வேண்டும் என்று ஆசை ஆசையாய் வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் பிரிக்கப்படாமலேயே வரிசை கட்டி நிற்க நேர்வது எல்லாப் புத்தகப்பிரியர்களுக்கும் நடக்கும் ஒன்று என்று தோன்றுகிறது. நம்முடைய அலமாரியில், நாமே பார்த்துப் பார்த்து வாங்கிய புத்தகங்களாகவே இருந்தாலும் கூட, அவற்றை வாசிப்பதற்குக் கூட நமக்கென்று ஒரு நேரமும் அந்தப் புத்தகத்திடமிருந்து கிட்டத்தட்ட ஒரு அனுமதியும் கிடைக்கப்பெற வேண்டும். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கி இரண்டு நாட்கள் முன்பு வரை அந்த நேரமும் அனுமதியும் கிடைக்காமல் இருந்த புத்தகம் 'யானை டாக்டர்'.
டாக்டர். கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கதை என்று ஐந்து வார்த்தைகளிலும் கூட விவரித்து(?) விடலாம் இந்தப் புத்தகத்தை. இந்தச் சிறுகதை முதலில் எப்போது எங்கே வெளிவந்தது என்று தெரிந்துகொள்ள இயலவில்லை. தனி நூலாக தன்னறம் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ள போதும் என் கைகளில் வந்து சேர்ந்தது இயல்வாகை பதிப்பகத்தின் வெளியீடு. ஒரு புத்தகத்தில் இருக்கும் காப்புரிமை, வெளியான வருடம் ஆகிய வெளியீட்டுத் தகவல்கள் எவற்றையும் காண முடியவில்லை. இப்படிப்பட்ட புத்தகங்களுக்கு அப்படிப்பட்ட விவரங்கள் தேவையில்லாமலேயேப் போய்விடுகின்றன.
டாக்டர். கிருஷ்ணமூர்த்தி நாற்பத்தைந்து வருடங்கள் தமிழ்நாடு வனத்துறையில் காட்டு மிருகங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட்ட மிருகங்களுக்கும் மிருக வைத்தியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவருடைய யானைகளைப் பற்றிய அறிவும் அனுபவமும் வைத்திய நிபுணத்துவமும் அவரை இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் யானைகளுக்கான சிறப்பு மருத்துவராக்கி அவரின் ஆலோசனைகளை நாடச் செய்தன .
அவருடைய பணி காலத்தின் ஒரு சிறிய கட்டத்தைத் தொட்டுக் காட்டிச் செல்லும் கொஞ்சம் கற்பனை கலந்த உண்மைக் கதை(?) 'யானை டாக்டர்'. இந்தக் 'கதாபாத்திரம்' ('கதை' என்றால் அதில் வருபவர்கள் கதாபாத்திரங்கள் தானே!) கற்பனை அல்ல. 1929 - 2002 வரை வாழ்ந்து மறைந்த ஒரு மாமனிதர். டாக்டர். கிருஷ்ணமூர்த்தி என்றோ டாக்டர். கே (Doctor. K) என்றோ கூகுளில் தட்டினால் வந்து விழும் ஓராயிரம் தகவல்கள். அவரது வாழ்க்கை, அவர் எழுதிய நூல்கள், அவர் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், அவர் பெற்ற விருதுகள், அவர் வரையறுத்து நெறிப்படுத்திய விலங்குகளுக்கான மருத்துவ முறைகள், பிரேத பரிசோதனை முறைகள் என்று வேண்டிய மட்டும் தகவல்கள் விரல் சொடுக்கில் ஓடி வரும். அப்புறம் ஏன் இந்தப் புத்தகம்?
முன்னுரையில் ஆசிரியர் ஜெயமோகன் கூறுகிறார்.
'முன்னுதாரண மனிதர்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஆகிவிட்ட காலகட்டமிது. முன்பு இலக்கியங்களும், கலைகளும் அவர்களை முன்னிறுத்தின. இலக்கியம் கேளிக்கையாகவும், அரசியலாகவும் உருமாறிவிட்டிருக்கின்றது இன்று. ஊடகங்கள் அனைத்தும் பரபரப்புகளை நாடுகின்றன. முன்னுதாரணமான மாமனிதர்கள் இன்றும் இருப்பார்கள். நம் கண்களுக்கு அவர்கள் தட்டுப்படுவதில்லை, அவ்வளவுதான். அவர்களில் ஒருவர் டாக்டர். கே. அவரை வரலாற்றின் முன் அடுத்த தலைமுறையின் முன் கொண்டு சென்று நிறுத்துவதே இச்சிறுகதையின் நோக்கம்.'
நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்து மிருக வைத்தியராக பட்டம் பெறும் ஒரு இளைஞன், மனிதன், நாற்பத்தைந்து வருடங்களாகக் காட்டில் வாழும் வாழ்வை இப்போது உள்ள தலைமுறையினரால் கற்பனையாவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை. It takes a special kind of human being to do this. எல்லோராலும், ஏன் சிலரால் கூட, வாழமுடியாத, வாழத் தயாராய் இல்லாத வாழ்க்கைமுறை. அப்படிப்பட்ட ஒரு வாழ்வை வாழ்ந்து வைத்திய வழிமுறைகளை வழிவகுத்து விட்டுச் சென்றிருக்கும் ஒரு மனிதரை வெறும் தகவல்கள் மூலமும் காட்டில் நடக்கும் சில சம்பவங்கள் மூலமும் மட்டுமே சித்தரிக்க முயன்றிருந்தால் 'யானை டாக்டர்' புத்தகம் 'யானை டாக்டர்' மனிதருக்கு சிறிதளவும் நியாயம் செய்யாது என்பதை உணர்ந்து தான் அவரின், 'வலிகளை கவனிக்கறது ரொம்ப நல்ல பழக்கம். அதை மாதிரி தியானம் ஒண்ணும் கெடையாது. நாம யாரு, நம்ம மனசும் புத்தியும் எப்டி ஃபங்ஷன் பண்ணறது எல்லாத்தையும் வலி காட்டிரும். வலின்னா என்ன? சாதாரணமா நாம் இருக்கறத விட கொஞ்சம் வேற மாதிரி இருக்கற நிலைமை. ஆனால் பழையபடி சாதாரணமா ஆகணும்ன்னு நம்ம மனசு போட்டு துடிக்குது. அதான் வலியிலே இருக்கற சிக்கலே. பாதி வலி, வலிய கவனிக்க ஆரம்பிச்சாலே போயிடும். வெல், டெஃபனிட்லி கடுமையான வலிகள் இருக்கு. மனுஷன் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. ஹி இஸ் ஜஸ்ட் அனதர் அனிமல்னு காட்டுறது அந்த மாதிரி வலி தான்' வார்த்தைகள் மூலம், வாழ்க்கை தத்துவத்தின் மூலம் டாக்டரை கொஞ்சமே கொஞ்சமேனும் உணர்ந்து கொள்ள வைக்கிறார் ஆசிரியர்.
சிறுகதை தான். ஆனாலும் முடித்த பின் எஞ்சுவது ஓர் ஆகாச ஆயாசம். இப்பேற்பட்ட மனிதர்களும், அவர்களின் வாழ்வும், பூமியில் வெறும் காற்றடைத்த பைகளாய் மட்டுமே உலவிக்கொண்டிருக்கும் அநேக ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தின் collective consciousnessல் ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தாதே என்ற உண்மை தருவது ஆயாசத்தை அன்றி வேறென்னவாக இருக்க முடியும்? இந்த ஆயாசத்திற்கான காரணம் கதையின் இந்த வரிகள்.
'மனிதனின் கீழ்மைகளை ஒவ்வொருநாளும் முகத்திலறைந்தது போலப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் காட்டில் இருக்கவேண்டும். என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலி மதுக்குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள் என்பது. மற்ற எந்த மிருகத்தை விடவும் யானைக்கு மிக அபாயகரமானது அந்த குப்பி உடைசல். யானையின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது. குப்பிகள் அநேகமாக மரத்தில் மோதி உடைந்து மரத்தடியிலேயே கிடக்கும். யானை அதன் மகத்தான எடையுடன் அதன் மேல் காலை வைத்தால் குப்பி நேராக அதன் பாதங்களுக்குள் முழுக்க புகுந்துவிடும். இருமுறை அது காலைத்தூக்கி வைத்தால் நன்றாக உள்ளே செல்லும். அதன் பின்னால் யானை நடக்க முடியாது. இரண்டே நாட்களில் காயம் சீழ் வைக்கும். புழுக்கள் உள்ளே நுழையும். புழுக்கள் சதையை துளைத்து சீழை உள்ளே கொண்டு செல்லும். முக்கியமான குருதிப்பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டதென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது.'
இ-பாஸ் வழங்கி மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் முறையை நிரந்தரமாக நடைமுறைக்கு கொண்டு வாருங்கள் தமிழக அரசே என்று கெஞ்ச வைக்கும் வார்த்தைகள். நிரந்தரமாக்கினால் மட்டும் என்ன? மனிதன் மாறவா போகிறான்?
'யானை டாக்டர்' கதை பல மொழிகளில் வெளியாகி இலட்சக்கணக்கான பிரதிகள் விற்று பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக டாக்டர். கே. பழனி அவருடைய குறிப்பில் கூறுகிறார். ஏனோ அந்த இலட்சங்கள் இந்த ஆயாசத்தைக் குறைக்கப் பயன்படவில்லை.
ஆனாலும் அந்த ஆயாசம் கூட இந்தக் கதையைப் புத்தகமாக வெளியிட்ட அவருக்கும் இயல்வாகைக்கும் குக்கூ நூலகத்தாருக்கும் சொல்லவேண்டிய நன்றிகளையும் பாராட்டுதல்களையும் கொஞ்சமும் மட்டுப்படுத்தவில்லை. Kudos to the whole team! இப்படி ஒரு நேர்த்தியான புத்தகத்தைப் பார்த்து நீண்ட நெடுங்காலமாகிறது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் தான் இந்த அளவில், கெட்டி அட்டையுடனும் வழவழப்பான பக்கங்களுடனும் வடிவமைக்கப் பட்டிருக்கும். எத்தனை அருமையான பக்க வடிவமைப்பு! பார்த்ததும் erstwhile சோவியத் ரஷ்யாவின் Raduga Publications புத்தகங்களை நினைவுபடுத்தியது! கெட்டியான அட்டையில் மழமழ காகிதத்தில் தெளிவான, திருத்தமான, பிழையில்லாத அச்சுக்கோப்பில் அற்புதமான புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டிருக்கும் உலகத்தரம் வாய்ந்த படைப்பு. இலாபக்கணக்குகள் ஏதுமின்றி ஆத்மார்த்தமாக உருவாக்கி வழங்கப்பட்டிருக்கும் ஒரு passionate product இது!
அதிலும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படங்களைப் பற்றித் தனியே குறிப்பிட்டே ஆகவேண்டும். எத்துணை அற்புதமான ஒளி ஓவியங்கள்! காட்டுயிர் ஒளிப்படவியலாளர் Shaaz Jungன் ஒளித்தீற்றல்களை நினைவுப்படுத்தும் அந்தப் புகைப்படங்களின் கர்த்தாக்களை வெளிப்படுத்தாமல் விட்டது ஒன்றே புத்தகத்தின் ஒரே குறை. பரவாயில்லை. இருந்துவிட்டுப் போகட்டும் திருஷ்டிப் பரிகாரமாக.
ஆங்கில மொழிபெயர்ப்பையும் உடன் சேர்த்து பிரசுரித்திருப்பது எதிர்பாராத ஆச்சர்ய சந்தோஷம். தமிழின் மணமும் கனமும் இன்னும் நெஞ்சை விட்டு அகலாததால் ஆங்கிலம் மற்றொரு நாளுக்காகக் காத்திருக்கிறது.
வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்று பட்டியல் ஏதேனும் உங்களிடம் இருந்தால் 'யானை டாக்டர்'க்கு அதில் ஒரு இடம் கொடுங்கள். You won’t regret it!
Write a comment ...