விக்ரம்


'விக்ரம்' திரைப்படத்தைத் தற்போது தான் தியேட்டரில் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது (ஐந்து வருடங்கள் கழித்துத் திரையரங்கில் பார்க்கும் முதல் படம்). நீண்ட வருடங்களுக்குப் பிறகு (நான்கு வருடங்கள் என்று எதிலோ படித்த ஞாபகம்) கமல்ஹாசனைத் திரையில் பார்க்கும் வாய்ப்பைத் தமிழகம் மட்டுமல்ல, அவரின் உலகெங்கும் பரவியிருக்கும் ரசிகர்கள், கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள், இல்லை, இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படம் தொடங்கும் முன் கமல்ஹாசன் ரோபோ சங்கரின் கன்னத்தில் அழுந்த முத்தமிடும் ஒரு ஸ்லைடு போடப்பட்டது. தியேட்டர்களில் இன்னமும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் காட்சிகள் அனைத்தும் கமலுக்கு அவரின் ரசிகர்கள் அவரின் கன்னத்தில் அழுந்தக் கொடுக்கும் முத்தங்களே. இப்படி ஒரு கலைஞரை இப்படிக் கொண்டாடுவதுதான் நியாயம்.

கடந்த வருடங்களில் அரசியலில் கமல்ஹாசன் சந்தித்த நடப்புகள் அவருக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கலாம். 'விக்ரம்' திரைப்படம் அவரை தமிழர்களுக்கு நடிகனாய் மறுபடி வெள்ளித்திரையில் முன் நிறுத்தியது மட்டுமல்லாமல், தமிழக மக்கள் தங்கள் இதயங்களில் அவருக்கு அளித்திருக்கும் ஸ்பெஷல் இடத்தையும் காட்டிவிட்டது. ரசிகர்கள் அவரைக் கொண்டாடிக் கூத்தாடியது மட்டுமல்லாமல், தங்கள் அன்பில் அவரது உடல், மனம், இதயம், புத்தி என்று அத்தனையும் குளிரக் குளிரத் தோய்த்து அவரை நனைத்து விட்டார்கள். இந்தப் பரிமாற்றத்திற்குக் காரணமாய் இருந்த லோகேஷ் கனகராஜுக்கும் அவரது குழுவிற்கும் மிகப்பெரிய மனமார்ந்த நன்றிகள்.

கமல் 'விஸ்வரூபம்' எடுத்த போது இது போன்ற ஓர் ஆக்ஷன் ஹீரோவை மனதில் வைத்துத் தான் எடுத்தாரோ என்னவோ! அவருடைய 'விக்ரம்'(I)ன் கிட்டத்தட்ட அப்டேட்டட் முயற்சியாக 'விஸ்வரூபம் I&II' இருந்ததைப் போல் தோன்றியது அந்தப் படங்களைப் பார்க்கும் போது. அவர் மனதில் இருந்தது இந்த 'விக்ரம்' ஆகத் தான் இருந்திருக்க வேண்டும். அதை லோகேஷும் அவரது குழுவும் திரையில் ஏற்றியதில் கமலின் கனவும் கூட நிறைவேறிவிட்டதைப் போல் தோன்றியது, திரையில் அவரைப் பார்க்கும் போது. ஈடுபாடு, அர்ப்பணிப்பு, உழைப்பு என்பதையெல்லாம் தாண்டி … ஆங்கிலத்தில் 'relish' என்றொரு வார்த்தை உண்டு. 'அனுபவித்து சுவைப்பது' என்பது தமிழில் அதற்கு கிட்டத்தட்ட இணையான சொல் பிரயோகம். அந்த 'relish' அவரின் ஒவ்வொரு அசைவிலும், திரையில் அவர் தோன்றும் ஒவ்வொரு நொடியிலும் தெரிகிறது. He has utterly and completely relished his role as ‘Vikram’. அவருடைய வயதில் அவர் காட்டும், கடத்தும் ஆக்ரோஷமும், ஆக்ஷனும் – ‘The Expendables’ can’t hold a candle to you, Sir! இப்படி ஒரு ரோலில் அவர் ரசித்து நடிப்பதற்கும் அவர் ரசித்து நடித்ததை ரசிகர்கள் ரசித்துப் பார்ப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திய லோகேஷுக்கு, தாங்க் யூ!

நன்றிகள் வழங்கும் அதே நேரத்தில் சில கேள்விகளையும் முன் வைக்காமல் இருக்க முடியவில்லை.

ஒரு நல்லவனை நல்லவனாக, வல்லவனாகக் காட்சிப்படுத்த, முன் வைக்க, சித்தரிக்க அவன் எதிர்கொள்ளும் வில்லன் தீமைகளின் பிரம்மாண்டமாக இருக்கவேண்டும் என்பது எந்த ஒரு 'நல்லது vs. கெட்டது’ கதையின் அடிப்படை விதி என்பது திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, எழுதப்பட்ட, எழுதிய, எழுதப்போகும் என்று அத்தனை கதைகளுக்கும் பொருந்தும். அதில் ஒரு வகை நியாயம் கூட இருக்கிறது.

மிகக் கொடியவனையும் எதிர்த்து வெற்றிக் கொள்வதில் தான், கொண்டால் தான், நல்லவனின் மீதும், நல்லவனாக இருப்பதின் மீதும் உள்ள வாழ்வின் அடிப்படை நம்பிக்கை ஊர்ஜிதமாகும், ஸ்திரப்படும்.

ஆனால் இந்த நம்பிக்கையைக் கெட்டிப்படுத்த அதைத் திரைப்படங்களில் எடுத்துக் கையாளும் போது இயக்குனருக்கும் கதாசிரியருக்கும் ஒரு கூடுதல் பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டியது அவசியம். 'காட்சிப்படுத்துதல்' என்று வரும் போது நல்லவனை நல்லவனாகக் காட்ட ஏற்படும் சிரமங்கள் கெட்டவனைக் கெட்டவனாகக் காட்ட நம் திரைப்படங்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. அதனாலேயே வில்லனும் வில்லத்தனமும் அணு அணுவாகக் காட்சிப் படுத்தப்படுகின்றன.

இப்படிப்பட்டக் 'காட்சிப்படுத்துதல்கள்' இளம் பார்வையாளர்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிச் சற்றும் கவலையில்லாமல் 'விக்ரம்' படக் குழு மொத்தமும் செயல்பட்டு, செயல்படுத்தி இருப்பது முதல் சில காட்சிகளிலிருந்தே மனதைப் பிசைவதைத் தடுக்க முடியவில்லை. மக்களின், குறிப்பாய் இளம் தலைமுறையின் (நான் பார்த்த காட்சியில் தியேட்டரில் குழந்தைகள் அநேகம். U/A certificate உபயம். நியாயப்படி 'A' certificate தான் கொடுத்திருக்க வேண்டும். எத்தனைக் காட்சிகளை என்னவென்று 'parental guidance' கொடுக்கமுடியும்?) ஆதர்ச நாயகர்களாக விளங்கும் விஜய் சேதுபதியும், சூர்யாவும் இந்தக் கோணத்தில் யோசித்தார்களா, யோசித்தும் அதை புறந்தள்ளிப் போனார்களா என்றுத்  தெரியவில்லை. போதைப் பொருள் கடத்தல் தலைவர்களாக, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் கொண்டவர்களாக, சற்றும் சலனமில்லாமல் மனிதர்களின் (பெண்களின்) தலையை முகத்தில் ரத்தம் தெறிக்க வெட்டுபவர்களாக, எல்லாவற்றிற்கும் மேலாக மூடுக்கொரு போதை மருந்தைக் கடிப்பவர்களாக, ஈறுகளில் ஈஷிக்கொள்பவர்களாக … என்று இப்படிப்பட்டக் கதாபாத்திரங்களில் எந்த விதக் குறுகுறுப்பும் இல்லாமல் நடிப்பதற்கு (எத்தனைக் கோடிகள் கொடுத்தாலும்) எப்படி ஒத்துக்கொண்டார்கள் என்று புரியவில்லை. 

லோகேஷ் கனகராஜின் முந்தைய படம் 'மாஸ்டர்'ல் விஜய் எப்போதும் போதையில் இருக்கும் கல்லூரி பேராசிரியரின் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார், லோகேஷ் அவரை ஏற்கத் செய்திருப்பார். விஜய் ஏற்று நடித்ததனாலேயே வசூலில் வெற்றி பெற்ற அந்தப் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களில் அநேகம் பேர், ஆசிரியரை அடிக்கக் கை ஓங்கிய மாணவ பருவத்தினர் என்பதை அறிந்தும் தான் இத்தகைய கதாபாத்திரங்களை வடிக்கிறார்களா? குழந்தைகளைக் குற்றத்தில் ஈடுபடுத்தும் வில்லனை அதேப் படத்தில்  படைத்த இயக்குநர், அந்த வில்லனாக நடித்த நடிகர், இருவரும் அடுத்தப் படத்தில் இணைந்து வில்லத்தனத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றது தான் 'விக்ரம்'ன் 'சந்தானமோ' என்னவோ?

வில்லனுடன் இருப்பது நூற்றுக் கணக்கானோர், ஹீரோவுடன் இருப்பது நான்கைந்து பேர். அந்த நான்கைந்து பேரும் கொல்லப்படவேண்டும், ஒற்றை மனிதனாய் அனைத்தையும் இழந்து ஹீரோ போராடி வெல்லவேண்டும் என்ற cinematic cliché- வை அடுத்தப் படத்திலாவது உடைத்தெறியுங்கள், லோகேஷ்! நல்லவர்கள் deserve to live till the end.

'One man’s revolution is another man’s terrorism', போன்ற உப்புசப்பில்லாத நியாயப்படுத்துதல்களைத் தவிர்த்து, 'தப்புன்னா தப்புதேன்', என்று விக்ரம் கடைசியில் விருமாண்டி பாணியில் சொல்லியிருந்தால் அது தான் உண்மையான ஹீரோயிசம். 'It’s not just a revenge story but it’s also a revenge story', என்று விக்ரமின் பாசத்தையும் acknowledge செய்யுங்கள். விக்ரமை அது உயர்த்துமே தவிர தாழ்த்தாது.

கமல் சாருக்கும் ராஜ்கமல் புரொடக்ஷனுக்கும் ஒரு வேண்டுகோள். அப்பட்டமான இத்தனை வன்முறையையும், மனிதனைக் குரங்காக devolution செய்யும் போதைப் பொருளையும் இவ்வளவு அப்பட்டமாகக் காட்சிப்படுத்தி, இளம் தலைமுறையினரை மட்டுமல்ல, பார்வையாளர்கள் அனைவரையும் வன்முறைக்கும் வன்முறைக்குத் தூண்டும் பொருட்களுக்கும் desensitize செய்யாமல் திரைப்படம் எடுக்க முயலுங்கள். இலக்கியத்தில் உருவாக்கப்பட்ட மாபெரும் வில்லன் ஷேக்ஸ்பியரின் இயாகோ (Iago). அவன் தனது வில்லத்தனத்திற்கு உபயோகித்த ஆயுதங்கள் அவனின் வாயும் அதிலிருந்து அவன் உதிர்த்த வார்த்தைகளும் மட்டுமே.

இரண்டு வருடங்களாக வீட்டினுள் முடங்கிக் கிடந்த இளம் தலைமுறையினர் வடிகால்கள் ஏதுமின்றி வெறுத்து, விரக்தி அடைந்து, அதனால் அவர்களிடம் ஆக்ரோஷமும், முரட்டுத்தனமும் கூடியிருக்கின்றன என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கருத்துக்கள் கூறப்பட்டு வரும் வேளையில், இத்தகையத் திரைப்படங்கள் எவ்வகை சிந்தனையை அவர்களிடையே வேரூன்ற வைக்கும் என்று சற்றே கவனத்தில் கொண்டுத் திரைப்படங்கள் எடுப்பது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல, கொஞ்சம் சவாலானது. அந்த சவாலுக்கு லோகேஷும் அவரது குழுவும் சளைத்தவர்கள் அல்ல என்ற நம்பிக்கை அவர்களின் அடுத்த படத்தில் மெய்யாகிறதா பொய்யாகிறதா என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

இந்தப் படத்தில் இருக்கும் லாஜிக் பொத்தல்களை அதிலாவது சரி செய்கிறார்களா என்றும் பார்க்கவேண்டும். எந்தவொரு கதைக்கும் அதன் 'internal' லாஜிக் என்று ஒன்று இருக்கிறது. எப்படித் தான் கதையைக் கொண்டு சென்றாலும் இந்த 'internal' லாஜிக் மீறப்படக்கூடாது. அப்படி அதை மீறினால் கதையும் அதை வைத்து எடுக்கும் திரைக் காட்சிகளும் நகைப்புக்குள்ளாகிவிடும். பெரும் சத்தம் பேரனின் உயிருக்கு ஆபத்து எனும் மருத்துவ கண்டிஷனை விக்ரமின் பேரனுக்கு கொடுத்துவிட்டார்கள் கதையில். சரி, accepted.  பேரனின் தந்தை, அவரது மகன் இறந்த பின் அந்த சாவு வீட்டின் ஒப்பாரி சத்தம் பேரனின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காக அழுபவர்களை அமைதியாக்க பாட்டன் விக்ரம் செய்யும் காரியம் பூத்தொட்டியை டமாரென்றுக் கீழே போட்டு உடைப்பது. அந்த சத்தம் தாத்தாவால் எழுப்பப்பட்டதால் அது பேரனை ஒன்றும் செய்யாதோ என்னவோ?

முந்தைய காட்சியில் போலீஸ் கமிஷனர் 'Black Squad' ன் அருமை பெருமைகளை விலாவாரியாக விவரித்துச் சொல்கிறார் - அவர்கள் 'கோஸ்ட்' என்றும், அவர்களுக்கு ஐடென்டிட்டியோ குடும்பமோ எதுவும் கிடையாது என்றும். மறு சீனில் அந்த 'Black Squad'ன் தலைவர் அமர் தன் கேர்ள்பிரண்டிடம் நான்கு நாட்களில் அவர்கள் செய்துகொள்ளப்போகும் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறார். வில்லனிடம் சிக்கிச் சாக அமரின் மனைவியாக அவர் தேவையாயிருக்கிறார். அமருக்கு அந்த பர்சனல் இழப்பு இருந்தால் தானே அவரும் கமாண்டர் விக்ரமுடன் சேர முடியும்?

ஓர் உயிர் பிரிந்துவிட்டால், யாராக இருந்தாலும் அவர்கள் செய்ய வேண்டியது முதலில் அந்த உயிரை மீட்கப் போராடுவது தான். பேரனைக் காக்க என்று களத்தில் குதித்த கமாண்டர் விக்ரம், கையில் பேரனின் உயிரற்ற உடலை வைத்துக்கொண்டு அவனிடம் 'நீயும் நானும் செத்துப் பிழைத்தவர்கள்' என்று வசனம் பேசிவிட்டு, தன் சகாவிடம் கொடுக்கிறார் உயிரற்ற உடலை. அவரும் அந்தத் தடை, இந்தத் தடை என்று அத்தனையும் தாண்டி, நரேனின் கையில் அந்த உடலை ஒப்படைக்க, அவரோ அதை அமரிடம் கொடுத்துவிட்டு 'Code Red' பிளானை செயல் படுத்தப் போய்விடுகிறார். அமர் அதன் பின் ஏதோ ஒரு டாக்டரிடம் போன் போட்டு அவர் சொல்வது போல் 'CPR' செய்து குழந்தைக்கு உயிரூட்டுகிறார். இவை அத்தனையும் நடந்து முடிக்கக் குறைந்தது ஒரு பத்து நிமிடங்களாவது ஆகியிருக்கும். அவ்வளவு நேரம் கழித்து ஓர் உயிரை, அதுவும் குழந்தையின் உயிரை, ரிவைவ் செய்ய முடியுமா என்பது முதல் கேள்வி. சரி, அப்படியே ரிவைவ் செய்தாலும் அவ்வளவு நேரம் ஆக்சிஜன் இல்லாத அந்தக் குழந்தையின் மூளை எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கும்? 'Cerebral Hypoxia' என்னும் கண்டிஷனையும் சேர்த்தே ரிசர்ச் செய்திருக்கலாம் லோகேஷின் குழு. இவைகளையெல்லாம் பார்க்கும்போது 'கைதி' was a better written film என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

BGM என்பது 'Background Music' என்று யாரேனும் இசையமைப்பாளருக்குச் சொன்னார்களா என்றுத் தெரியவில்லை. It was neither ‘background’ nor ‘music’, but BGN ‘background noise’. Maestroவின் BGMமைக் கேட்டும் பார்த்தும் வளர்ந்தத் தலைமுறையினருக்கு இது ஒரு காது பிளக்கும் அனுபவமாகத்தான் அநேகமாக இருந்திருக்கும். பேசும் வசனங்கள் கூட காதில் விழாதவாறு அத்தனையையும் தூக்கிக் காதில் போட்டுக் கொண்டது இசை(!).

வசனம் என்னும் போது விஜய் சேதுபதியின் பேசும் ஸ்டைலைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. வில்லனாக வேறொரு பரிமாணத்தைக் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் அவராக அந்தப் பல்லைக் கடித்துக்கொண்டு பேசும் ஸ்டைலைத் தேர்ந்தெடுத்தாரா அல்லது அப்படிப் பேசும் படி அவருக்குக் குறிப்புகள் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. திரையரங்கில் Dolby Atmos sound systemமிலும் கூட அவர் பேசியவை முக்கால்வாசிக்கு மேல் காதில் விழவில்லை. ஏதோ யூகத்தில் தான் வசனங்களைப் புரிந்துகொள்ள வேண்டியதாயிற்று.

பாஸிட்டிவ்கள் இல்லாமல் இல்லை. அதில் முதலும் முக்கியமும் ஏஜென்ட் டீனா. அற்புதமாய் செய்திருந்தார். க்ரூப் டான்சராக இருந்தவரை முக்கிய ரோல் கொடுத்து முன்னே நிறுத்தியதற்கு லோகேஷுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். என்ன, அவரை இந்தப் படத்திலேயேக் கொன்றுவிட்டது தான் ஆதங்கம். அடுத்த பாகத்திலும் அவரைத் தொடரச் செய்திருக்கலாம். She would be missed in the sequel.

படத்தின் இன்னொரு மிகப்பெரிய ப்ளஸ் பஹத் பாசில். விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் கமல் அவரை 'மிளகாய் பஜ்ஜி' என்று கூறியிருப்பார். பார்க்க சாதுவாக இருக்கும் அவர், 'கேமரா ஸ்டார்ட்' என்று சொல்லியதும் மிளகாய் பஜ்ஜியின் காரத்தைப் போன்று பர்பார்ம் செய்து விடுவார் என்று சொல்லியிருப்பார். அவரின் வார்த்தைகளுக்கு சான்றாக அமராக அவர் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு பீரங்கி இழுத்து வரும் விக்ரமைப் பார்க்கும் ஒரு பார்வை போதும். இரண்டாம் பாகத்திலாவது விக்ரமும் அமரும் சேர்ந்து இருக்கும் காம்பினேஷன் காட்சிகள் வையுங்கள்.

ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் நேர்த்தியாய் அமைந்திருக்கின்றன. ஆனால் எல்லாமே 'set piece' ஆக்ஷன் காட்சிகளாக ஆனதில் கொஞ்சம் வருத்தம். ஒன்றேனும் அவுட்டோர் காட்சியாக்கியிருக்கலாம். கமலுக்கு 'traditional தமிழ் சினிமா’ சண்டைக் காட்சிகளும் துப்பாக்கிகளும் கொடுத்துவிட்டீர்கள் முதல் பாகத்தில். அடுத்த பாகத்திலும் 'more of the same' என்று இதையே தொடராமல் 'close quarter combat', ('வெற்றிவிழா' வின் lift fight action sequence ஒரு சாம்பிள் என்பதாக முடிந்துவிட்டது) Jason Bourne, John Wick  போல் கொடுத்து ரசிகர்களுக்கு அவரின் இன்னொரு பரிமாணத்தையும் காட்டிவிடுங்கள்.

நான்கு வருடங்களுக்குப் பின் உற்சவ மூர்த்தியை ஆசை ஆசையாய் அலங்கரித்து, புத்தம் புது தேரில் ஏற்றி, விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில், நரேன் என்று நால்வர் நாற்புறமும் சாமரம் வீச, துப்பாக்கிகளும், பீரங்கிகளும் முழங்க உலக பவனி எடுத்து வந்திருக்கிறார் லோகேஷ். வேட்டுச் சத்தம் சற்று அதிகமாகவேக் காதைப் பிளந்தாலும், ஆரவாரமான மனம் குளிரும் தரிசனம் என்பதில் சந்தேகமில்லை என்பதை உலகெங்கும் ரசிகர்கள் இன்னமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் வெற்றியை இதன் அடுத்த பாகம் முறியடிக்க வேண்டுமென்றால் கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் லோகேஷும் அவரது குழுவும். ஓரளவு எதிர்பார்ப்புடன் வந்த இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்கிறதென்றால் இதன் அடுத்த பாகத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு இமயத்தை மிஞ்சும். மொத்தமாக அதை வேறு திசையில் கொண்டு சென்றால் ஒழிய முதலுடன் இரண்டாவதை ஒப்பிடுவதைத் தடுக்க முடியாது. ஆனால் அது கொஞ்சம் கடினமான வேலையாகத்தான் தெரிகிறது. இதே கத்தி, ரத்தம், அரிவாள், வெட்டு, குத்து என்று சூர்யாவுடன் இத்தனையையும் முடிச்சுப் போட்டு அடுத்த பாகத்திற்கு விதை விதைத்து விட்டார்கள். இவை அனைத்தையும் தேவர் மகனே தூக்கி எறிந்து விட்டார். ஆனால் கமாண்டர் விக்ரம் இன்னும் இவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் - II (technically ‘III’ ஆ?) என்னவாக எப்படி இருக்கும்? வரட்டும், பார்த்துக்கலாம்.


Write a comment ...