ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - IV


அதன்படியே நாங்கள் பேக்கர் தெருவிலிருந்துக் கிளம்பினோம். வெளியேக் குளிர் மிகக் கடுமையாக இருந்தது. முழங்கால் வரைத் தொங்கும் அல்ஸ்டர் கோட்டுக்களை அணிந்துகொண்டு, கழுத்தில் ஸ்கார்ஃபையும் சுற்றிக்கொண்டோம். மேகமே இல்லாத வானம் குளிரை பன்மடங்காக்கியது. தெருவில் நடந்து செல்வோரின் மூச்சுக் காற்று, துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாப் புகை போல் காற்றில் மிதந்தது. எங்கள் காலடிச் சத்தம் டாக் டாக்கென்று நாங்கள் போகும் வீதிகளெங்கும் எதிரொலித்தது. கால் மணி நேரத்தில் நாங்கள் 'ஆல்பா இன்'னில் இருந்தோம். அந்தச் சிறிய விடுதியின் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு நாங்கள் உள்ளே சென்றோம். சிவந்த முகம் கொண்ட, வெள்ளை ஏப்ரன் அணிந்த அந்த விடுதியின் உரிமையாளரிடம் ஹோம்ஸ் இரண்டு பியர்கள் ஆர்டர் செய்தார்.

"உங்கள் வாத்துக்களைப் போலவே உங்கள் பியரும் இருந்ததென்றால், அது மிகவும் அருமையான பியராகத்தான் இருக்கும்", என்றார் ஹோம்ஸ்.

"என் வாத்துக்களா?" என்றார் அந்த மனிதர் ஆச்சர்யத்துடன்.

"ஆம். இப்போது அரை மணி நேரத்திற்கு முன்பு தான் மிஸ்டர். ஹென்றி பேக்கரிடம் பேசிக்கொண்டிருந்தேன். உங்கள் வாத்துக் கிளப்பில் அவர் உறுப்பினர் என்று அவர் தான் சொன்னார்".

"ஓ! அதுவா? அது பாருங்கள், சார். அந்த வாத்து ஒன்றும் என்னுடையது இல்லை".

"அப்படியா! பின்னே யாருடையது?"

"இரண்டு டஜன் வாத்துக்களை கவென்ட் கார்டனில் (Covent Garden) ஒரு வியாபாரியிடம் இருந்து வாங்கினேன்".

"அங்கே யாரிடம்? அந்த வியாபாரிகள் சிலரை எனக்குத் தெரியும்".

"அவர் பெயர் ப்ரெக்கென்ரிட்ஜ்".

"ஆ! அவரைத் தெரியாது. நன்றி. உங்களுடைய ஆரோக்கியத்திற்கும் உங்கள் விடுதியின் வளமைக்கும்!", என்றபடி பியரை உயர்த்திக் குடித்துவிட்டு வெளியே வந்தோம்.

"அடுத்து ப்ரெக்கென்ரிட்ஜை நோக்கி", என்றபடி கோட்டுகளை பொத்தானிட்டுக் கொண்டே நடக்க ஆரம்பித்தோம். "நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், வாட்சன். சங்கிலியின் ஒரு முனையில் கிறிஸ்துமஸ் வாத்து இருந்தாலும் அதன் மறு முனையில் ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை பெரும் வாய்ப்புள்ள ஒரு மனிதன் இருக்கிறான். அவனுடைய குற்றமின்மையை நாம் நிரூபித்தாலொழிய அந்த தண்டனை அவனுக்கு நிச்சயம். இந்தக் குற்றத்தில் அவனுக்கு சம்பந்தம் கூட இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், போலீஸ் தவறவிட்ட ஒரு விசாரணைச் சங்கிலி இது. நம்மிடம் இந்தச் சங்கிலியின் ஒரு முனை  எதேச்சையாக வந்து சிக்கியிருக்கிறது. கடைசி வரை இதை ஒரு கை பார்த்துவிடவேண்டும்", என்ற ஹோம்ஸின் வார்த்தைகளில் எனக்கும் உடன்பாடு இருந்ததால் இருவரும் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். 

சற்று நேரத்தில் கவென்ட் கார்டன் மார்க்கெட்டை சென்றடைந்தோம். அங்கிருந்த பெரிய கடைகள் ஒன்றின் முகப்பில் 'ப்ரெக்கென்ரிட்ஜ்' என்ற பெயர்ப்பு பலகைத் தொங்கியது. நீண்ட கிருதா வைத்திருந்த அந்தக் கடையின் உரிமையாளர் அதைப் பூட்டுவதற்கு ஒரு சிறுவனுக்கு உதவிக்கொண்டிருந்தார்.

"குட் ஈவினிங். கடும் குளிர் இன்று", என்று ஹோம்ஸ் பேச்சுக் கொடுத்தார்.

தலையாட்டிய அந்த மனிதர் ஹோம்ஸை சந்தேகத்துடன் மேலும் கீழும் பார்த்தார்.

"உங்கள் வாத்துக்களெல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்டது போல் தெரிகிறது', என்றார் ஹோம்ஸ், காலியாயிருந்த அவர் கடையைக் காட்டி.

"நாளைக் காலை வந்தால் ஐநூறு வாத்துக்கள் கூடக் கிடைக்கும்".

"ம்ஹூம். அது சரி வராது".

"அப்படியென்றால் அதோ அங்கே விளக்கு எரிகிறது பாருங்கள். அந்தக் கடையில் கிடைக்கும்", என்றார் ப்ரெக்கென்ரிட்ஜ்.

"ஆ! ஆனால் உங்கள் கடை தான் எனக்குப் பரிந்துரைக்கப்பட்டது", என்றார் ஹோம்ஸ்.

"யார் சொன்னது?"

"ஆல்ஃபா விடுதியின் உரிமையாளர்".

"ஓ! ஆமாம். அவருக்கு இரண்டு டஜன் அனுப்பி வைத்தேன்".

"அருமையான வாத்துக்கள் அவை. நீங்கள் எங்கிருந்து வாங்கினீர்கள் அந்த வாத்துக்களை?"

ஹோம்ஸ் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அந்த மனிதர் கோபத்துடன் நிமிர்ந்தார். 

"ஏய் மிஸ்டர்! என்ன வேண்டும் உனக்கு? கேட்பதை நேரடியாகக் கேள்".

"நேரடியாகத்தான் கேட்கிறேன். ஆல்ஃபா விடுதிக்கு நீங்கள் கொடுத்த வாத்துக்களை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்கிறேன்".

"அதைச் சொல்ல முடியாது. இடத்தைக் காலி செய்".

"இதென்ன பெரிய விஷயமா? இதற்குப் போய் ஏன் இத்தனைக் கோபப்படுகிறீர்கள்?"

"கோபமா? ஏன் கோபம் வராது? ஒரு பொருளை விற்றால் அது விற்றதோடு முடிந்து போக வேண்டும். சும்மா வந்து என்னிடம், 'வாத்துக்கள் எங்கே?', 'யாரிடம் அந்த வாத்துக்களை விற்றாய்?', 'எவ்வளவிற்கு அந்த வாத்துக்களைக் கொடுப்பாய்?' என்று இவ்வளவு தொல்லைக் கொடுத்தால் கோபம் வராமல் என்ன வரும்?  ஏதோ உலகத்தில் இவைகளைத் தவிர வேறு வாத்துக்களே இல்லாதது போல். சாதாரண வாத்துக்களுக்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?"

"உங்களிடம் விசாரித்த மற்றவர்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லாவிட்டால் விடுங்கள். நான் கட்டிய பெட் இல்லை என்றாகிவிடும். வாத்துக்களைப் பற்றி கொஞ்சம் தெரியும். அதனால் தான் நான் சாப்பிட்டது கிராமத்தில் வளர்க்கப்பட்ட வாத்து என்று ஐந்து பவுண்டுகள் பெட் கட்டியிருக்கிறேன்".

"அப்படியென்றால் நீ உன் பெட்டில் தோற்றுவிட்டாய். அது ஒன்றும் கிராமத்தில் வளர்க்கப்பட்டது அல்ல. இங்கே நகருக்குள் வளர்க்கப்பட்டது".

"நிச்சயமாய் கிடையாது".

"நான் சொல்கிறேன் அது இங்கே வளர்க்கப்பட்டது".

"உங்களை நம்பமுடியாது".

"தக்கனூண்டு பையனாய் இருக்கும் போதில் இருந்து வாத்துக்களை பார்த்துக்கொண்டிருக்கும் என்னை விட உனக்குத் தெரியுமோ வாத்துக்களைப் பற்றி? நான் சொல்கிறேன் ஆல்ஃபா விடுதிக்கு அனுப்பிய வாத்துக்கள் நகருக்குள் வளர்க்கப்பட்டவை".

"இதை என்னை நம்பச் சொல்கிறீர்களா?"

"சரி, அப்படியென்றால் என்னிடம் பந்தயம் கட்டுகிறாயா?"

"உங்களின் பணத்தை என்னிடம் கொடுக்கத்தான் போகிறீர்கள். எனக்குத் தெரியும் நான் சொல்வது தான் சரி என்று. ஆனாலும் உங்களுக்குப் பாடம் புகட்டுவதற்காகவேனும் ஒரு பவுண்டு பந்தயம் கட்டுகிறேன்".

ப்ரெக்கென்ரிட்ஜ் நக்கலாய் சிரித்தார். "விற்பனைப் புத்தகங்களை எடுத்து வா, பில்".

அந்தச் சிறுவன் ஒரு சிறிய புத்தகத்தையும் ஒரு மிகப் பெரிய புத்தகத்தையும் கொண்டு வந்து விளக்கின் அடியில் வெளிச்சத்தில் வைத்தான்.

"இந்தப் புத்தகத்தைப் பார்த்தாயா?"

"இந்தாய்யா, வாத்து வாத்தி, இந்தப் புத்தகத்தைப் பார்த்தாயா?" என்று அந்தச் சிறிய புத்தகத்தைக் காட்டினார் ப்ரெக்கென்ரிட்ஜ்.

"ம்".

"இது தான் நான் வாத்துக்கள் வாங்கும் சப்ளையர்களின் பெயர்கள். தெரிகிறதா? இங்கே பார். இது தான் கிராமத்து சப்ளையர்களின் பெயர்கள். அவர்களின் பெயருக்குப் பக்கத்தில்  இருக்கும் எண்கள், பெரிய லெட்ஜரில் அவர்கள் பெயர் எங்கே இருக்கிறது என்று குறிக்கும் எண்கள். சரி, இப்போது இந்த பக்கத்தைப் பார்த்தாயா? இதில் பெயர்கள் எல்லாம் சிவப்பு மையினால் எழுதியிருக்கிறேன். இவர்கள் தான் நகருக்குள் இருக்கும் சப்ளையர்கள். இப்போது இங்கே பார். இந்த மூன்றாவது பெயரை வாசி".

"மிஸஸ். ஓக்ஷாட், 117, பிரிக்ஸ்டன் ரோடு - 249", என்று ஹோம்ஸ் வாசித்தார்.

"கரெக்ட். இப்போது அந்த லெட்ஜரில் இந்தப் பெயரைத் தேடி எடு".

ஹோம்ஸ் அந்தப் பக்கத்தைப் புரட்டினார். "இதோ இங்கே இருக்கிறது, 'மிஸஸ். ஓக்ஷாட், 117, பிரிக்ஸ்டன் ரோடு - 249, முட்டை மற்றும் பறவை சப்ளையர்'".

"ம். அதில் கடைசிக் குறிப்பு என்ன இருக்கிறது?"

"டிசம்பர் 22. இருபத்தி நான்கு வாத்துக்கள், 7s . 6d '".

"அதன் கீழே என்னக் குறிப்பு இருக்கிறது?"

"விற்பனை மிஸ்டர். விண்டிகேட், ஆல்பா, 12s '".

"இப்போ என்ன சொல்கிறாய்?"

ஷெர்லக் ஹோம்ஸின் முகம் தொங்கியது. பாக்கெட்டிலிருந்து ஒரு பவுண்டு நாணயத்தை எடுத்து கடையின் மேடை மீது ணங்கென்று எறிந்தார். வார்த்தைகளினால் விவரிக்கமுடியாத பெரும் ஏமாற்றம் அடைந்தவராய் ஏதும் பேசாமல் அங்கிருந்து நடையைக் காட்டினார். கடையிலிருந்து சிறிது தூரம் சென்று பார்வையிலிருந்து மறைந்ததும் அவருக்கே உரிய சத்தமில்லாத பலமான சிரிப்பு சிரித்தார்.

"அப்படி ஒரு கிருதாவுடனும், பாக்கெட்டிலிருந்து 'பிங்க் நிற ரேஸ் சீட்டு' எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பவனிடமும் இருந்து எந்தத் தகவலையும் 'பெட்' என்ற ஒற்றை வார்த்தையில் கறந்து விடலாம்", என்றார் ஹோம்ஸ்.

"அந்த ஆளின் முன் 100 பவுண்டகளை நான் எடுத்து வைத்திருந்தாலும் கூட இவ்வளவுத் தெளிவாக விரிவானத் தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்காது. 'பெட்' என்ற பெயரில் என்னை ஜெயிப்பதாக நினைத்ததனால் தான் அத்தனையும் எடுத்துக் கொட்டினான். நாம் நம்முடைய தேடலின் இறுதிக்கு வந்து விட்டோம் என்று நினைக்கிறேன், வாட்சன். அந்த முடிவான மிஸஸ். ஓக்ஷாட்டைத் தேடி இன்றிரவு செல்வதா அல்லது நாளைக் காலை செல்வதா என்பது தான் கேள்வி இப்போது. நம்மைத் தவிர வேறு யாரோ - "

அவருடைய வார்த்தைகள் எங்களுக்குப் பின்னால் இருந்த வந்த ஏதோ தகராறு போல் இருந்த சத்தத்தில் தடை பட்டன. நாங்கள் அப்போது தான் வெளியே வந்திருந்தக் கடையில் இருந்து அந்தச் சத்தம் வந்ததால் நாங்கள் மறுபடி அந்தக் கடைக்குச் சென்றோம். அங்கே தெருவிளக்கின் வெளிச்சத்தில் மூஞ்சுறு போன்ற முகத்தை உடைய ஒல்லியான ஒருவன் கூனிக் குறுகி நின்றிருக்க, ப்ரெக்கென்ரிட்ஜ் அந்த ஆளைப் பார்த்து முஷ்டியை உயர்த்திக் கத்திக்கொண்டிருந்தார்.

""நீங்களும் உங்கள் வாத்துக்களும்! நாசமாய் போக! இன்னொரு தடவை வாத்துக்களைப் பற்றி ஏதாவது கேட்டுக்கொண்டு இங்கே வந்தாயோ, நாயை ஏவி விடுவேன் உன் மீது. எதுவானாலும் நீ மிஸஸ். ஓக்ஷாட்டை அழைத்து வா. அவரிடம் நான் பேசிக்கொள்கிறேன். உன்னிடமிருந்தா நான் வாத்துக்களை வாங்கினேன்? "

"இல்லை. ஆனாலும் அதில் ஒரு வாத்து என்னுடையது", என்று அந்த ஒல்லி மனிதன் முனகினான்.

"அப்படியென்றால் நீ போய் மிஸஸ். ஓக்ஷாட்டைக் கேளு".

"கேட்டேன். அவர் தான் உங்களிடம் கேட்கச் சொன்னார்".

"போடா போ, போய் ப்ரூசியாவின் ராஜாவைக் கேளு. ஒழிந்து போ. போய்த் தொலை இங்கிருந்து!" என்று கத்தியபடி ப்ரெக்கென்ரிட்ஜ் அவனை அடிப்பதைப் போல் முன்னே பாயவும், அந்த மனிதன் பயந்து பின்வாங்கி இருட்டினுள் ஓடி ஒளிந்தான்.

"பிரிக்ஸ்டன் ரோட்டிற்கு ஒரு அலைச்சல் மிச்சம் என்று நினைக்கிறேன், வாட்சன். வாரும், இந்த மனிதனால் நமக்கு ஆவதென்ன என்று பார்க்கலாம்", என்றபடி அவனைப் பின் தொடர்ந்தார் ஹோம்ஸ். ஆங்காங்கேக் கூடியிருந்த மனிதர்களை ஒதுக்கிக் கொண்டு முன் சென்று அந்த ஒல்லி மனிதனின் பின் சென்று அவன் தோளைத் தொட்டார். திடுக்கிட்டுத் திரும்பிய அவன் வெளிறிய முகத்தைப் பார்த்ததும் தெரிந்தது அவன் எந்த அளவிற்குப் பயந்திருந்தான் என்பது.

"யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?" என்று லேசாய் நடுங்கும் குரலில் எங்களைப் பார்த்துக் கேட்டான்.

"நீங்கள் அந்தக் கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்க நேர்ந்தது. உங்களுக்கு நான் உதவ முடியும் என்று நினைக்கிறேன்", என்றார் ஹோம்ஸ்.

"நீங்கள் எனக்கு உதவ முடியுமா? யார் நீங்கள்? என் விஷயத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?"

"என் பெயர் ஷெர்லக் ஹோம்ஸ். மற்றவர்கள் அறிய முடியாததை தெரிந்து வைத்திருப்பது தான் என் வேலையே", என்றார் ஹோம்ஸ்.

"ஆனால் எனக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு எதுவும் எப்படித் தெரியமுடியும்?"

"மிஸஸ். ஓக்ஷாட்டினால் விற்கப்பட்ட சில வாத்துகளைப் பற்றி உனக்குத் தெரியவேண்டும்.  மிஸஸ். ஓக்ஷாட் வாத்துகளை ப்ரெக்கென்ரிட்ஜ்ஜிடம் விற்க, அவர் அவைகளை ஆல்பா விடுதியின் விண்டிகேட்டிடம் விற்க, அதிலிருந்து ஒன்றை அவர் மிஸ்டர். ஹென்றி பேக்கரிடம் விற்றார். அந்த வாத்துக்களில் ஒன்றைத் தான் நீ இப்போதுத் தேடி வந்திருக்கிறாய்".

"ஐயோ, சார்! உங்களைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன்", என்றான் அந்த மனிதன் நடுங்கும் கைகளை ஹோம்ஸை நோக்கி நீட்டியபடி. "இந்த விஷயத்தில் எனக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதென்று என்னால் சில வார்த்தைகளில் விளக்க முடியாது".

"உங்களைத்தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன்."

"அப்படியென்றால் நாம் அதைப் பற்றி விலாவாரியாக இந்த குளிர் காற்று வீசும் கடைத்தெருவிலிருந்துக் கிளம்பி கணகணவென இருக்கும் என் அறையில் அமர்ந்து பேசுவோம்", என்றபடி அந்தப் பக்கமாய் சென்ற குதிரை வண்டியைக் கைகாட்டி அழைத்தார்.

வண்டியில் ஏறும் முன் அவனிடம், "போகும் முன், நான் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்றுத் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்.

ஒரு கணம் தயங்கிய அந்த மனிதன், "என் பெயர் ஜான் ராபின்சன்", என்றான், ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தபடி.

"நோ, நோ, உன் உண்மையான பெயர்", என்றார் ஹோம்ஸ் சிரித்துக்கொண்டே. "பொய்ப் பெயர்களுடைய நபர்களுடன் பிசினஸ் செய்வதில் சிரமங்கள் இருக்கின்றன", என்றார்.

சட்டென்று முகம் சிவந்தான் அவன். "ஹூம்! என் பெயர், நிஜப் பெயர், ஜேம்ஸ் ரைடர்", என்றான்.

"ம்ம்ம். அப்படிச் சொல்லு. ஹோட்டல் காஸ்மாபாலிட்டனின் தலைமை உதவியாளர். வண்டியில் ஏறு. உனக்கு வேண்டிய விவரங்கள் அனைத்தையும் சற்று நேரத்தில் உனக்குச் சொல்கிறேன்".

ஜேம்ஸ் ரைடர் எங்களை மாறி மாறிப் பார்த்தான். அவன் கண்களில் பயமும் நம்பிக்கையும் கலவையாய்த்  தெரிந்தன. எங்களுடன் வந்தால் அவனுக்குக் கிடைப்பது அதிர்ஷ்டமா அல்லது பேராபத்தா என்றுத் தெரியாதவனாய் தயங்கி நின்றான். பின் ஏதோ முடிவுக்கு வந்தவனாய் குதிரை வண்டியில் ஏறினான்.


தொடரும் …

Write a comment ...