மண்ணோடு மண்ணாக … (வீடு series – III)


உலகின் மொத்த carbon dioxide வெளிப்பாட்டில் 39 சதவிகித பங்களிப்பும், உலகின் மொத்த எரிசக்தி உபயோகத்தில் 36 சதவிகித பங்கும் கொண்டு, சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் சீர்கேட்டிற்கும் பெரும் பங்காற்றுவது கட்டுமானத் துறை (construction industry) என்று World Green Building Council-ன் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்தும், தொலை தூரத்திலும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த பருவநிலை மாற்றமும் அதன் அச்சுறுத்தும் தாக்கங்களும், என்றோ, எங்கோ, எப்போதோ என்றில்லாமல் இன்று, இங்கு, இப்போது என்று மனிதகுலம் அவற்றை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

பெருகிவரும் ஜனத்திரளுக்கும் அதிகரித்துவரும் நகரமயமாதலுக்கும் ஈடு கொடுக்கும் வகையில், கட்டிடங்களின் எண்ணிக்கைகளும் அளவுகளும் இனியும் கூடிக்கொண்டுதான் செல்லுமேயன்றிக் குறைவதற்கு வாய்ப்பில்லை. அப்படி அவைகள் குறையவேண்டும் என்று நினைத்தால் அது மனிதனின் அடிப்படைத் தேவையான வசிப்பிடத்தைத் தட்டிப் பறிப்பதாகி விடும்.

வாழ்விடங்களும் வேண்டும், அதே நேரம் அவை மாசுபடுத்தாத 'green' கட்டிடங்களாகவும் இருக்கவேண்டும் என்ற இரட்டைத் தேவையைப் பூர்த்தி செய்ய உருவானது தான் 'sustainable architecture' எனும் கருத்தும் கட்டுமானத் தொழில்முறையும். இந்தக் கட்டுமான முறையை செயல்படுத்தி, 'green buildings' ஐக் கண்முன் நிஜமாக்கிக் காட்ட உலகெங்கிலும் கட்டிடக்கலை வல்லுநர்கள் (architects) உருவாகி, உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் வாய்பிளக்க வைக்கும் அற்புதக் கட்டிடங்களை.

Sanko Headquarters, Turkey

Beitou Public Library, Taiwan
Museum of Tomorrow, Brazil
Vertical Forest, Italy (Photo by Zac Wolff on Unsplash)
Floating School, Nigeria

இந்த 'sustainable architecture' ஐ த் தனி மனித வசிப்பிடங்களிலும் கடைபிடிக்க நெடுங்காலம் ஒன்றும் ஆகவில்லை. சொல்லப்போனால் 'green buildings' உருவாக்குவதில் தனி மனித வாழ்விடங்கள் தற்போதிருக்கும் தொழில்நுட்பங்களின் உதவியால் பெரும் புதுமைகளையும் புரட்சியையும் தினந்தோறும் சாதித்துக்கொண்டிருக்கின்றன.

ஆனாலும் இந்த 'sustainable architecture' ஒன்றும் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்டதோ உருவாக்கப்பட்டதோ அல்ல. காலங்காலமாய் மனிதகுலத்தின் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தக் கட்டுமான வழிமுறைகளின் அடிப்படையில் தற்காலத் திட்டமிடல்களையும், தேவைக்கு ஏற்றவைகளையும் சேர்த்துக் கட்டும் தொழில்நுட்பமே அது. 'Vernacular architecture' என்பதன் கோட்பாடுகளை வைத்துக் கட்டப்படுவதே 'sustainable architecture'. வீடு கட்டப்படும் இடத்தில் - அது அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, எதுவாக இருந்தாலும் - அந்த இடத்தில் (ஊர், கிராமம், ஆற்றங்கரை, கடற்கரை, மலையுச்சி, பாலைவனம்) கிடைக்கும் பொருட்களைக் கொண்டு (மண், கல், மரம், மூங்கில், நார், சுண்ணம்) சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அல்லது மிகக் குறைந்த அளவு பாதிப்புடன் கட்டிடங்கள் கட்டப்பட்டன, இருநூறு வருடங்களுக்கு முன்பு வரை. புதிய வகைக் கட்டுமானப் பொருட்கள் (சிமிண்ட், கான்க்ரீட்) உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்த பின் இவைகளைக் கொண்டுக் கட்டப்படும் கட்டிடங்களும் குடியிருப்புகளும் பெரும் அந்தஸ்த்தையும் மதிப்பையும் பெற்றன.

Vernacular architecture முறையில் கட்டப்பட்ட வீடுகளை 'கச்சா' வீடுகள் என்றும் சிமிண்ட்டும் கான்க்ரீட்டும் வைத்துக் கட்டப்படும் வீடுகளை 'பக்கா' வீடுகள் என்றும் பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் வகைப்படுத்துவதில் இருந்தே இந்தப் பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் மனங்களில் பதியவைக்கப்படுவது கட்டுமானத் துறைக்கு பெரும் வசதியாகி விடுகிறது, தம் பிடியைக் கெட்டியாக இறுக்கிக் கொள்வதற்கு.

இந்தக் கிடுக்கிப் பிடியிலிருந்து மனிதர்களும் பூமியும் 'vernacular architecture' மூலம், அதிலும் குறிப்பாய் 'earthen architecture' (மண் கட்டுமானம்) மூலம் கொஞ்சமே கொஞ்சமாய் மீளத் துவங்கியிருக்கிறார்கள்.

இது என்னது புதிதாய் 'earthen architecture' என்கிறீர்களா? புதிதெல்லாம் ஒன்றுமில்லை, எல்லாம் நம் மண் குடிசைகளும் மண் வீடுகளும் தான். 'மண் வீடா? ஐய்யே! அதில் போய் யார் இருப்பது?' என்று கேட்பீர்களானால் உங்களுக்கான பதில் மண் கட்டுமான முறையில் கட்டப்பட்ட மண் வீடுகளின் கீழிருக்கும் படங்கள்.

Earthen houses, Australia
Debris House, India
Rammed Earth House, Canada
Tucson Mountain Home, Arizona, USA
Earthship House, New Mexico

குறைந்த பராமரிப்பு, வீட்டின் உள்ளிருக்கும் உடலுக்குகந்த தட்பவெப்பநிலை, குறைந்த ஒலி மாசு, நீடித்து நிற்கும் தன்மை, (தஞ்சை பெரியகோவில், சீனப் பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடுகள்) உறுதி, கனம் தாங்கும் சக்தி, நெருப்பிலிருந்து காக்கும்/தடுக்கும் தன்மை, சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி மனித ஆரோக்கியத்திற்கும் உகந்தது என்று மண் கட்டுமானத்தின் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இத்தனை நன்மைகள் இருந்தாலும், ஏதேனும் ஒருசில பாதகங்களாவது இருக்கவேண்டுமே என்று நினைப்போருக்கு - சில பிரச்னைகள் இல்லாமலில்லை இதில். அடுக்கு மாடிகளோ, தீப்பெட்டிக் குடியிருப்புகளோ கட்டமுடியாது இந்த முறையில். தனியே இடம் வாங்கி அதில் அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப தான் கட்ட முடியும். பெருநகரங்களிலும் நகரின் மைய பகுதிகளிலும் இது சாத்தியமில்லை. வேலையிடத்தை, பிள்ளைகளின் கல்வியிடத்தை மாற்றி நகரை விட்டு சற்றுத் தொலைவில் இருக்கும் புறநகர் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தாலொழிய இந்த மண் கட்டுமான வீடு கட்ட இயலாது. ஆனால் அப்படிப்பட்ட முடிவை எடுக்கும் வசதியும் வாய்ப்பும் வரமும் விரும்பினாலும் கூட அநேகமாய் யாருக்கும் வாய்ப்பதில்லை என்பது தான் வாழ்வின் வருத்தம். அதனாலேயே பெரும்பாலானோர் ஓய்வு பெற்ற பின் இந்த வாழ்விற்கு மாறுகிறார்கள். முப்பதுகளில் இப்படி ஒரு கனவு மனதில் துளிர் விட்டாலும் அது சாத்தியப்படுவது (சாத்தியப்பட்டதென்றால்) என்னவோ அநேகருக்கு அவர்களின் அறுபதுகளில் தான். காத்திருந்து நனவாகும் கனவுகள் தானே வலிமை மிக்கவை!



Write a comment ...