'விடுதலையே உன் விலையென்ன?'


இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிக நேரம் செலவழித்த ஸ்டால் 'முத்து காமிக்ஸ்' ஸ்டால். குவிந்திருந்த காமிக்ஸ்களிலிருந்து எதை எடுப்பது, எதை விடுப்பது என்று சுற்றி வந்து முடிவெடுத்து வாங்கியவைகளுள் ஒன்று 'விடுதலையே உன் விலையென்ன?' முழுதும் வண்ணப் படங்களைக் கொண்டு வழவழப்பான உயர்தரக் காகிதத்தில் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்ட அந்த 65-பக்க காமிக்ஸ்ன் விலை ரூ.45/- என்று பார்த்தபோது நம்பத்தான் முடியவில்லை. மேலும் நான்கு காமிக்ஸ்களையும் சேர்த்து வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து ஆவலாய் 'விடுதலையே உன் விலையென்ன?'வைப் பிரித்ததில் முதல் பக்கத்தில் முதலில் கண்களில் பட்டது ஆசிரியர் திரு. விஜயன் அவர்களின் வாசகர்களுக்கான கடித முன்னுரை.

"நண்பர்களே,

வணக்கம். இந்தாண்டின் முதல் one-shot கதையோடு உங்களை சந்திக்கிறேன்! கதை மட்டுமே நடுநாயகம் என்றானதொரு conceptல் உருவாக்கப்பட்ட ஆல்பமிது! உறையச் செய்யும் குளிர்மண்டலமான சைபீரியா; ரஷ்யாவின் அந்நாட்களது இரும்புக்கரம்; விடுதலையை உயிர்மூச்சாக நேசிக்கும் சாமான்ய மக்கள் என்றதொரு புதிரான முக்கோணத்துக்கு மத்தியில் புனையப்பட்டிருக்கும் இந்த சாகசம் நிச்சயமாய் ஒரு அழுகாச்சிக் காவியமல்ல! So- லேசான புராதனம் தட்டுப்படும் சித்திரங்களையும் மங்கலான கலரிங் பாணிகளையும் பார்த்துவிட்டு ஓட்டம் பிடிக்கும் அவசியமிராது! நிறைய மாந்தர்கள் வந்து செல்லும் கதைக்களம் என்பதால் நிதானமாய், கவனமாய் படித்தால் தான் ஒவ்வொருவரின் சிற்சிறு பங்களிப்பும் என்னவென்பதை உணர்ந்திட முடியும்!

நாம் பார்த்திராத சில புதிய களங்களை; இன்றைய நவீன உலகிற்குத் துளியும் தொடர்பில்லா சில வரலாற்று நாட்களை தரிசிக்க இது போன்ற கதைகள் சின்னதொரு ஜன்னலாக எப்போதாவது ஓரிரு முறைகள் இருப்பதில் தப்பில்லை என்ற எனது அவாவின் பலனே இந்தக் கதைத் தேர்வு! -வழக்கமான நமது டமால் - டுமீல் நாயகர்களையும்; 'ஓங்கி அடித்தால் ஒன்றரை டன்' பன்ச் டயலாக்குகளையும் ஒரு 30 நிமிடங்களுக்கு நினைவலைகளிலிருந்து நீக்கி விட்டு இந்தப்பனி மண்டலத்திற்குள் நுழைந்து பார்த்தால் ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவம் உத்தரவாதம்! 

ஆண்டாண்டு காலமாய் heroக்களை சிலாகித்தே பழகிப் போய்விட்ட நமது ரசனைகளை கொஞ்சமே கொஞ்சமாய் வித்தியாசமான மார்க்கங்களில் திருப்பிப் பார்க்கும் முயற்சிகளை 2013 முதலே நாம் செய்து வருவது ஒரு open secret தானே?! அதில் சில 'ஓகோ' பாராட்டுகளும்; பல பற்களின் நறநறப்புகளையும் நாம் ஈட்டியிருப்பதிலும் இரகசியமில்லை எனும் போது - சிவனே என்று ரிஸ்க்கில்லாத கதைகளாகப் போட்டுச் செல்லலாமே என்ற எண்ணம் மண்டைக்குள் எழாதிருப்பதில்லை தான்! ஆனால் மாயாவியார்களோடும்; வில்லர்களோடும்; டைகர்களோடும் நமது (காமிக்ஸ்) வாசிப்புகள் நின்று போய்விட வேண்டாமே என்ற சன்னமான குரலும் தலைக்குள் அடங்குவதில்லை எனும் போது வெற்றி தோல்வி என்ற அடையாளங்களைத் தாண்டியும் இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளை செய்யத் தோன்றுகிறது! 'மண்டையில் கொட்டா?' பிழைத்துப் போ மகனே...!' என்ற கருத்தா? விடை தெரிய உங்கள் விமர்சனங்களுக்காகக் காத்திருப்போம்!

மீண்டும் சிந்திப்போம்! Happy reading!

என்றும் அன்புடன்
S. விஜயன்”

இதை வாசித்துவிட்டு காமிக்ஸ்ன் உள் நுழைந்தாலும் மனம் முதல் பக்கத்திலேயே நொண்டி நின்றது.

பதிப்பாளர்கள் அனைவருக்கும் இந்த முரணும் போராட்டமும் இருக்குமா என்று தெரியவில்லை (இருக்கும் என்று நம்புவோமாக!). வாசிக்கவேண்டும் என்று வாசகர்கள் கேட்பதைப் பதிப்பாளர் பதிப்பிப்பதா அல்லது வாசகர்கள் வாசிக்கவேண்டும் என்று பதிப்பாளர் நினைப்பதை பதிப்பிப்பதா? முதலாவது வரவு; இரண்டாவது செலவு. கேட்பதைக் கொடுத்தால் காசு. கேட்காததைக் கொடுத்தால் 'கடை விரித்தேன்; கொள்வாரில்லை' கதையாகப் போய்விடும் அபாயம்.

'கொஞ்சமே கொஞ்சமாய் வித்தியாசமான மார்க்கங்களில் திருப்பிப் பார்க்கும் முயற்சிகள்' என்று திரு. விஜயன் கூறியிருப்பதை வரவேற்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் அந்த முயற்சி தரும் உற்சாகம் நிரம்பவே muted ஆகத்தான் இருக்கிறது என்பதையும் பதிவிடவேண்டியிருக்கிறது.

'விடுதலையே உன் விலையென்ன?' எப்போது வெளிவந்தது என்று தெரியவில்லை. ஆனால் 2013ல் தொடங்கிய இந்த முயற்சி 2023 வரையிலும் கூட இன்னும் முயற்சியாகவே இருப்பது தான் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

காமிக்ஸ் எனும் புத்தக - கதை - எழுத்து - சித்திர வடிவம் குழந்தைகள்/சிறுவர்களுக்கானது என்பதை எப்போதோ தாண்டி வளர்ந்துவிட்டது. சாகச நாயகர்களும் சூப்பர் ஹீரோக்களும் புராண கதைகளும் கோலோச்சிக் கொண்டிருந்த காமிக்ஸ் உலகில் இன்று webtoonகளும் web comicsம் உள்நுழைந்து தனியொரு இடத்தை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. அன்றாட வாழ்வு முதல் ஆழமான அறிவியல் ஆராய்ச்சி வரை அனைத்தும் காமிக்ஸ் வடிவம் பெற்று உலாவரத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறை குழந்தைகளும் சிறுவர்களும் அலைபேசிக்குள் தங்கள் உலகங்களை அடைத்து அடங்கி விட, காமிக்ஸ் இப்போது இருப்பது முப்பது வயதிற்கு மேற்பட்ட adultsன் கைகளில். இதற்கு சாட்சியாக இருப்பது ஒவ்வொரு வருடமும் முத்து காமிக்ஸ் ஸ்டாலில் மருந்துக்குக் கூட கண்ணில் படாத குழந்தைகளும் சிறுவர்களும். அப்படியே அவர்கள் அங்கு வந்தாலும் அது அவர்களின் பெற்றோர்களுக்காக உடன் வந்து அவர்கள் ஆர்வமாய்த் தேடித் தேடி வாங்குவதை அசிரத்தையாய் பொறுமையில்லாமல் பார்த்து நிற்பவர்கள் மட்டுமே.

இந்த adults அனைவருமே அவர்களின் இளவயதில் காமிக்ஸ் வாசித்து வளர்ந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும். அந்த வாசிப்பின் nostalgic ஈர்ப்பு விசை தான் இன்றும் முத்து காமிக்ஸ்ன் பிரசுரிப்பு லிஸ்ட்டில் குவிந்து கிடைக்கும் டெக்ஸ் வில்லரும், இரும்புக்கை மாயாவியும், மந்திரவாதி மாண்ட்ரேக்கும், மாடஸ்டி பிளைசியும். இளவயது இனிமைகளை நினைவூட்டும் எவற்றிற்கும் நம் மனங்களில் எப்போதுமே இடம் இருப்பது இயல்பு தான். ஆனால் அந்த இயல்பு வாசகர்களிடையே முதிர்ந்த வாசிப்பு அனுபவங்களுக்கு இடம் தர மறுக்கிறதோ என்று எண்ண வைக்கிறது ஆசிரியர் விஜயனின் முன்னுரை.

'விடுதலையே உன் விலையென்ன?'வை வாங்க வைத்ததும் ஒரு nostalgia தான். அந்த காமிக்ஸைக் கையில் எடுத்துப் பார்த்ததும் ஒரு சில கணங்கள் மனம் ஏக்கத்தில் கனத்ததைத் தடுக்க முடியவில்லை. 1970-களின் இறுதியிலும் 1980-களின் தொடக்கத்திலும் கலைந்துபோன சோவியத் ரஷ்யாவின் படைப்புகளான 'Raduga Publishers' புத்தகங்கள் சரளமாகவும் தாராளமாகவும் கிடைக்கும். சோவியத் ரஷ்யாவின் ஆகச் சிறந்த படைப்புகள் – Lev Tolstoy, Maxim Gorky முதல் குழந்தைகள் கதைகள் வரை - சுத்தமான தெளிவான மொழிபெயர்ப்பில் (தமிழ், ஆங்கிலம்) அருமையான வடிவமைப்பில் கெட்டி அட்டையில் ( paperback தான் ஆனால் அதுவே கெட்டியாக இருக்கும்) முத்து முத்தான அச்சுக் கோர்ப்பில் ஒரிஜினல் படங்களுடன் ஐந்து ரூபாயிலிருந்துக் கிடைக்கும், 'சர்வோதய இலக்கிய பண்ணை'களிலும் 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்'களிலும்.

சோவியத் ரஷ்யா சிதறியதும் காணாமல் போனது Raduga Publishersம். இல்லாமல் போன அந்த Raduga Publishersசையும்  இனி கிடைக்காமல் போன அந்த சோவியத் புத்தகங்களையும் நினைவடுக்குகளின் இடுக்குகளில் இருந்து இழுத்துப் போட்டு விட்டது 'விடுதலையே உன் விலையென்ன?'

இவ்வளவும் எதற்காக என்ற கேள்வி எழுந்தால் அதற்கான விடையும் கூட ஒரு கேள்வி தான் - 'ஒரு பதிப்பாளரின் நிலைப்பாடு என்னவாக இருக்கவேண்டும்?'

'வாசகர்கள் கேட்பதை (விற்பனையாகி லாபம் தருவதை) பதிப்பிப்பது ஒரு பதிப்பாளரின் வேலை' என்பது ஒரு பாதி விடையாகவும், 'வாசகர்களின் வாசிப்பையும் வாசிப்பு அனுபவங்களையும் அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்த்திச் செல்வது (தேவையெனில் 'இழுத்து'ச் செல்வது) ஒரு பதிப்பாளரின் கடமை' என்பது மறு பாதி விடையாகவும் எடுத்துக்கொண்டாலும் கூட, இதைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு பதிப்பாளருக்கு எந்தக் கட்டாயமும் இல்லை.

'ரிஸ்க்கில்லாத கதைகள்' போடும் அளவோடு நிறுத்திக் கொள்ள ஆசிரியர் விஜயன் முத்து காமிக்ஸ் வாசகர்களின் காமிக்ஸ் தேர்வுகளால் நிர்ப்பந்திக்கப்படும் சூழல் வந்ததென்றால் அது வாசகர்களாகிய நமக்குத்தான் இழப்பே அன்றி அவருக்கல்ல. 2013ல் ஆரம்பித்த அவருடைய முயற்சியை இன்னும் முயற்சியாகவே நீட்டிக்கச் செய்திருப்பது மட்டுமல்லாது, அப்படி அவர் எடுக்கும் அந்த முயற்சிக்கு கிட்டத்தட்ட மன்னிப்பு கோரும் வகையில் ஒரு explanatory முன்னுரையை இன்னமும் எழுத வைத்திருப்பது வாசகர்களாகிய நாம் அவருக்கு இழைக்கும் அநீதி அன்றி வேறென்ன என்று தெரியவில்லை.

உங்களுக்குக் கொடுப்பதற்கு மண்டையில் கொட்டா? பிழைத்துப் போ மகனே…! என்ற கருத்தா? Neither of these, Sir. Would you accept heartfelt apologies and deepest gratitude in their stead?  


Write a comment ...

Write a comment ...