ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - V


அரை மணி நேரத்தில் மௌனமாய் பயணம் செய்து பேக்கர் தெருவிற்கு வந்தடைந்தோம். வழி நெடுகிலும் ஜேம்ஸ் ரைடர் எதுவும் பேசவில்லையென்றாலும் அவனின் வேகமான மூச்சும், பிசையும் கைகளும் அவனுள் இருந்த பதட்டத்தைப் பறைசாற்றின.

"ஹா! இந்தக் குளிருக்கு இந்தக் கணப்பு நெருப்பு நிரம்பவே இதமாக இருக்கிறது. அந்த கூடைச் சேரில் உட்கார்ந்துகொள், ரைடர். உன்னைப் பார்த்தால் குளிரில் விறைத்தவன் போல் தெரிகிறது. உனக்கு வேண்டியதை சொல்லும் முன் என் காலணிகளை நான் அணிந்து கொள்கிறேன். ஹம்! இப்போது சொல், உனக்குத் தேவை அந்த வாத்துக்கள் என்ன ஆயின என்ற தகவல், அல்லவா?"

"ஆமாம், சார்!"

"அதிலும் குறிப்பாக வாலின் குறுக்கே கறுப்புப் பட்டை கொண்ட அந்த வெள்ளை வாத்து, என்ன ஆயிற்று என்று தெரிந்தால் போதும் உனக்கு, அப்படித்தானே?"

 "சார், அந்த வாத்து எங்கே சென்றது என்று சொல்ல முடியுமா?" என்று கேட்ட ரைடரின் குரல் நடுங்கியது.

"இங்கே".

"இங்கேயா?"

"ஆம், இங்கே தான். என்ன ஓர் அற்புதமான பறவை அது! அந்த வாத்து இறந்த பின் ஒரு முட்டை இட்டது - பளபளத்து ஜொலிக்கும் ஒரு நீல முட்டை. அந்த அதிசய முட்டை இப்போது என்னிடம் தான் இருக்கிறது".

அதிர்ச்சியில் எழுந்து நின்றவன் தடுமாறி விழப்போனான். பக்கத்தில் இருந்த அலமாரியின் பலகையைப் பிடித்தவன் பேயறைந்தவனைப் போல் ஹோம்ஸை வெறித்துப் பார்த்தான். நீல மாணிக்கத்தைப் பெட்டியில் இருந்து எடுத்த ஹோம்ஸ் அதை ரைடரிடம் விரலிடுக்கில் வைத்துத் தூக்கிக் காட்டினார். கணப்பு இடத்தின் நெருப்பின் ஒளி பட்டு அது தகதகத்தது. ஜேம்ஸ் ரைடர் அந்தக் கல்லை வைத்தக் கண் வாங்காமல் சில நொடிகள் பார்த்தான். அதை தனது என்று உரிமை கொண்டாடுவதா அல்லது அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுக்கித் தள்ளுவதா என்ற குழப்பத்தில் இருப்பது அவன் முகத்தில் தெரிந்தது.

"ஆட்டம் முடிந்துவிட்டது, ரைடர்!" என்றார் ஹோம்ஸ்.

அதைக் கேட்ட ரைடர் மீண்டும் தடுமாறி எரிந்துகொண்டிருந்த நெருப்பினுள் விழப்போனான்.

"வாட்சன்! அவனை ஒரு கைப் பிடியும். இல்லாவிட்டால் நெருப்பினுள் விழுந்துவிடுவான் பயல். ஒரு வாய் பிராண்டி கொடும் அவனுக்கு. ஹா! முகம் இப்போது கொஞ்சம் தெளிவாய் உள்ளது. திட்டமிட்டத் திருட்டிற்கு சிறைக்குச் செல்லும் தெம்பு இவனிடம் இல்லை. என்ன ஒரு சோதா பயல்!" என்றார் ஹோம்ஸ்.

பிராண்டி உள்ளே சென்றதும் சற்றேத் தெளிவடைந்திருந்த ரைடர், ஹோம்ஸை பயத்துடன் பார்த்தபடி பம்மிப் போய் அமர்ந்திருந்தான்.

"எனக்குத் தேவையான எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன, ரைடர். நீ எனக்கு சொல்ல வேண்டியது ஒரு சில விஷயங்கள் தான். அந்தத் தகவல்களும் எனக்குக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது நீ அதை சொல்லிவிட்டால் இந்தக் கேஸை முழுமையாக்க அது உதவும். சொல்! கவுன்டஸ் மோர்சரின் நீல மாணிக்ககத்தைப் பற்றி நீ கேள்விப்பட்டாய், அப்படித்தானே?"

"காத்தரின் குஸாக் தான் அதைப் பற்றி எனக்குச் சொன்னாள்", என்றான் ரைடர் உடைந்த குரலில்.

"ஹூம்! கவுன்டஸ்ஸின் வேலைக்காரி. சட்டென்றுக் கைக்குக் கிட்டும் செல்வத்தின் ஆசை, உனக்கு முன் பலரைப் போல், உன்னையும் விடவில்லை. ஆனால் அதை அடைய நீ எடுத்த முயற்சியில் உன் வில்லத்தனத்தைக்  காட்டிவிட்டாய். கடைந்தெடுத்த அயோக்யனாக ஆவதற்கான அத்தனைத் தகுதிகளும் உன்னிடம் இருக்கின்றன, ரைடர்", என்ற ஹோம்ஸ் ரைடரை உற்றுப் பார்த்துத் தொடர்ந்தார். "அந்த பிளம்பர் ஹார்னர் இதற்கு முன் இப்படி ஒரு கேசில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று உனக்குத் தெரியும். அதனால் இதில் அவனை இழுத்துவிட்டால் சந்தேகம் நிச்சயம் அவன் மீது தான் விழும் என்றும் உனக்குத் தெரியும். அதனால் நீ என்ன செய்தாய்? மோர்சர் சீமாட்டியின் அறைக்கு அவனை வரவழைக்கும் படி ஏதோ ஒரு காரியத்தைச் செய்து வைத்தாய். அநேகமாக அது அந்த வேலைக்காரியின் உதவியுடன் தான் செய்திருப்பாய். அந்த வேலையை செய்து முடிக்க ஹார்னர் வரும் படி நீ பார்த்துக் கொண்டாய். அப்படி அவன் வந்து சென்றதும், சீமாட்டியின் நகைப் பெட்டியிலிருந்து இந்தக் கல்லைத் திருடிவிட்டு, அதன் பின் நீயும் குசாக்கும் சேர்ந்து திருடு போனதாய் கூச்சலிட்டு அந்த அப்பாவி மனிதனைக் கைது செய்ய வைத்து - "

ரைடர் சடாரென்றுத் தரையில் விழுந்து ஹோம்ஸின் முழங்கால்களைக் கட்டிக்கொண்டான். "ஐயோ! சார்! காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!" என்று கத்தினான். "என் அப்பா! என் அம்மா! இது தெரிந்தால் அவர்கள் என்ன ஆவார்கள்! அவர்கள் இதயம் சுக்குநூறாய் உடைந்துவிடும்.  இதற்கு முன் நான் எந்தத் தவறையும் செய்ததில்லை, சார்! இனியும் செய்யமாட்டேன். பைபிளின் மீது சத்தியம்! என்னை சிறையில் அடைத்துவிடாதீர்கள், சார்! தயவுசெய்து என்னை போலீசில் ஒப்படைத்துவிடாதீர்கள்!"

"என்னை சிறையில் அடைத்துவிடாதீர்கள், சார்!"

"ஏய்! காலை விட்டுவிட்டு எழுந்து உன் நாற்காலியில் உட்கார்", என்றார் ஹோம்ஸ் அதட்டலான குரலில். "இப்போது இந்தக் கெஞ்சு கெஞ்சுகிறாய்! அந்த அப்பாவி ஹார்னரை அவனுக்கு சம்பந்தமே இல்லாத இந்தக் குற்றத்தில் மாட்டிவிடும் முன் ஒரு கணம் யோசித்தாயா?"

"நான் எங்கேயாவது ஓடிவிடுகிறேன், மிஸ்டர். ஹோம்ஸ். ஏன், நாட்டைவிட்டேக் கூடப்  போய்விடுகிறேன். அப்போது அவனுக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டு தள்ளுபடியாகிவிடும்".

"அதைப் பற்றிப் பிறகு பேசலாம். இப்போது நடந்ததைச் சொல். மாணிக்கம் எப்படி வாத்தினுள் சென்றது? வாத்து எப்படி சந்தைக்கு வந்தது? உண்மையைச் சொல்வதில் தான் உன் விமோசனம் இருக்கிறது".

ரைடர் உதடுகளை நாவினால் ஈரப்படுத்திக்கொண்டான்.

"நடந்ததை நடந்தபடி சொல்லிவிடுகிறேன், சார். ஹார்னரை போலீஸ் கைது செய்ததும் எனக்குப் பயம் வந்துவிட்டது. அவனிடம் மாணிக்கம் இல்லை என்று கண்டுபிடித்தால் போலீஸ் ஒருவேளை என்னையும் என் அறையையும் சோதனையிட வாய்ப்பிருக்கிறதென்று நினைத்தேன். அதனால் அந்தக் கல்லை ஒளித்து வைக்க இடம் தேடினேன். ஹோட்டலில் எந்த இடமும் சரியானதில்லை என்று தெரியும். அதனால் ஏதோ வேலையாகப் போவதைப் போல் அங்கிருந்து வெளியே வந்து நேரே என் சகோதரியின் வீட்டிற்குச் சென்றேன். ஓக்ஷாட் என்பவனை மணந்து கொண்டு பிரிக்ஸ்டன் ரோட்டில் ஒரு வீட்டில் வசித்து வருகிறாள் அவள். சந்தைக்கு வாத்துக்களையும் வான்கோழிகளையும் வளர்த்து விற்பவள் அவள். அங்கே செல்லும் வழி நெடுக நான் பார்க்கும் மனிதரெல்லாம் என்னையே பார்ப்பது போலவும், எல்லோருமே போலீஸ்காரர்கள் போன்றும் எனக்குத் தோன்றியது. அந்த நடுங்கும் குளிர் இரவினில் கூட எனக்கு வேர்த்துக் கொட்டியது. ஒரு வழியாக என் சகோதரியின் வீட்டை அடைந்தபோது அவள் நான் ஏன் இப்படி வெளிறிப்போய் இருக்கிறேன் என்று விசாரித்தாள். ஹோட்டலில் நடந்தத் திருட்டு என்னை நிலைகுலையச் செய்துவிட்டது என்று அவளிடம் கூறி சமாளித்துவிட்டு அவள் வீட்டின் பின் புறம் சென்று என் பைப்பைப் பற்றவைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வதென்று யோசித்தேன்.

முன்னொரு காலத்தில் எனக்கு மாட்ஸ்லி என்றொரு நண்பன் இருந்தான். சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த அவன் அப்போது தான் சிறையிலிருந்து விடுதலையாகி இருந்தான். திருடர்கள் அவர்கள் திருடிய பொருட்களை எப்படிக் கைமாற்றுகிறார்கள் என்று அவன் என்னிடம் ஒருமுறை சொன்னது என் நினைவுக்கு வந்தது. அவனிடம் இந்த விஷயத்தைச் சொல்லலாம் என்று முடிவெடுத்தேன். என்னை அவன் காட்டிக்கொடுக்க மாட்டான் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அவனைப் பற்றிய சில விஷயங்களை நான் தெரிந்துவைத்திருந்தேன். அவன் நிச்சயம் மாணிக்கத்தை விற்றுக் காசாக்க எனக்கு உதவுவான் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் மாணிக்கத்தை எப்படி அவனிடம் கொண்டு சேர்ப்பது? ஹோட்டலில் இருந்து என் சகோதரியின் வீட்டிற்கு வருவதற்குள் நான் பட்ட பாட்டை இன்னொரு முறை அனுபவிக்க என்னிடம் தெம்பு இல்லை. அப்படியே நான் அந்தக் கல்லை அவனிடம் எடுத்துச் சென்றாலும், என்னை ரோட்டில் வைத்து எந்தப் போலீஸாவது சோதனை செய்தால் என் கோட்டுப் பாக்கெட்டில் இருக்கும் மாணிக்கத்தை நிச்சயம் கண்டுபிடித்து எடுப்பது மட்டுமல்லாமல் என்னையும் கைது செய்துவிடுவார்கள்.  இவைகளையெல்லாம் நான் பின்புற சுவரில் சாய்ந்துகொண்டு யோசித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் என் பார்வை அங்கேத் தத்திக்கொண்டிருந்த வாத்துக்களின் மீது விழுந்தது. அப்போது தான் உலகின் தலைசிறந்த அத்தனை போலீஸ்காரர்களையும் ஏமாற்றி மாணிக்கத்தை எப்படிக் கடத்துவது என்ற யோசனை வந்தது.

சில வாரங்களுக்கு முன் என் சகோதரி எனக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு வாத்துத் தருவதாக சொல்லியிருந்தாள். அவள் வார்த்தை மாறமாட்டாள் என்று எனக்குத் தெரியும். அதனால் அந்த வாத்தை அவளிடம் கேட்டு அப்போதே வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். மாணிக்கத்தை அந்த வாத்தினுள் வைத்து என் நண்பனிடம் எடுத்து செல்லலாம் என்று யோசித்து அங்கிருந்த வாத்துக்களில் ஒன்றைத் தேர்வு செய்தேன். நல்ல கொழுகொழுவென்று இருந்த அந்த வாத்தின் வாலில் ஒரு சிறிய கறுப்புப் பட்டை இருந்தது. அதைக் குறிவைத்துப் பிடித்து அதன் அலகை அகல விரித்துத் திறந்தேன். மாணிக்கத்தை அதன் தொண்டையில் என் விரல் எட்டும் வரை தள்ளி அதன் வாயை மூடினேன். 'க்ளுக்' என்று அந்தக் கல் அதன் தொண்டையில் இறங்கி வயிற்றினுள் விழுந்தது. இந்தக் காரியத்தைச் செய்ய அதை போட்டு நான் அமுக்கியத்தில் அது படபடவென்று இறக்கைகளை அடித்துக் களேபரம் செய்தது. என்ன சத்தம் என்று பார்க்க என் சகோதரி வெளியே வந்தாள். அவளிடம் பேசுவதற்கு நான் திரும்பிய போது என் கையில் சிக்கியிருந்த அந்த வாத்து திமிறிக்கொண்டு விடுபட்டு மற்ற வாத்துக்களுடன் கலந்துவிட்டது.

"ஏய், ஜெம்! அந்த வாத்தைப் பிடித்து என்ன செய்கிறாய்?" என்று கேட்டாள்.

"ம், நீ எனக்கு கிறிஸ்துமஸிற்கு ஒரு வாத்துத் தருவதாக சொன்னாய் அல்லவா? எந்த வாத்து நன்றாகக் கொழுத்திருக்கிறதென்று பார்த்தேன்".

"ஓ! உனக்கென்று நாங்கள் தனியாக ஒரு வாத்தை கொழுக்க வைத்திருக்கிறோம். அதோ அந்த பெரிய வெள்ளை வாத்து. மொத்தம் இருபத்தி ஆறு வாத்துக்கள் இருக்கின்றன, உனக்கு ஒன்று, எங்களுக்கு ஒன்று, அப்புறம் விற்பனைக்கு இருபத்தி நான்கு".

"தாங்க் யூ, மாகி. ஆனால் உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் இப்போது பிடித்துக் கொண்டிருந்த வாத்தை எடுத்துக்கொள்ளட்டுமா?"

"ஆனால் அந்த வெள்ளை வாத்து இதை விடக் கூடுதல் எடை கொண்டது. உனக்காகவென்றேத் தனியாகக்  கொழுக்க வைத்தோம் அதை".

"பரவாயில்லை. நான் இதையே எடுத்துக்கொள்கிறேன். அதுவும் அதை இப்போதே எடுத்துக்கொள்கிறேன்".

"ஹும், உன் இஷ்டம்", என்றாள் அவள் கொஞ்சம் புண்பட்டவளாய். "எதைக் கேட்டாய்?"

"அதோ அந்தக் கறுப்புப் பட்டை வாத்து. மந்தைக்கு நடுவில் இருக்கிறதே அது".

"என்னமோ போ. அது தான் வேண்டுமென்றால் சரி. அதைக் கொன்று எடுத்துக்கொண்டு போ", என்று சம்மத்தித்தாள் மாகி.

அவள் சொன்னது படியே செய்தேன், மிஸ்டர் ஹோம்ஸ். அந்த வாத்தைப் பிடித்துக் கொன்று அதைத் தூக்கிக்கொண்டு என் நண்பன் மாட்ஸ்லியிடம் சென்றேன். அவனிடம் நான் செய்த எல்லாவற்றையும் சொன்னேன். நான் பட்ட பாட்டையும் சொன்ன விஷயங்களையும் கேட்டு தலையில் புரையேறும் வரை அவன் சிரித்தான். சிரித்து முடித்து நாங்கள் வாத்தின் வயிற்றைக் கிழித்துப் பார்த்தோம். பார்த்ததும் என் இதயம் நின்று விட்டது. வாத்தின் வயிற்றில் மாணிக்கம் இல்லை.  எங்கோ ஏதோ தவறு நடந்துவிட்டதென்று எனக்கு உறைத்தது. வெட்டிய வாத்தை அங்கேயே போட்டுவிட்டு மறுபடியும் என் சகோதரியின் வீட்டிற்கு ஓடினேன். வாத்துக்கள் இருக்கும் பின்கட்டிற்குச் சென்றேன். பட்டி காலியாய் இருந்தது.

"இங்கிருந்த வாத்துக்களெல்லாம் எங்கே, மாகி?" என்று கத்தினேன்.

"சந்தைக்குச் சென்றுவிட்டன, ஜெம்", என்றாள்.

"சந்தைக்கா? யாரிடம்?"

"கவென்ட் கார்டனின் ப்ரெக்கென்ரிட்ஜ்".

"நான் கொண்டு சென்றதைப் போலவே இன்னொரு கறுப்புப் பட்டை வால் வாத்து இருந்ததா?"

"ஆமாம், ஜெம். அது போல் ரெண்டு உண்டு. எங்களுக்கே அவைகள் இரண்டையும் வித்தியாசம் சொல்ல முடியாது", என்றாள் என் சகோதரி.  

அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது என்ன நடந்ததென்று. தலைதெறிக்க ஓடினேன் சந்தைக்கு. ஆனால் அந்த ப்ரெக்கென்ரிட்ஜ் ஒரு வார்த்தை கூட எனக்குப் பதில் சொல்லவில்லை. நீங்களே பார்த்தீர்கள் தானே. என்ன செய்வதென்றுத் தெரியாமல் எனக்குப் பைத்தியம் பிடித்ததைப் போல் இருக்கிறது. திருடிய பொருளின் பலனாக  ஒரு சல்லிக்காசு கூட நான் எடுக்கவில்லை. ஆனால் அதற்கு ஆசைப்பட்டு என் வாழ்க்கை மொத்தத்தையும் நான் அழித்துவிட்டேன்! கடவுளே! கடவுளே!"

ரைடர் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான்

ரைடர் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான். அவன் தேம்பல்கள் குறைந்து விழுந்த நிசப்தத்தில் அவனுடைய திணறலான மூச்சு சத்தமும், ஹோம்ஸின் விரல்கள் மேஜையின் விளிம்பில் தாளமிடும் சத்தமும் மட்டுமே கேட்டன.

சட்டென்று நாற்காலியில் இருந்து எழுந்த ஹோம்ஸ் அறையின் கதவை விரியத் திறந்தார்.

"கெட் அவுட்!" என்றார் ரைடரை நோக்கி.

"ஹாங்! சார்! நிஜமாவா? கடவுளே! நன்றி, சார்! நன்றி!"

"பேசாதே! கெட் அவுட்!"

சொன்னபடியே செய்தான் அவன். ஒரு வார்த்தை இல்லாமல் தடபுடவென்று அடித்துப் பிடித்து படிகளில் இறங்கினான். சில நிமிடங்களில் வெளிக்கதவு பட்டென்று மூடும் சத்தமும், தெருவில் அவன் தலைதெறிக்க ஓடும் அவன் காலடி சத்தமும் மட்டுமே கேட்டன. 

"நான் ஒன்றும் போலீசிற்கு அவர்களின் குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுக்கும் ஏஜென்ட் அல்ல ", என்றார் ஹோம்ஸ் அவருடைய முடிவை விளக்கும் விதமாய். "இவன் இல்லாமல் அந்த ஹார்னருக்கு எதிராக இருக்கும் திருட்டுக் கேஸ் கோர்ட்டில் நிற்காது. அதனால் ஹார்னருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. அது மட்டுமல்ல, இவனை இப்போது சிறைக்கு அனுப்பினால் இவன் கடைந்தெடுத்த குற்றவாளியாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படியே விட்டுவிட்டாலாவது இந்த அனுபவம் கொடுத்த பயத்தில் இன்னொரு தப்பைச் செய்யாமலாவது இருப்பான். அதுவுமில்லாமல் இது மன்னிப்பிற்கான சீசன் அல்லவா! தற்செயலாய் நம்மிடம் வந்து சேர்ந்த இந்த வித்தியாசமானக் குற்றத்திற்குத் தீர்வு காண்பதே நமக்குக் கிடைத்த பரிசு. வாத்து சம்பந்தப்பட்டிருக்கும் இன்னொரு கேஸான நம் டின்னரை நாம் ஆராயத்தொடங்கலாம், வாட்சன்".


முற்றும் 

   

Write a comment ...

Write a comment ...