கிறிஸ்துமஸிற்கு இரண்டு நாட்கள் கழித்து ஷெர்லக் ஹோம்ஸைப் பார்த்து அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக அவருடைய அறைக்குச் சென்றிருந்தேன். ஊதா நிற டிரெஸ்ஸிங் கவுன் ஒன்றை அணிந்தவாறு சோபாவில் சாய்ந்திருந்தார். அவர் கை எட்டும் தூரத்தில் அவருடைய பைப்புகளும் அவரைச் சுற்றி அவர் வாசித்து முடித்திருந்த அன்றைய காலை செய்தித்தாள்களும் இறைந்து கிடந்தன. சோபாவின் அருகில் இருந்த மர நாற்காலியின் முதுகுப் பகுதியில், பல இடங்களில் விரிசல் விட்டிருந்த பழைய தொப்பி ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அந்தத் தொப்பி அவரின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்ததை நாற்காலியின் மேல் இருந்த பூதக்கண்ணாடியும் ஃபோர்செப்ஸும் தெரியப்படுத்தின.
"ஏதோ வேலையாய் இருக்கிறீர்கள் போல் தெரிகிறது. தொந்தரவு செய்கிறேனோ?" என்றேன்.
"இல்லை, இல்லை. என்னுடைய முடிவுகளை கலந்தாலோசிக்க ஒரு நண்பர் இருப்பது எனக்கு நல்லது தான்", என்றபடி அந்தப் பழைய தொப்பியை கட்டை விரலை நீட்டிக் காட்டினார். "விஷயம் என்னவோ உப்புசப்பில்லாத ஒன்று தான். ஆனாலும் அதிலும் கூட சில சுவாரஸ்யங்களும் கற்றுக்கொள்ள சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன", என்றார்.
அவருடைய சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவரின் கணப்புத் தீயின் முன் என் கைகளை நீட்டி என்னை கொஞ்சம் சூடேற்றிக்கொண்டேன். கடுங்குளிருடன் கொட்டும் உறைபனியும் சேர்ந்து ஜன்னல்களை அடர்த்தியான பனிப் படிகங்களால் மூடியிருந்தன.
"பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாக இருக்கும் இந்தத் தொப்பி உங்களின் ஏதோ ஒரு மிக முக்கிய கேசின் புதிர் அவிழ்த்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் இன்றியமையாத க்ளூவாக இருக்கும், அல்லவா?" என்று கேட்டேன்.
"புதிரும் இல்லை, குற்றமும் இல்லை", என்று சிரித்தபடி சொன்னார் ஹோம்ஸ்.
"இல்லை, வாட்சன். இதில் எந்தப் புதிரும் இல்லை, எந்தக் குற்றமும் இல்லை. சில நூறு சதுரமைல்களுக்குள் நான்கு மில்லியன் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் இடித்துக்கொண்டும், உரசிக்கொண்டும் வாழும் போது நடக்கும் சில விசித்திரமான நிகழ்வுகள் ஒன்றின் வெளிப்பாடு தான் இந்தத் தொப்பி. இப்படி ஒரு மக்கள் கூட்டம் இப்படி ஒரு நகரத்தில் வசிக்கும் போது சில சமயங்களில் சில பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. ஆனால் அவைகளை 'குற்றங்கள்' என்று கூறமுடியாது. இப்படிப் பல கேஸ்களை நம்மிடம் ஏற்கனவே வந்திருக்கின்றன அல்லவா?"
"ஆம். கடந்த ஆறு கேஸ்களில் மூன்றில், சட்டப்படிப் பார்த்தால் எந்த வித குற்றமும் நிகழவில்லை".
"அதே தான். இதுவும் அப்படி ஒரு கேஸாக இருக்கலாம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. வாயிற்காப்பவர் பீட்டர்சனை உமக்குத் தெரியுமல்லவா?"
"தெரியும்".
" இது அவருக்குச் சொந்தமான பரிசு".
"இது அவருடைய தொப்பி".
"இல்லையில்லை. இது அவருடையது அல்ல. இதை அவர் கண்டெடுத்தார், அவ்வளவு தான். இதன் உரிமையாளர் யாரென்று தெரியாது. இதை ஒரு நைந்தத் தொப்பியாக பார்க்காமல், அறிவுக்குத் தீனி போடும் ஒரு புதிராக பாரும், வாட்சன். முதலில் இது எப்படி இங்கே வந்ததென்று சொல்லிவிடுகிறேன். கிறிஸ்துமஸ் காலையில் ஒரு நல்ல கொழுத்த வாத்துடன் இது இங்கே வந்து சேர்ந்தது. அந்த வாத்து இப்போது பீட்டர்சனின் அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். பீட்டர்சனிடமிருந்து தெரியவந்த தகவல்கள் இவை தான் - கிறிஸ்துமஸ் காலையில், சுமார் நான்கு மணியளவில், பீட்டர்சன் டாட்டன்ஹாம் கோர்ட் சாலை வழியாகத் தன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். உமக்கு பீட்டர்சனைப் பற்றித் தெரியுமல்லவா - ரொம்பவே நியாமானப் பேர்வழி. அவர் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது அவருக்கு முன் ஒருவர் தன் தோளில் ஒரு வாத்தைத் தொங்கவிட்டபடி நடந்துகொண்டிருந்தார். தெருவிளக்கின் ஒளியில் அந்த ஆள் கொஞ்சம் உயரமான மனிதர் என்பதைத் தவிர வேறு எதுவும் பீட்டர்சனுக்குப் புலப்படவில்லை. அவர் தெரு முனையை அடைந்தபோது அந்த முன்னால் போன மனிதருக்கும் அங்கே கூடியிருந்த சில முரடர்களுக்கும் இடையே ஏதோ கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. முரடர்களில் ஒருவன் அந்த மனிதரின் தலையில் இருந்தத் தொப்பியைத் தட்டிவிட, அவனை விரட்டித் தள்ள உடனே அவர் தன் கையில் இருந்தத் தடியை ஓங்கியிருக்கிறார். அப்படி ஓங்கும் போது அவருக்குப் பின்னால் இருந்த கடையின் கண்ணாடி ஜன்னலில் அந்தத் தடி பட, அது சத்தமாய் உடைந்து நொறுங்கியிருக்கிறது. இந்த ரகளையைப் பார்த்த பீட்டர்சன் அந்த முரடர்களிடமிருந்து அந்த மனிதனைக் காப்பாற்ற ஓடியிருக்கிறார். ஜன்னல் உடைந்ததில் அதிர்ச்சியடைந்த அந்த மனிதர், யூனிஃபாரத்துடன் அதிகாரி போன்ற ஒருவர் தன்னை நோக்கி ஓடிவருவதைப் பார்த்து, பயந்து, கையில் இருந்த வாத்தைக் கீழே போட்டுவிட்டு சந்துக்களின் வழியாக ஓடிச்சென்று மறைந்துவிட்டார். முரடர்களும் பீட்டர்சனைப் பார்த்து ஓடிவிட, சண்டையில் கிடைத்த பரிசுகளாக வாத்தும் தொப்பியும் பீட்டர்சனிடம் சிக்கின".
"அவைகளை நிச்சயம் பீட்டர்சன் அவைகளின் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்திருப்பாரே?"
" மை டியர் வாட்சன், அங்கேதான் இருக்கிறது பிரச்சனையே. வாத்தின் இடது காலில் 'மிஸஸ். ஹென்றி பேக்கர்' என்று எழுதப்பட்ட துண்டுச் சீட்டு ஒன்று கட்டப்பட்டிருந்தது. மேலும் தொப்பியின் உள்பகுதியில் 'H. B' என்ற எழுத்துக்கள் லேசாய் தெரிகின்றன. ஆனால் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு எந்த ஹென்றி பேக்கரைத் தேடுவது? நகரத்தில் ஆயிரக்கணக்கான 'பேக்கர்' என்ற பெயருடையவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சில நூறு பேராவது 'ஹென்றி பேக்கர்' என்ற பெயருடன் இருப்பார்கள். யாரிடம் என்று இவைகளைக் கொண்டு சேர்ப்பது?"
"அப்படியென்றால் பீட்டர்சன் என்ன செய்தார்?"
"வாத்தையும் தொப்பியையும் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு இப்படிப்பட்ட விஷயங்களில் இருக்கும் ஆர்வம் அவருக்குத் தெரியுமல்லவா? இன்று காலை வரை வாத்தை வைத்திருந்தோம். இவ்வளவு குளிரிலும் இதற்கு மேல் அது தாங்காது என்று தெரிந்தபடியால் அதை பீட்டர்சனே எடுத்துப் போய்விட்டார், வாத்தாய் அது பிறந்ததின் பிறவிப் பயனை அடைவதற்கு. தனது கிறிஸ்துமஸ் டின்னரைத் தொலைத்த அந்தக் கனவானின் தொப்பியை மட்டும் நான் வைத்திருக்கிறேன்".
"அந்த மனிதர் விளம்பரம் எதுவும் கொடுக்கவில்லையா?"
"இல்லை".
"பின், வேறு என்ன தடயம் கிடைக்கமுடியும் அந்த மனிதரைப் பற்றி?"
"இந்தத் தொப்பியிலிருந்துக் கிடைக்கும் தகவல்கள் தவிர வேறு எதுவும் இல்லை".
"இந்தத் தொப்பியிலிருந்தா?"
"ம்".
"விளையாடுகிறீர்களா, ஹோம்ஸ்? இந்த நைந்து போன பழைய தொப்பியிலிருந்து என்ன கணிக்க முடியும்?"
"இதோ இருக்கிறது என் லென்ஸ். என்னுடைய வழிகள் உமக்குத் தெரியும். இந்தத் தொப்பியை அணியும் மனிதரைப் பற்றி உம்மால் என்ன சொல்லமுடியுமென்று பாரும்".
அந்த நைந்த தொப்பியை நான் கைகளில் சிறிய யோசனையுடனேயே எடுத்தேன். எல்லோரும் அணிவது போன்ற ஒரு சாதாரண கறுப்புத் தொப்பியாகத் தான் எனக்கு அது தெரிந்தது. ரொம்பவே நைந்து போய், போட்டு போட்டுத் தேய்ந்துபோய் இருந்தது அது. உள்ளே சிவப்பு பட்டுத் துணியால் ஆன லைனிங் துணி சாயம் போய் இருந்தது. தொப்பியை செய்தவரின் பெயரோ, வாங்கிய கடையின் பெயரோ எதுவும் இல்லை. ஆனால் ஹோம்ஸ் சொன்னது போல் ‘H. B’ என்ற எழுத்துக்கள் இருந்தன. எலாஸ்டிக் பட்டை ஒன்று பொருத்துவதற்கான சிறிய துளை ஒன்று இருந்தது, ஆனால் எலாஸ்டிக் இல்லை. மற்றபடி அது நிரம்ப கீறல்கள் விழுந்த, அங்கங்கே புள்ளிகளுடன் மிகவும் தூசி படிந்து இருந்தது. சாயம் போன இடங்களில் அதை மறைப்பதற்காக மையைத் தடவிய தடம் தெரிந்தது.
"என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை", என்றபடி தொப்பியை ஹோம்ஸிடமேத் திருப்பிக் கொடுத்தேன்.
"மாறாக, வாட்சன், உம் கண்களுக்கு எல்லாம் தெரிகின்றன. ஆனால் அவற்றிலிருந்து சில விஷயங்களைக் கணிப்பதில் தான் பின்வாங்குகிறீர்".
"அப்படியா? அப்போது நீங்களே சொல்லுங்கள் இந்தத் தொப்பியிலிருந்து உங்களுக்குத் தெரியவரும் விஷயங்கள் என்னென்னவென்று".
ஹோம்ஸ் அந்தத் தொப்பியைக் கையிலெடுத்து அவருக்கே உரித்தான ஓர் உன்னிப்பான பார்வையுடன் அதை ஆராய்ந்தார். "சில அனுமானங்கள் இதிலிருந்துத் தெளிவாகத் தெரிகின்றன. மேலும் சிலவைகள் சரியாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் மிகுதியாகவே இருக்கின்றன. இதை அணியும் மனிதர் நிறையவே புத்தியுள்ளவர் என்பது சொல்லமாலேத் தெரிகிறது. கடந்த மூன்று வருடங்களுக்குள் அவர் கொஞ்சம் வசதியாகவே வாழ்ந்திருக்கிறார். ஆனால் தற்போது அந்த வசதிகள் குறைந்து கஷ்ட காலத்தில் இருக்கிறார். ஒரு காலத்தில் முன்யோசனை கொண்ட அவர், இப்போது நல்வழியிலிருந்தும் நன்னடத்தையிலிருந்தும் பின்னடைந்திருக்கிறார். தெளிந்த புத்தியுடன் இருந்த அவர் இப்போது அதை இழந்து நிற்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இவை அத்தனைக்கும் காரணம் குடியாகத்தான் இருக்கவேண்டும். அதனால் தானோ என்னவோ அவர் மனைவி இப்போது அவரை நேசிப்பதை நிறுத்திவிட்டார்".
"மை டியர் ஹோம்ஸ்!"
"ஆனாலும் இன்னும் ஏதோ கொஞ்சநஞ்சம் சுயமரியாதையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்", என்று ஹோம்ஸ் தொடர்ந்தார், நான் அதட்டியதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல். "உடல் உழைப்பில்லாத உட்கார்ந்த வாழ்க்கை, வெளியே அதிகம் செல்வதில்லை, சுத்தமாய் எந்த உடற்பயிற்சியும் இல்லை, நடுத்தர வயது, சில தினங்களுக்கு முன் வெட்டப்பட்ட நரை முடி, அதில் பூசும் எலுமிச்சை மணம் கொண்ட க்ரீம் என்பனவற்றையும் இந்தத் தொப்பியிலிருந்துத் தெரிந்துகொள்ளலாம். ம், அப்புறம் இன்னொரு விஷயம், அவருடைய வீட்டில் அவர் எரிவாயு விளக்குகள் பொருத்தவில்லை".
"நீங்கள் சொன்னவை அனைத்தும் விளையாட்டாய் தானே, ஹோம்ஸ்?"
"நிச்சயமாய் இல்லை. இப்போது நான் இவ்வளவையும் சொன்னபிறகும் கூட இவைகளை நான் எப்படிக் கண்டறிந்தேன் என்று உமக்குத் தெரியவில்லையா?"
"இல்லை, ஹோம்ஸ். நான் வடிகட்டிய முட்டாளென்று ஒத்துக்கொள்கிறேன். உங்கள் சிந்தனையின் போக்கு எனக்கு விளங்கவில்லை. சொல்லுங்கள், எப்படி நீங்கள் அந்த ஆள் புத்திசாலி என்று சொல்கிறீர்கள்?"
ஹோம்ஸ் அந்தத் தொப்பியை எடுத்து அவர் தலையில் அணிந்தார். அது அவரின் நெற்றியை மறைத்து அவரது புருவங்களின் மேல் வரை இறங்கி நின்றது. "கொள்ளளவு சார்ந்த அனுமானம் இது. இவ்வளவு பெரிய தலையில் இருக்கும் அந்த பெரிய மூளையில் ஏதாவது கொஞ்சமேனும் புத்தி இருக்கவேண்டுமல்லவா?"
"அவர் கஷ்டகாலத்தில் இருக்கிறார் என்றது?"
"இந்தத் தொப்பியின் வயது மூன்று வருடங்கள். இந்த மாடல் வகைத் தொப்பிகள் மூன்று வருடங்களுக்கு முந்தியவை. தரம் வாய்ந்த, மிகவும் விலை உயர்ந்த தொப்பி. அதன் லைனிங்கும் அதற்கு உபயோகப்படுத்தியிருக்கும் மடித்த பட்டுத் துணியும் அதை அப்பட்டமாகத் தெரிவிக்கின்றன. மூன்று வருடங்களுக்கு முன்பு இதை வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர், அதன் பின் வேறு தொப்பி எதுவும் வாங்கவில்லையென்றால் அவர் கஷ்ட காலத்தில் தானே இருக்கவேண்டும்?"
"அது இப்போதுத் தெளிவாகப் புரிகிறது. நீங்கள் சொன்ன முன்யோசனையும் நல்வழியிலிருந்து பின்னடைவும்?"
ஹோம்ஸ் வாய்விட்டு சிரித்தார். "இதோ இருக்கிறது பாரும் முன்யோசனை", என்றபடி தொப்பியில் இருந்த ஒரு சிறிய லூப்பினுள் விரல் நுழைத்துக் காட்டினார். "இது தொப்பியைத் தயாரிக்கும் போது சேர்க்கப்படுவதில்லை. தனியாகத்தான் அதை கோர்க்கச் சொல்லவேண்டும். அப்படி அந்த மனிதர் செய்திருக்கிறார் என்றால், காற்றில் தொப்பி பறந்து விடாமல் இருக்க முன்யோசனையுடன் தானே செயல்பட்டிருக்கவேண்டும்? ஆனால் பிய்ந்து போன எலாஸ்டிக்கை சரிசெய்து மறுபடி தொப்பியில் பொருத்தாமல் இருப்பது அந்த முன்யோசனை குறைந்துவிட்டதைக் காட்டுகிறது. ஆனாலும் மொத்தமாய் அனைத்தையும் அவர் இழந்துவிடவில்லை. சாயம் போன இடங்களில் மையைக் கொண்டு பூசி அதை மறைக்கப் பார்த்திருப்பதில் இருந்து ஏதோ கொஞ்சநஞ்சம் சுயமரியாதை அவரிடம் ஒட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது".
"நீங்கள் சொல்வது நம்பும்படியாகத்தான் இருக்கிறது".
"நடுத்தர வயது, சமீபத்தில் வெட்டப்பட்ட நரை முடி, எலுமிச்சை வாசனை க்ரீம் போன்றவை அனைத்தும் தொப்பியின் உள்பகுதியைப் பரிசோத்தித்துப் பார்த்ததில் கிடைத்தத் தகவல்கள். தொப்பியில் ஒட்டியிருக்கும் முடிகள் முடி வெட்டுபவனின் கத்தரியால் வெட்டப்பட்ட சீரான முடிகளாகவும், அவை தொப்பியில் ஒட்டிக்கொண்டும், அதிலிருந்து எலுமிச்சை வாசனையும் வருவதால் ஏற்பட்ட முடிவுகள் தான் மேற்கூறியவை. தொப்பியின் மேலிருக்கும் இந்தத் தூசி தெருவில் இருக்கும் சாம்பல் நிற நறநறப்பான தூசி இல்லை. இது வீட்டினுள் இருக்கும் பிரவுன் நிற மென்மையான பஞ்சுத் தூசி. வீட்டின் தொப்பி ஸ்டாண்டிலேயே அநேகமாகத் இது தொங்கிக்கொண்டிருப்பதற்கான அத்தாட்சி இது. தொப்பியின் உள் இருக்கும் ஈரப்பதம் இதை அணிபவர் மிகவும் வியர்த்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அப்படியெனில் அவர் உடற்பயிற்சி எதுவும் இல்லாதவராகத் தானே இருக்க முடியும்?"
"ஆனால் அவர் மனைவி-அவர் மனைவி அவரை நேசிப்பதை நிறுத்திவிட்டாரென்று சொன்னீர்கள்?"
"இந்தப் தொப்பியில் தூசி தட்டப்பட்டு நீண்ட நாட்களாகின்றன, வாட்சன். உம்முடைய மனைவி உம்மை இந்த மாதிரி ஒரு தொப்பியை அணிந்துகொண்டு வெளியே செல்ல அனுமதித்தால் நீரும் கூட உமது மனைவியின் அன்பை இழந்துவிட்டீர்கள் என்று தான் நான் அஞ்சவேண்டியிருக்கும்".
"ஆனால் அவர் திருமணமே ஆகாதவராகக் கூட இருக்கலாமல்லவா?"
"ம்ஹூம். இல்லை. நினைவிருக்கிறதா, அந்த வாத்தின் காலில் அவருடைய மனைவிக்கு ஒரு துண்டுச் சீட்டுக் கட்டப்பட்டிருந்ததை?"
"எல்லாவற்றிற்கும் உங்களிடம் விடை இருக்கிறது, ஹோம்ஸ். எல்லாம் சரி, அவருடைய வீட்டில் எரிவாயு விளக்குகள் இல்லை என்று எப்படிக் கணித்தீர்கள்?"
"தொப்பியில் மெழுகுவர்த்தியின் கறை ஒன்றிரண்டு இருந்தால் அது எப்போதாவது ஏற்பட்டது என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தத் தொப்பியில் ஐந்து கறைகள் இருக்கின்றன. அநேகமாக ஹென்றி பேக்கர் இரவில் ஒரு கையில் மெழுகுவர்த்தியுடனும் இன்னொரு கையில் இந்தத் தொப்பியுடனும் படியேறி தனது அறைக்குச் செல்வாராக இருக்கும். எப்படியாகினும், இந்தக் கறைகள் எரிவாயு விளக்குகளால் வரவில்லை, சரிதானே? இப்போது திருப்தியா?"
"புத்திசாலித்தனம் தான்", என்றேன் நான் சிரித்துக்கொண்டே, "ஹென்றி பேக்கர் தனது வாத்தைத் தொலைத்ததைத் தவிர்த்து குற்றம் என்று சொல்லும்படி வேறு எதுவும் இல்லாததால், இது வீணே நேர விரயம் போல் தான் தெரிகிறது".
பதில் சொல்வதற்கு ஷெர்லக் ஹோம்ஸ் வாயைத் திறக்கும் முன், கதவைத் நெட்டித் தள்ளிக்கொண்டு பீட்டர்சன் அரக்க பறக்க நுழைந்தார். ஆச்சர்ய மிகுதியால் அவர் முகம் சிவந்திருந்தது.
"வாத்து, மிஸ்டர். ஹோம்ஸ்! வாத்து, சார்!" என்றார் மூச்சிரைக்க.
"ஹே! வாத்தா? வாத்திற்கு என்ன ஆயிற்று, பீட்டர்சன்? அதற்கு உயிர் வந்து உன் சமையல் அறை ஜன்னல் வழியே பறந்து போய்விட்டதா?" என்று கேட்டார் ஹோம்ஸ், சோபாவிலிருந்துத் திரும்பி பீட்டர்சனைப் பார்த்து.
"இங்கே பாருங்கள், சார்! என் மனைவி அதன் வயிற்றிலிருந்து என்ன கண்டெடுத்தாள் என்று பாருங்கள்!' என்றபடி தனது கையை நீட்டி உள்ளங்கையை விரித்துக் காட்டினார் பீட்டர்சன். நீட்டிய கையில் ஒரு சிறிய நீல நிறக் கல் ஒரு மின்சாரப் புள்ளி போல் ஜொலித்துக்கொண்டிருந்தது.
தொடரும் . . .
Write a comment ...