புனைவுகள் கட்டமைக்கும் திடநிஜங்கள்


சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அண்மையில் "parens patriae jurisdiction" என்ற ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு உத்தரவு/தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. உத்தரவின்/தீர்ப்பின் சாராம்சம் இதுதான்.

“It is right time to declare/confer juristic status to the “Mother Nature”. Therefore this Court by invoking “parens patriae jurisdiction” is hereby declaring the “Mother Nature” as a “Living Being” having legal entity/legal person/juristic person/juridical person/moral person/artificial person having the status of a legal person, with all corresponding rights, duties and liabilities of a living person, in order to preserve and conserve them.”

“They are also accorded the rights akin to fundamental rights/legal rights/constitutional rights for their survival, safety, sustenance and resurgence in order to maintain its status and also to promote their health and wellbeing. The State Government and the Central Government are directed to protect the “Mother Nature” and take appropriate steps to protect Mother Nature in all possible ways”.

ஒரு நிமிடம் இதை இப்படியே விட்டுவிட்டு ஒரு சிறிய கதை கேளுங்கள்.

Yuval Noah Harari தனது ‘Sapiens – A Brief History of Humankind’ புத்தகத்தின் முதல் பாகத்தில், Homo sapiens மனித இனம் Homo neanderthalensis, Homo denisova, Homo erectus, Homo luzonensis, Homo floresiensis போன்ற மற்ற மனித இனங்களிடமிருந்து மாறுபட்டு, அவர்கள் எல்லோரையும் மிஞ்சி, தனிப்பெரும் இனமாக உருவாகிய காரணங்களில் மிக முக்கியமானதாக, புனைவுகளை புனைவதிலும், அந்தப் புனைவுகளைத் தான் மட்டுமின்றி, பிறரையும் நம்பச் செய்வதிலும் கொண்டிருந்த/வளர்த்துக்கொண்ட திறமையைக் கூறுகிறார்.

Yuval Noah Harari

அவர் சொல்லும் இந்த வாக்கியத்தைப் பாருங்கள்.

“There are no gods in the universe, no nations, no money, no human rights, no laws and no justice outside the common imagination of human beings”.

நம்முடைய உணர்வுகளையும், நம்பிக்கைகளையும், prejudiceகளையும் களைந்து விட்டு யோசித்தால் இந்த வார்த்தைகளின் வாள்வீச்சு நம் இருத்தலையே வேரறுத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.

Homo sapiens இனத்தின் புனைவுத் திறனுக்கு எடுத்துக்காட்டாக அவர் கையாடியிருப்பது Peugeot கார் கம்பெனியை. Armand Peugeot, ஸ்பிரிங்குகளும், ரம்பங்களும், சைக்கிள்களும் உற்பத்தி செய்யும் ஒரு கடையை அவருடைய பெற்றோருக்குப் பின் எடுத்து நடத்துகிறார். ஆனால் அவருக்கு கார்கள் உற்பத்தி செய்யவேண்டும் என்று ஆசை. ஆகவே ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறார் ‘Peugeot SA’ (கம்பெனியின் இயற்பெயர்) என்று அவருடைய பெயரிலேயே. கம்பெனியின் பெயர் அவருடையதாக இருந்தாலும் கம்பெனிக்கும் அவருக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது.

இதற்கு முன்பு வரை ஒரு மனிதனோ, அல்லது ஒரு கடையிலோ தயாரித்த பொருளில் ஏதாவது பிரச்னை என்றாலோ, அல்லது அது உடைந்து போனாலோ, அதைத் தயாரித்தவனோ அல்லது அதைத் தயாரித்த கடையின் உரிமையாளனோ தான் அதற்கு பொறுப்பாவான். அந்தப் பொருளால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு அதை வாங்கியவன் அதை தயாரித்தவன் மீது நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர முடியும். அப்படி அவன் வழக்குத் தொடரும் பட்சத்தில், உற்பத்தியாளர் அவனிடம் இருக்கும் சொத்துக்களை விற்றேனும் (குழந்தைகள் உட்பட) அந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும்.

ஆனால் Armand Peugeot தொடங்கிய கம்பெனியின் தயாரிப்பான Peugeot மோட்டார் வாகனத்தால் அதை வாங்கியவனுக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு Armand Peugeot எனும் மனிதர் எந்தப் பொறுப்பும் ஏற்கத் தேவையில்லை, ‘Peugeot’ கம்பெனியின்  உரிமையாளர் அவராகவே இருந்த போதிலும். ‘Peugeot’ கம்பெனிக்கென்று இருக்கும் வருமானத்தில் இருந்தோ அல்லது ‘Peugeot’ கம்பெனி அதற்கென்றுத் தனியாக (ஒரு தனி மனிதனைப் போல்) வாங்கியிருக்கும் சொத்துக்களை விற்றோ அந்த நஷ்டத்தை ஈடு செய்யலாம்.

இது எப்படி சாத்தியமாயிற்று?

Armand Peugeot என்ற ஒரு மனிதர் எப்படி ‘Peugeot’ என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கினார்? வரலாறு நெடுகிலும் மதகுருமார்களும் மந்திரவாதிகளும் எப்படிக் கடவுளரையும் அரக்கர்களையும் உருவாக்கி வந்துள்ளனரோ, ஆயிரக்கணக்கான பிரெஞ்சுப் பாதிரியார்கள் எப்படி உள்ளூர் தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமைதோறும் இயேசுபிரானின் உடலை இன்னும் 'உருவாக்கி'க் கொண்டிருந்தனரோ, அதே வழியில் தான் Armand Peugeot தன் நிறுவனத்தை உருவாக்கினார். மக்களிடம் கதைகளைக் கூறி, அவர்கள் அதை நம்பும்படி செய்வதைச் சுற்றியே அவை யாவும் அமைந்திருந்தன. பிரெஞ்சுப் பாதிரியார்களின் விஷயத்தில், இயேசுபிரானின் வாழ்க்கையையும் மரணத்தையும் பற்றிக் கத்தோலிக்க தேவாலயங்கள் கூறி வந்த கதைதான் முக்கியமானது. புனித ஆடைகளை அணிந்த ஒரு கத்தோலிக்க பாதிரியார், சரியான கணத்தில் சரியான வார்த்தைகளைக் கூறினால், சாதாரண ரொட்டியும் திராட்சை ரசமும் கடவுளின் சதையாகவும் ரத்தமாகவும் மாறிவிடும் என்று அக்கதை கூறுகிறது. அப்பாதிரியார், "Hoc Est Corpus Meum" (லத்தீன் மொழியில் "இது என் உடல்!" என்று பொருள்) என்று உரத்தக் குரலில் கூறியவுடன், அது மாயாஜாலமாக இயேசுவின் சதையாக 'மாறிவிடும்'. பாதிரியார் முறையாகவும் துல்லியமாகவும் எல்லாச் சடங்குகளையும் கடைபிடித்திருந்ததைப் பார்த்த, கடவுள் நம்பிக்கை கொண்ட கோடிக்கணக்கான பிரெஞ்சுக் கத்தோலிக்கர்கள், அந்தப் புனித ரொட்டியிலும் திராட்சை ரசத்திலும் கடவுள் உண்மையிலேயே இருந்ததாக நம்பினர்.  

Peugeot நிறுவனத்தின் விஷயத்தில், பிரெஞ்சு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டச் சட்ட விதிதான் முக்கியக் கதையாக இருந்தது. பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்களின் படி, முறையாகச் சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞர், முறையான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் அனைத்தையும் ஒழுங்காகக் கடைப்பிடித்து, தேவையான மாய வசியங்களையும் உறுதிமொழியையும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு தாளின் மீது எழுதி, அந்த ஆவணத்தின் கீழே தன்னுடைய அழகான கையொப்பத்தைப் பதிவு செய்தால், மாயாஜாலமாக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுவிடுகிறது.[1]

([1] சேப்பியன்ஸ் - மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு தமிழில்: நாகலட்சுமி சண்முகம்)

Limited Liability Company என்ற இப்படிப்பட்ட ஒன்றை உருவாக்க மனித இனம் ஏற்படுத்திய புனைவுகளை விட பல்லாயிரம் மடங்கு சக்தி மிகுந்த புனைவுகளால் ஆனது மனித குலத்தின் சட்ட வரைமுறைகள் என்ற புரிதல் இந்த எண்ண ஓட்டத்தின் logicalஆன நீட்சி.

புனையப்பட்ட ஒரு கருத்து 'நீதி' என்ற ஒன்றிற்காக புனையப்பட்ட இன்னொரு கருத்து 'சட்டம்' என்பதை 'இயற்கை' எனும் நிதர்சனமான திடத்தின் மீது மனித குலம் சார்த்தப் பார்ப்பதன் விளைவு தான் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவு/தீர்ப்பு.

பரிணாம வளர்ச்சியின் ஒரு எட்டாக புனைவுகளை உருவாக்கி, அவற்றை வெற்றிகரமாகப் பிறரையும் நம்பச்செய்து தன் இனத்தை வளர்த்த மனித இனம், இன்று வாழ்வியலின் திடங்களுடன் தனக்கிருந்தத் தொடர்பை முற்றிலும் அறுத்துக்கொண்டு நிற்பதன் வெளிப்பாடாகவேப் பார்க்கத் தூண்டுகிறது இந்த judgement.

பூமியுடனும் பூமியின் வளங்களுடனும் இயைந்து வாழும் திறமையை, ஆசையை, கடமையைத் தொலைத்துவிட்டு, 'இயற்கை'யை 'மனிதன்' ஆக்கிப் பார்க்கும், பாதுகாக்கும் புள்ளியில் வந்து நிற்கிறோம்.

'சட்டத்தின் முன் எல்லா மனிதரும் சமம் என்பதே நீதிக் கோட்பாடு' என்று, 'சட்டம்' என்ற புனைவையும், ‘நீதி’ என்ற புனைவையும் ஒன்றாக்கி, ஒரு மாபெரும் புனைவாய் புனைந்து திரிகிறோம். இந்த 'சட்டம்' எனும் புனைவின் ஓட்டைகள் வழியாகவும் இடுக்குகள் வழியாகவும் 'நீதி' எனும் புனைவு அன்றாடம் ஒழுகியோடிக் கொண்டிருப்பதையும், அந்த ஒழுகலில் 'இயற்கை' எனும் 'மனிதனின்' உரிமைகள் சத்தமின்றி வழித்தெடுக்கப்படும் என்ற வலிமிகுந்த நிதர்சனத்தையும் 'நம்பிக்கை' எனும் புனைவால் போர்த்திக் கொண்டிருக்கிறோம்.

கண்டங்கள், எல்லைக் கோடுகள், பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்கரேகை எனும் மனிதனின் அத்தனை புனைவுகளுக்குள்ளும் அடங்காமல், 'இயற்கை' எனும் நிஜம் அண்டசராசரத்தின் விதிகளின்படி இயங்கிக்கொண்டும், அழிந்துகொண்டும், அழித்துக்கொண்டும் இருக்கிறது.

தன் இனத்தின் அழிவிற்குத் தானே காரணம் என்பதை மறைக்க, மறுக்க புதியதோர் புனைவை கட்டமைத்துக் கொண்டிருக்கிறதா மானிடம்?


Write a comment ...