நீங்கள் எதையும் தவறாக வாசித்துவிடவில்லை. 'வீடு தைக்கிறீங்களா?' என்று சரியாகத்தான் வாசித்திருக்கிறீர்கள். செங்கல், மணல், சிமிண்ட், கல், கான்க்ரீட், மண், மரம், உலோகம் என்ற மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் வீட்டைக் 'கட்டலாம்'. துணியைக் கொண்டு உருவாக்கப்படும் வீட்டை 'தைக்க'த் தானே வேண்டும்? அப்படித் 'தைக்கப்படும்' வீடுகளுக்குப் பெயர் 'யர்ட்' (yurt) அல்லது 'கெர்' (ger). ருஷ்யப் பெயரான 'யர்ட்' -ம் மங்கோலியப் பெயரான 'கெர்'- ம் குறிப்பது வேறெதுவுமில்லை, கூடாரத்தைத் தான்.
' அடச்சே! இதுக்குத் தானா இந்தப் பாடு? கூடாரத்தைப் போய் வீடுன்னு எப்படி சொல்ல முடியும்?' என்று நினைத்தால், தொடர்ந்து வாசியுங்கள்.
ஈரானின் மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பித்தளைக் கிண்ணம் ஒன்றில் இந்த யர்ட் -ன் படம் இருந்துள்ளது. ‘அதனாலென்ன?’ என்று கேட்கிறீர்களா? அந்தக் கிண்ணம் செய்யப்பட்டதாகக் கணிக்கப்பட்டது 600 கிமு ஆண்டு. ஹெரோடோட்டஸ் (Herodotus) என்னும் கிரேக்க வரலாற்றாளர் 440 கிமு ஆண்டிலேயே சில குறிப்பிட்ட இனத்தவர்கள் இந்த வகை வசிப்பிடங்களில் வசித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உபயோகத்தில் இருக்கும் இருப்பிட வகை இந்த யர்ட்/கெர்.
மங்கோலிய மக்களின் முதன்மை வசிப்பிடம் இன்றும் கூட இந்த கெர் தான். மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ் கான் (Genghis Khan) எப்படி தனது 30 அடி கெர்-ல் இருந்து கொண்டு அப்பேற்பட்ட சாம்ராஜ்யத்தை வெற்றி கொண்டு ஆட்சி நடத்தினான் என்று மார்க்கோ போலோ (Marco Polo) தனது பயணக் குறிப்புகளில் விலாவாரியாக எழுதி வைத்துள்ளார். ஜெங்கிஸ் கானைப் பற்றி உலவும் கதைகளின் படி அவனுடைய 'கெர்' பிரிக்கப்படாமலேயே 22 காளைகளால் இழுக்கப்பட்ட மாபெரும் வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு, மங்கோலிய காலாட்படையாலும், குதிரைப் படையாலும் இருபத்தி நான்கு மணி நேரமும் பாதுகாக்கப்பட்டு ஒவ்வோர் இடமாகக் கொண்டுசெல்லப்பட்டது. ஒரு சாதாரண 'கெர்' ஐப் பிரிப்பதற்கோ கட்டுவதற்கோ முப்பது நிமிடங்கள் முதல் மூன்று மணி நேரம் ஆகலாம். அந்த நேரத்தைக் கூட வீணாக்காமல் திக்விஜயம் செய்தான் ஜெங்கிஸ் கான்.
இந்தக் கட்டமைப்பதும் பிரித்தெடுப்பதும் தான் யர்ட்/கெர் ன் சிறப்பம்சமே. இது எப்படி சாத்தியம் என்று புரிந்துகொள்ளவேண்டுமானால் யர்ட்/கெர் -ன் வடிவமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
யர்ட்/கெர் -ன் வடிவம் ஓர் அகலமான வட்டம். சமதளமான தரையில் அகலமான வட்ட வடிவில் மரக்கம்புகளால் அல்லது மூங்கில் பட்டைகளால் ஆன வலைப் பின்னல் போல் உள்ள சட்டத்தைச் சுற்றி, ஒன்றிற்கு மேற்பட்ட துணியையோ கம்பளியையோ இறுக்கிச் சுற்றி சுவர்கள்(!) எழுப்பி, உயரே ஒரு சிறிய வட்டத்திலான 'முடி' யில் (crown) சாய்வாக சட்டங்கள் வைத்து அதிலும் துணியை சுற்றிக் கூரையாக்கி, தேவையான இன்னபிற சில வேலைகள் சேர்த்து செய்வது தான் யர்ட்/கெர். இப்படி உருவாக்கப்படும் யர்ட்/கெர் அதிவேகமாக வீசக்கூடிய காற்றையும், பொழிந்து தள்ளும் மழையையும், நடுங்க வைக்கும் குளிரையும் சமாளித்து, உள்ளிருப்பவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.
நவீன தொழில்நுட்பங்களும் மூலப்பொருட்களும் சேர்ந்து இந்த மங்கோலிய கெர்கள் தற்போது சொகுசு வீடுகளாக அவதாரம் எடுத்துள்ளன உலகம் முழுவதும். Canvas மற்றும் insulation துணிகள், aircraft cable எனப்படும் அதிநவீன பலம் பொருந்திய stainless steel கேபிள்கள், வட்ட வடிவிற்கு ஈடு கொடுக்கும் வளைந்த கண்ணாடி ஜன்னல்கள் என்று ஒரு வழக்கமான வீட்டில் இருக்கும் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்படும் இந்த யர்ட்டுகள், அப்படி ஒரு வீட்டிற்கு ஆகும் செலவை விட மிக மிகக் குறைந்த செலவில் இத்தனையும் தருகின்றன என்பது தான் இவைகளின் அதி முக்கிய சிறப்பம்சம்.
மலைச்சரிவு, கடற்கரை, பாலைவனம், கட்டாந்தரை என்று எங்கு வேண்டுமானாலும், எந்த அளவில் வேண்டுமானாலும் (தற்போதைய ரெகார்ட் மங்கோலியாவிலுள்ள 1000 சதுர மீட்டர் கெர்) உருவாக்கலாம். மிகவும் அடிப்படையான டிசைனில் இருந்து எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய (ஏர் கண்டிஷனர், தொலைகாட்சி, சமையலறை, பாத்ரூம் போன்ற) அதி நவீன சொகுசு டிசைன் வரை அவரவர் தேவைக்கு அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ளலாம்.
மங்கோலியாவில் உருவாகி அமேரிக்கா, ஐரோப்பா என்று பரவிய யர்ட்/கெர் இந்தியாவிற்கும் வந்து சில காலம் ஆகிறது. வீட்டின் பின்புறம் இருக்கும் கொல்லையில் ஒருவருக்கான சிறிய யர்ட் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின்/ரிசார்ட்டுகளின் ஸ்பெஷல் சொகுசு அறைகள் முதல் அனைத்தும் வந்துவிட்டன இப்போது. இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதத்திற்குள் ஒரு வசிப்பிடம் தயாராகிவிடும். இடம் மாற்றிப் போனாலோ அல்லது இனி தேவை இல்லை என்று தோன்றினாலோ பிரித்தெடுத்து விடலாம். பிரித்ததை வேறு இடத்திற்குக் கொண்டுசென்று மீண்டும் அமைத்துக் கொள்ளலாம் அல்லது அதுவும் வேண்டாமெனில் மொத்தமாய் விற்று விடலாம்.
யர்ட்டில் சில அசௌகரியங்கள் இருக்கலாம் நாம் தேர்ந்தெடுக்கும் வசதிகளைப் பொறுத்து. ஆனால் இவை தடை அல்ல யர்ட்டில் வசிப்பதற்கு. தடை என்று ஒன்று உண்டெனில் அது, 'வீடு என்றால் இது தான், இப்படித் தான்' என்று நம் மனதில் நாம் வைத்திருக்கும் எண்ணம் ஒன்று தான். அதை மீறிவிட்டால் கையில் இருக்கும் காசைப் பொறுத்து நமக்கு வசிப்பிடம் தயார்.
‘வீடு series’ பதிவுகளின் இறுதி பதிவு இது. 'இப்படியெல்லாம் இருக்கிறது' என்ற தகவல்களையும். 'இப்படிக்கூடச் செய்யலாமோ?' என்ற யோசனையையும், 'இப்படிச் செய்தால் என்ன?' என்ற கேள்வியையும் முன் வைப்பதைத் தவிர இந்தப் பதிவுகளின் நோக்கம் வேறெதுவும் இல்லை. Hope it was interesting reading!
Write a comment ...