காலம்: கிமு 1776
இடம்: பாபிலோன்
“கிமு 1776-ல் பாபிலோன் தான் உலகின் மிகப் பெரிய நகரம். ஒரு மில்லியன் குடிமக்களுக்கும் மேலாகக் கொண்டு, பாபிலோனியப் பேரரசு தான் அநேகமாக உலகின் மிகப் பெரும் பேரரசாகத் திகழ்ந்தது. இன்றைய ஈராக், சிரியா மற்றும் ஈரானின் பெரும் பகுதிகளை அந்த அரசு தன் ஆட்சியின் கீழ் கொண்டிருந்தது. அரசன் ஹமுராபி இன்றைக்கும் அறியப்படும் பாபிலோனியாவின் பேரரசன். அவனுடைய புகழுக்கு முக்கிய காரணம் அவனுடைய பெயரைத் தாங்கி நிற்கும் 'Code of Hammurabi' என்ற ஆவணம். இந்த ஆவணம் சட்டங்களையும் நீதித்துறையின் முடிவுகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைத்த ஓர் ஆவணம். ஹமுராபியை ஒரு நீதி பிறழாத அரசனாக முன் வைப்பதும், பாபிலோனிய பேரரசு முழுவதும் கடைபிடிக்க வேண்டிய ஒரேவிதமான சட்ட விதிகளை எடுத்துரைப்பதும், வருங்கால சந்ததியினருக்கு நீதி என்றால் என்ன என்பதை எடுத்துரைப்பதும், நீதிமானான ஓர் அரசன் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதும் தான் 'Code of Hammurabi' யின் நோக்கம்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள சில தீர்ப்புகள் (196-9 & 209-14) இவை:
196. ஓர் உயர்குடி ஆண் இன்னொரு உயர்குடி ஆணின் கண்ணைக் குருடாக்கினால் அவனுடைய கண்ணைக் குருடாக்க வேண்டும்.
197. அவன் ஓர் உயர்குடி ஆணின் எலும்பை உடைத்தால், அவனுடைய எலும்பை உடைக்க வேண்டும்.
198. அவன் ஒரு சாமானியனின் கண்ணைக் குருடாக்கினாலோ, அல்லது எலும்பை உடைத்தாலோ, அவன் 60 ஷெகெல்[i] வெள்ளியை கொடுக்க வேண்டும்.
199. அவன் ஓர் உயர்குடி ஆணின் அடிமையின் கண்ணைக் குருடாக்கினாலோ எலும்பை உடைத்தாலோ, அந்த அடிமையின் விலையில் பாதியை அந்த உயர்குடி ஆணிடம் கொடுக்கவேண்டும்.
209. ஓர் உயர்குடி ஆண் ஓர் உயர்குடி பெண்ணை அடித்து அதனால் அவள் தன் வயிற்றிலுள்ள கருவை இழக்க நேர்ந்தால், அந்த உயர்குடி ஆண் அந்த கருவிற்கு ஈடாக பத்து ஷெகெல் வெள்ளியை கொடுக்க வேண்டும்.
210. உயர்குடி பெண் இறந்துவிட்டால், அந்த உயர்குடி ஆணின் மகளைக் கொல்ல வேண்டும்.
211. அவன் சாமானியப் பெண்ணை அடித்து அதனால் அவள் தன் வயிற்றிலுள்ள கருவை இழக்க நேர்ந்தால், அந்த உயர்குடி ஆண் அந்த கருவிற்கு ஈடாக ஐந்து ஷெகெல் வெள்ளியை கொடுக்க வேண்டும்.
212. அந்த சாமானியப் பெண் இறந்து போனால், அவன் முப்பது ஷெகெல் வெள்ளியை கொடுக்க வேண்டும்.
213. அவன் ஓர் உயர்குடி ஆணின் பெண் அடிமையை அடித்து அதனால் அவள் தன் வயிற்றிலுள்ள கருவை இழக்க நேர்ந்தால், அந்த உயர்குடி ஆண் அந்த கருவிற்கு ஈடாக இரண்டு ஷெகெல் வெள்ளியை கொடுக்க வேண்டும்.
214. அவன் ஓர் உயர்குடி ஆணின் பெண் அடிமையை அடித்து அதனால் அவள் இறந்து போனால், அவன் இருபது ஷெகெல் வெள்ளியை கொடுக்க வேண்டும்.”[ii]
From
Sapiens – A Brief History of Humankind
Yuval Noah Harari
காலம்: ?
இடம்: தமிழ்நாடு
“1949 மற்றும் 1950-ஆம் ஆண்டுகளில் தென்இந்தியாவில் மானுடவியல் ஆய்வுக்காக வந்த லூயிஸ் டூமண்ட், மதுரைக்கு அருகில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து ஆய்வினை மேற்கொண்டார்.
'எழுவம்பட்டி ஏட்டுச் சட்டம்' ஒன்று இருப்பதைக் கேள்விப்பட்டு, அதனைக் கண்டறிய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டார். அது பலனளிக்கவில்லை.
லூயிஸ் டூமண்ட் இந்த ஏடுகளைத் தேடிய பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நானும், எனது தோழர்களும் தேடி அலைந்தோம்.
காவல்கோட்டம் நாவலுக்கான தரவுகளைத் தேடி அலைந்த பயணம் தான் அது. வரலாற்றின் எவ்வளவோ தடயங்களை அது அள்ளி வழங்கிக்கொண்டே இருந்தது. அதில் மிகச் சிறந்த ஒன்று எழுவம்பட்டி ஏட்டுச் சட்டம்.
இந்த ஏட்டுச் சட்டம், எட்டு ஏடுகளையும் இருபது பகுதிகளையும் கொண்டுள்ளது. அதில் பழக்கவழக்கம், சடங்குமுறைகள், உறவுகள் சார்ந்த விளக்கம் பலவும் இடம் பெற்றுள்ளன. நான்காவது ஏட்டின் பத்தாவது பத்தி குற்றத்தையும் அதற்கான தண்டனையைப் பற்றியும் கூறுகிறது.
“ஆணுக்கு பலி சேதமானால், 70 பொன். கொண்டையை அறுத்துப்போட்டால், அதுக்கு பலி அபராதம் 24 பொன். ஒரு கண் சேதமானால் பலி 35 பொன். மூக்கு ஒரு பக்கம் சேதமானால் பலி 12 பொன். அதில், நடுத்தண்டு ஒரு பக்கம் சேதமானால் 24 பொன். மூணு அங்கோலமும் சேர்ந்து சேதமானால் பலி 35 பொன். முன் காதுக்குப் பலி 30 பணம். நடுக்காது ஓவாயா போனால் பலி 12 பொன். கடுக்கன் போடுகிற காதுக்கு பலி 6 பொன். மேல்காதும், அடிக்காதும் சேர்ந்து போனால் பலி 15 பொன். கீக்காதும் நடுக்காதும் சேர்ந்து போனால் பலி 18 பொன். மூன்று அங்கோலமும் சேர்ந்து போனால், பலி 24 பொன். உதட்டுக்கு ஒரு பல் தெரிய ஓவாயா போனால் பலி 12 பொன். ஒரு பல் விழுந்து போனால், பலி 6 பொன். ஒரு பல் அசைவுக்கு பலி 30 பணம். கால் எலும்பு தெரிவுக்கு 12 பொன். கொண்டக்கை தெரிவுக்கு 12 பொன். மணிக்கட்டு முன்கொண்டைக்கு பலி 6 பொன். விரல் வரிசைக்கு வராமல் போனால், பலி 30 பணம். நெரிவுகளுக்கு இதில் பாதி. நெகத்துக்கு 5 பணம். இதில், கால் மிதிக்கவும், கை பிடிக்கவும் இல்லாமல் போனால், பலி 35 பொன். இதில், பாதி பலி பெண்ணுக்கு" என்கிறது 'எழுவம்பட்டி ஏட்டுச் சட்டம்””.
From
‘குற்றமும் தண்டனையும்’ - கதைகளின் கதை
சு. வெங்கடேசன்
காலத்தையும் கண்டங்களையும் கலாச்சாரத்தையும் அனாயாசமாக இழுத்து இணைக்கிறது மனித மனத்தால் 'நீதி' என்று நினைத்து பின்னப்படும் தண்டனைக் கோடு.
[i] வெள்ளிக் காசு மற்றும் பண்டைய இஸ்ரேலின் எடை அளவுக் குறியீடு
[ii] அதிகாரபூர்வமற்ற மொழிபெயர்ப்பு
Write a comment ...