாளிதழ்களில் இப்படி ஒரு விளம்பரம் வருமா என்று நிச்சயம் பார்த்துக்கொண்டு தான் இருப்பார் என்று நினைக்கிறேன். கஷ்டத்தில் இருக்கும் ஒரு மனிதருக்கு இந்த இழப்பு கொஞ்சம் பெரியது தான். கடையின் ஜன்னல் கண்ணாடியைத் தெரியாத்தனமாய் உடைத்துவிட்ட அதிர்ச்சியிலும், ஓடிவரும் பீட்டர்சனைப் பார்த்த பயத்திலும் அவர் அங்கிருந்து ஓடுவதைத் தவிர வேறு எதையும் நினைக்கவில்லை. ஆனால் வீட்டிற்குச் சென்றதும் தன்னைத்தானே நொந்துகொண்டிருப்பார், ஏன்தான் வாத்தைக் கீழே போட்டோமென்று. அவருடைய பெயர் விளம்பரத்தில் இருக்கிறதல்லவா, அவர் பார்க்காவிட்டாலும் அவருக்குத் தெரிந்தவர்கள் அவரிடம் அந்த விளம்பரத்தை நிச்சயம் சுட்டிக் காட்டுவார்கள். பீட்டர்சன், இதை விளம்பர ஏஜென்சியிடம் கொடுத்து மாலை நாளிதழ்களில் வெளியிடச் சொல்".

"எதில், சார்?"

"ஓ! எல்லாவற்றிலும்".

"நீலக் கல்! அது என்னிடம் இருக்கட்டும்."

"சரி, சார். இந்த நீலக் கல்?"

"ஆ! நீலக் கல்! அது என்னிடம் இருக்கட்டும். ஹாங், அப்புறம், பீட்டர்சன், நீ திரும்பி வரும் போது ஒரு வாத்தை வாங்கி வா. மிஸ்டர். ஹென்றி பேக்கர் இன்று மாலை வாத்தைக் கேட்டு வந்தால் உன் குடும்பம் இப்போது உண்டு முடித்த  வாத்திற்கு பதிலாக அவருக்குக் கொடுப்பதற்கு வேறு ஒன்று வேண்டுமல்லவா?"

பீட்டர்சன் அங்கிருந்து சென்றதும் ஹோம்ஸ் அந்த மாணிக்கக் கல்லை எடுத்து வெளிச்சத்திற்கு நேரே விரலிடையில் தூக்கிப் பிடித்தார். "எப்படி மின்னுகிறது பாரும், வாட்சன். இந்த மின்னும் ஒளி இதைச் சுற்றி நடக்கும் குற்றங்களை மறைக்க செய்து விடுகிறது. எந்த ஓர் அற்புதக் கல்லும் அப்படித்தான். சில மிகப் பழமையான கற்களின் பட்டைத் தீட்டப்பட்ட ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு குற்றத்திற்கு சாட்சியாக இருக்கும். மாணிக்கத்தின் அத்தனை குணங்களையும் கொண்ட இந்தக் கல்லின் ஈர்ப்பே இது மாணிக்கச் சிவப்பாக இல்லாமல், நீலமாக ஒளிர்வது தான். தெற்கு சீனாவின் அமாய் நதிக் கரையில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கல்லுக்கு வயது இன்னும் இருபது கூட ஆகவில்லை.  இந்த இளம் வயதிலேயே இதன் பொருட்டு இரண்டு கொலைகள், ஒரு ஆசிட் வீச்சு, ஒரு தற்கொலை, அப்புறம் ஏகப்பட்ட திருட்டுகளுக்கு காரணகர்த்தாவாக இருக்கிறது இந்த ஒளிரும் கரித்துண்டு. இதைப் பார்ப்பவர்கள் நம்புவார்களா, தூக்குக் கயிற்றிற்கும் சிறைச்சாலைக்கும் இது கட்டியம் கூறும் என்று? இப்போதைக்கு இது என் இரும்புப் பெட்டியிலேயே இருக்கட்டும். இது என்னிடம் தான் இருக்கிறதென்று கவுண்ட்ஸிற்கு தகவல் கொடுத்துவிடுகிறேன்".

"இந்த ஹார்னர் குற்றமற்றவன் என்று நினைக்கிறீர்களா, ஹோம்ஸ்?"

"சொல்லமுடியவில்லை".

"சரி, அந்த இன்னொரு மனிதன், ஹென்றி பேக்கர் - அவன் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று நினைக்கிறீர்களா?"

"அநேகமாக அந்த ஹென்றி பேக்கருக்கு தான் வாங்கிய வாத்து, தங்கத்தால் ஆன வாத்தை விட விலை உயர்ந்தது என்று ஒரு துளியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தான் நினைக்கிறேன். என் விளம்பரத்திற்கு அவர் பதிலளித்து என்னை வந்து பார்க்க வந்தால், ஒரு சிறிய பரீட்சை வைத்து அதை உறுதி செய்து விடமுடியும்".

"அப்படியென்றால் அது வரை நீங்கள் எதுவும் செய்ய முடியாதா?"

"ம்ஹூம்".

"சரி, அப்படியெனில் என் பேஷண்டுகளைப் போய் பார்த்துவிட்டு நீங்கள் விளம்பரத்தில் கூறியிருக்கும் நேரத்திற்கு நான் மறுபடியும் இங்கே வருகிறேன். இந்த சிக்கல் எப்படி அவிழ்கிறதென்று நான் பார்க்கவேண்டும்".

"ஏழு மணிக்கு இரவு உணவிற்கு வந்து விடும், வாட்சன்", என்று என்னை வழியனுப்பி வைத்தார் ஹோம்ஸ். 


தொடரும் …

Write a comment ...