சேவலும் கடலையும் - ரஷ்ய நாட்டுப்புறக் கதை


Valery Carrick தொகுத்து Nevill Forbesஆல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நியூ யார்க்கின் Frederick A. Stokes பதிப்பாளர்களால் 1914, 1920 வெளியிடப்பட்ட ரஷ்ய நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கதை. படங்களும் அந்தப் புத்தகத்தில் இருப்பவையே.

சேவல் ஒன்று ஒரு நாள் வீட்டின் பின் இருந்த மண்ணைக் கிளறிக்கொண்டிருந்த போது ஒரு கடலையைக் கண்டது.

கண்டதும் அதை விழுங்கப் பார்த்தது. ஆனால் விழுங்கும் போது கடலை சேவலின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. கடலை தொண்டையில் சிக்கியதால் மூச்சு விடமுடியாமல் தரையில் கால்களை நீட்டி ஆடாமல் அசையாமல் விழுந்து கிடந்தது.

விழுந்து கிடந்த சேவலைப் பார்த்த அதன் எஜமானி ஓடோடி வந்தாள். "சேவலே, சேவலே, என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இப்படி விழுந்து கிடக்கிறாய்?" என்று விசாரித்தாள்.

அதற்கு சேவல், "கடலையை நான் விழுங்கப் பார்த்தேன். அது என் தொண்டையில் சிக்கிக்கொண்டது. பசு மாட்டிடம் சென்று கொஞ்சம் வெண்ணெய் வாங்கி வா", என்றது.

எஜமானி பசுவிடம் சென்றாள். "பசுவே, பசுவே! கொஞ்சம் வெண்ணெய் கொடு. என் சேவல் கடலையை விழுங்கி தொண்டை அடைத்து மூச்சு விடமுடியாமல் கிடக்கிறது", என்றாள்.

அதற்குப் பசு அவளிடம், "வயலிலே போய் கொஞ்சம் வைக்கோல் வாங்கி வா, வெண்ணெய் தருகிறேன்", என்றது.

எஜமானி வயலுக்குச் சென்றாள். அங்கே அறுவடை செய்து கொண்டிருந்தவர்களிடம், " ஆட்களே, ஆட்களே, எனக்குக் கொஞ்சம் வைக்கோல் தாருங்கள். அதை நான் பசுவிடம் கொடுத்தால் பசு எனக்கு வெண்ணெய் தரும். அந்த வெண்ணெயை நான் கடலையை விழுங்கி தொண்டை அடைத்து மூச்சு விட முடியாமல் கிடக்கும் என் சேவலிடம் தர வேண்டும்", என்றாள்.

அதற்கு வேலையாட்கள், "அடுப்பிடம் சென்று கொஞ்சம் ரொட்டிகள் வாங்கி வா, வைக்கோல் தருகிறோம்", என்றார்கள்.

எஜமானி அடுப்பிடம் சென்றாள். "அடுப்பே, அடுப்பே! கொஞ்சம் ரொட்டிகள் கொடு. ரொட்டிகளை வயலில் வேலையாட்களிடம் கொடுத்தால் அவர்கள் வைக்கோல் கொடுப்பார்கள். அந்த வைக்கோலை நான் பசுவிடம் கொடுப்பேன். பசு எனக்கு வெண்ணெய் கொடுக்கும். அதை நான் கடலையை விழுங்கி தொண்டை அடைத்து மூச்சு விட முடியாமல் கிடக்கும் என் சேவலிடம் தர வேண்டும்", என்றாள்.

அதற்கு அடுப்பு, "விறகு வெட்டிகளிடம் சென்று கொஞ்சம் விறகு வாங்கி வா, ரொட்டிகள் தருகிறேன்", என்றது.

எஜமானி விறகு வெட்டிகளிடம் சென்றாள். "விறகு வெட்டிகளே,  விறகு வெட்டிகளே! கொஞ்சம் விறகு தாருங்கள். அதை நான் அடுப்பிடம் கொடுக்க வேண்டும். அடுப்பு எனக்கு ரொட்டிகள் தரும். ரொட்டிகளை வயலில் வேலையாட்களிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் வைக்கோல் தருவார்கள். அதை நான் பசுவிடம் கொடுக்க வேண்டும். அது எனக்கு வெண்ணெய் தரும். அந்த வெண்ணெயை நான் கடலையை விழுங்கி தொண்டை அடைத்து மூச்சு விட முடியாமல் கிடக்கும் என் சேவலிடம் தர வேண்டும்", என்றாள்.

அதற்கு அவர்கள், "கொல்லனிடம் சென்று கோடாரி வாங்கி வா. விறகு வெட்ட எங்களிடம் கோடாரி இல்லை", என்றார்கள்.

எஜமானி கொல்லனிடம் சென்றாள். "கொல்லனே, கொல்லனே! ஒரு கோடாரி கொடு. கோடாரியைக் கொண்டு நான் விறகுவெட்டிகளிடம் தர வேண்டும். அவர்கள் எனக்கு விறகு தருவார்கள். அதை நான் அடுப்பிடம் தரவேண்டும். அடுப்பு எனக்கு ரொட்டிகள் தரும். ரொட்டிகளை வயலில் வேலையாட்களிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் வைக்கோல் தருவார்கள். வைக்கோலை நான் பசுவிடம் கொடுக்க வேண்டும். அது எனக்கு வெண்ணெய் தரும். வெண்ணெயை நான் கடலையை விழுங்கி தொண்டை அடைத்து மூச்சு விட முடியாமல் கிடக்கும் என் சேவலிடம் தர வேண்டும்", என்றாள்.

கொல்லன் அவளிடம், "காட்டிற்கு சென்று எனக்குக் கொஞ்சம் அடுப்புக்கரி எரித்து எடுத்து வா", என்றான்.

எஜமானி காட்டிற்குச் சென்று கொஞ்சம் சுள்ளிகள் பொறுக்கினாள். பொறுக்கிய சுள்ளிகளை எரித்து அடுப்புக்கரி ஆக்கினாள். அடுப்புக்கரியை கொல்லனிடம் கொடுத்தாள். கொல்லன் அவளுக்குக் கோடாரி கொடுத்தான். கோடாரியை விறகு வெட்டிகளிடம் கொடுத்தாள். விறகு வெட்டிகள் அவளுக்கு விறகு கொடுத்தார்கள். விறகை அடுப்பிடம் கொடுத்தாள். அடுப்பு அவளுக்கு ரொட்டிகள் கொடுத்தது. ரொட்டிகளை வயலில் வேலையாட்களிடம் கொடுத்தாள். வேலையாட்கள் அவளுக்கு வைக்கோல் கொடுத்தார்கள்.

வைக்கோலை பசுவிடம் கொடுத்தாள். பசு அவளுக்கு வெண்ணெய் கொடுத்தது.

வெண்ணெயை சேவலிடம் கொடுத்தாள்.

சேவல் வெண்ணெயை முழுங்க, அது கடலையையும் சேர்த்து விழுங்கச் செய்தது.

கடலையை தொண்டையிலிருந்து விழுங்கியதும் துள்ளிக் குதித்து எழுந்து பாட்டு பாட ஆரம்பித்தது சேவல்.

"கொக்கரக்கோக்கோ!
கிளறிட்டு இருந்தேன் மந்தையில, 
கிடைச்சது முக்காத் துட்டு!
எடுத்துட்டுப் போனேன் சந்தையில,
வாங்கித் தின்னேன் லட்டு!"

ம்... அப்புறம் என்னன்னு கேக்குறீங்களா? அப்புறம் ஒண்ணும் இல்லை. அவ்வளவு தான்!


பி.கு: சேவல் வேற பாட்டு பாடிச்சு ரஷ்ய மொழிலயும் அப்புறம் இங்கிலீஷுலயும். தமிழ்ல பாடச்சொல்லி கேட்டப்போ இதைப் பாடிச்சு! (சொந்த சரக்க எடுத்துவிட ஒரு சான்ஸ்!)


Write a comment ...

Write a comment ...