ஷெர்லக் ஹோம்ஸ் - நீல மாணிக்கம் - III


நான் மறுபடியும் பேக்கர் தெருவின் வீட்டிற்குச் செல்வதற்கு ஆறரை மணி ஆகி விட்டது. வாசலில் ஒரு உயரமான மனிதர், தன் கோட்டை கழுத்து வரை இறுக்கிப் பொத்தானிட்டு மூடி, தலையில் சற்றும் பொருந்தாத ஒரு துணித் தொப்பியை அணிந்துகொண்டு தெருவிளக்கின் வெளிச்சத்தில் நின்றுகொண்டிருந்தார். நான் அங்கே செல்வதற்கும் கதவு திறப்பதற்கும் சரியாக இருக்க, இரண்டு பேரும் சேர்ந்தே மாடிக்குச் சென்றோம்.

"நீங்கள் மிஸ்டர். ஹென்றி பேக்கராக இருக்க வேண்டும்"

"நீங்கள் மிஸ்டர். ஹென்றி பேக்கராக இருக்க வேண்டும்", என்றபடி அவரை புன்னகையுடன் வரவேற்ற ஹோம்ஸ், ஒரு நாற்காலியைக் காட்டி அதில் அவரை அமரச் சொன்னார். வேண்டும் பொழுது  மிகவும் இணக்கமான ஒரு சுபாவத்தை சட்டென்று ஏற்கும் திறமை ஹோம்ஸிடம் நிரம்பவே உண்டு.

"ஆஹ்! வாட்சன், சரியான நேரத்தில் வந்துவிட்டீர்", என்ற ஹோம்ஸ் பேக்கரிடம் திரும்பி, "கணப்பு நெருப்பின் அருகே அமருங்கள், மிஸ்டர். பேக்கர். வெளியே குளிர் அதிகம் இன்று. உங்கள் உடல் குளிர் காலத்தை விட வெயில் காலத்திற்கு ஏற்றது போல் தெரிகிறது", என்றவர், "இது உங்கள் தொப்பியா என்று பாருங்கள்", என்று தொப்பியை அவரிடம் காட்டினார்.

"நிச்சயமாய் அது என்னுடைய தொப்பி தான். சந்தேகமேயில்லை", என்றார் ஹென்றி பேக்கர்.

வெளிச்சத்தில் அவரை கவனித்தேன். உருண்டு திரண்ட தோள்களுடன் இருந்தார் ஹென்றி பேக்கர். தலையின் அளவு மிகப் பெரியதாய் இருந்தது. கண்கள் தெளிவாக இருந்தாலும் முகத்தில் ஆங்காங்கே நரைத்திருந்த இரண்டு நாட்களின் தாடி முள்ளு முள்ளாய் வளர்ந்திருந்தது. முன்புறம் கழுத்து வரை பொத்தான்கள் மூடியிருந்த பழைய நைந்த கோட்டின் வெளியே நீட்டிய கைகளின் மணிக்கட்டுகள், உள்ளே சட்டை அணிந்திருப்பதற்கான அறிகுறியாய் இருக்கும் சட்டைக் கஃப்கள் இல்லாமலே மெலிந்து நீண்டன. பேசும் வார்த்தைகளை நிறுத்தி நிதானமாய் அளந்து பேசினார், ஹென்றி பேக்கர். ஒரு காலத்தில் மெத்தப் படித்து நல்ல வேலையில் இருந்தவர் இன்று நொடித்துப் போயிருப்பதின் அறிகுறிகள் நன்றாகவேத் தெரிந்தன அவரிடம். ஹோம்ஸின் கையைப் பற்றிக் குலுக்கிய போது அவர் கையில் தெரிந்த லேசான நடுக்கம், குடிக்கு அவர் அடிமையாய் இருக்கலாம் என்ற ஹோம்ஸின் கணிப்பை உறுதி செய்தன.

"இந்தப் பொருட்களை சில நாட்களாகவே பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம், மிஸ்டர். பேக்கர். நீங்கள் இவற்றைப் பற்றி விளம்பரம் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஏன் நீங்கள் நாளிதழ்களில் காணாமல் போனப் பொருட்களைப் பற்றிய விளம்பரம் எதையும் கொடுக்கவில்லை?" என்று ஹோம்ஸ் வினவினார்.

கூச்சத்துடன் புன்னகைத்தார் ஹென்றி பேக்கர். "முன்பு போல் இப்போதெல்லாம் என்னிடம் காசு புரள்வதில்லை. என்னைத் தாக்கிய அந்த முரடர்கள் என் தொப்பியையும் வாத்தையும் நிச்சயம் தூக்கிக் கொண்டு போயிருப்பார்கள் என்று நினைத்தேன். திரும்பக் கிடைக்காது என்று தெரிந்த பின் அவற்றை மீட்க ஏன் இன்னும் செலவு செய்ய வேண்டும் என்று தான் விளம்பரம் எதையும் கொடுக்கவில்லை", என்றார் ஹென்றி பேக்கர்.

"அதுவும் சரி தான். ஆனால் நீங்கள் வாங்கிய வாத்தை உண்ண வேண்டிய கட்டாயமாகி விட்டது. இதற்கு மேலும் வைத்திருந்தால் அது கெட்டுப்போய்விடும் என்பதால் அதை நாங்கள் உணவாக்கி விட்டோம்", என்றார் ஹோம்ஸ்.

"என்னது! நீங்கள் அதை சாப்பிட்டு விட்டீர்களா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டார் ஹென்றி பேக்கர்.

"ஆம்! இதற்கு மேலும் அதை வைத்திருந்தால் அது யாருக்கும் உபயோகமில்லாமல் போயிருக்கும். ஆனால் அதற்கு பதில் கிட்டத்தட்ட அதே எடையுடைய இந்தப் புதிய வாத்தை வாங்கி வைத்திருக்கிறோம். இது உங்களுக்கு சம்மதம்தானே?" என்று கேட்டார் ஹோம்ஸ், மேஜையில் வைக்கப்பட்டிருந்த வாத்தைக் காட்டி.

"ஓ! நல்ல வேளை. நிச்சயமாய் இது போதும்", என்றார் ஹென்றி பேக்கர் முழுதாய் இருந்த வாத்தைப் பார்த்து ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன்.

"உங்கள் வாத்தின் இறக்கைகள், கால்கள், வயிறு என்று மற்ற எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். உங்களுக்கு வேண்டுமானால் - "

ஹென்றி பேக்கர் சத்தமாக சிரித்தார். "என் இரவு நேர சாகசத்தின் சின்னங்களாக வேண்டுமானால் நான் அவற்றை வைத்துக்கொள்ளலாம். மற்றபடி அவற்றை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்? நோ சார், உங்கள் அனுமதியின் பேரில் நான் இந்த மேஜையில் இருக்கும் ஆகச் சிறந்த வாத்தின் மேல் மட்டும் என் கவனத்தை செலுத்துவது தான் நலம்", என்றார் ஹென்றி பேக்கர், கொழுகொழுவென்று மேஜையின் மீது இருந்த வாத்தின் மேல் பார்வையைப் பதித்த படி.

சட்டென்று என்னை ஓர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார் ஹோம்ஸ்.

"அப்படியென்றால் இந்தாருங்கள் உங்கள் தொப்பி. அந்த வாத்தும் உங்களது தான்", என்றபடி ஹென்றி பேக்கரிடம் தொப்பியைக் கொடுத்த ஹோம்ஸ்,மேஜையில் இருந்த வாத்தை எடுத்துக் கொள்ளும் படி ஹென்றி பேக்கரிடம் சைகை செய்தார்.

வாத்தை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டார்

"ஹாங்! ஒரு நிமிடம்… நீங்கள் அந்த வாத்தை எங்கே வாங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா? எத்தனையோ வாத்துகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் வாங்கியிருந்த வாத்தைப் போல் வளர்க்கப்பட்ட வாத்தை இதுவரை பார்த்ததில்லை", என்றார் ஹோம்ஸ்.

"கண்டிப்பாக, சார்", என்று கூறிய ஹென்றி பேக்கர் மேஜையில் இருந்த வாத்தை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டு தொடர்ந்தார். "அருங்காட்சியகத்தின் அருகே உள்ள 'ஆல்ஃபா இன்' என்னும் விடுதிக்கு நானும் என் நண்பர்கள் சிலரும் அடிக்கடி செல்வோம். இந்த வருடம், அந்த விடுதியின் உரிமையாளர், விண்டிகேட் என்பவர், ஒரு வாத்து கிளப்பை உருவாக்கினார். அந்த கிளப்பின் உறுப்பினர்கள் ஒவ்வொரு வாரமும் சில பென்சுகள் கொடுத்துக்கொண்டே வரவேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு அந்த வருடத்தின் இறுதியில் கிறிஸ்துமஸிற்கு ஒரு வாத்து கொடுக்கப்படும். நான் என் பங்கை சரியாகக் கொடுத்து வந்தேன். அதன் பலனாக எனக்குக் கிடைத்தது தான் அந்த வாத்து. மற்றதெல்லாம் தான் உங்களுக்குத் தெரியுமே. என் தொப்பியை மீட்டுக் கொடுத்ததற்கு மிக்க நன்றி, சார். என் வயதிற்கும் உடலிற்கும் இந்தத் துணித் தொப்பி உகந்ததல்ல ", என்று கூறிய ஹென்றி பேக்கர் அவருடைய தொப்பியை எடுத்துக் கொண்டு எங்களுக்கு மிகப் பெரிய வணக்கம் ஒன்றை செய்துவிட்டு வெளியேறினார்.

"ஹென்றி பேக்கருக்கு இந்த விஷயத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்பது தெளிவாகிவிட்டது", என்றார் ஹோம்ஸ், ஹென்றி பேக்கரை வெளியே அனுப்பி கதவை சாத்திக்கொண்டே. "உமக்குப் பசிக்கிறதா, வாட்சன்?" என்று என்னைக் கேட்டார்.

"அவ்வளவாக இல்லை", என்றேன் நான்.

"அப்படியென்றால் நாம் இப்போதே எதையாவது லேசாக சாப்பிட்டுவிட்டு, சூடாக இருக்கும் போதே இந்தக் க்ளூவைத் தொடரவேண்டும்", என்றார்.


தொடரும் …

Write a comment ...